மதுரை மேலூரில் சமத்துவ மீன்பிடித் திருவிழா.. கள்ளந்திரி கண்மாயில் நாட்டு மீன்களை பிடிக்க போட்டிப்போட்ட மக்கள்

image 339

மேலூர் , மே 16: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கள்ளந்திரியில் பாரம்பரியமிக்க சமத்துவ மீன்பிடித் திருவிழா ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பங்கேற்புடன் வெள்ளிக்கிழமை உற்சாகமாக நடைபெற்றது. சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து கண்மாய்க்குள் இறங்கி, போட்டிப்போட்டு நாட்டு மீன்களைப் பிடித்த காட்சி அப்பகுதியில் நெகிழ்ச்சியான திருவிழாச் சூழலை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடப்பு ஆண்டிற்கான முதல் போக நெல் அறுவடைப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து, கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் படிப்படியாக வற்றத் தொடங்கியுள்ளது. நீர்மட்டம் குறைந்து வரும் இந்நாட்களில், மதுரை கிராமப்புறங்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரம்பரிய சமத்துவ மீன்பிடித் திருவிழாக்கள் தற்போது மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, மேலூர் அருகே கள்ளந்திரியில் அமைந்துள்ள ஐந்து கோவில் முத்தன் சாமி கோவிலுக்குப் பாத்தியப்பட்ட பெரிய நாகினி கண்மாயில் இந்த ஆண்டிற்கான பாரம்பரிய மீன்பிடித் திருவிழா இன்று காலை நடத்தப்பட்டது.

Also read : நெல்லையில் ரூ.32 கோடி சைபர் மோசடி.. 84 POCSO வழக்குகள் அதிர்ச்சி – எஸ்பி பிரசன்ன குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

கள்ளந்திரி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஐந்து கிராம மக்கள் இணைந்து நடத்தும் இந்த மீன்பிடித் திருவிழா, இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சமூக நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் முதல் போக அறுவடை முடிந்தவுடன் இந்த விழாவை நடத்துவது இப்பகுதி மக்களின் நீண்டகால வழக்கமாகும். அதன்படி, இந்த ஆண்டும் அதே பாரம்பரியத் தொடர்ச்சியைப் பேணிக் காக்கும் பொருட்டு, மீன்பிடித் திருவிழாவை நடத்த கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி முறைப்படி தேதியைத் தீர்மானித்தனர்.

திருவிழா நடைபெறும் நாள் பல நாட்களுக்கு முன்பே கிராம நிர்வாகத்தினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதன் காரணமாக கள்ளந்திரி, மாங்குளம், பொய்கை கரைப்பட்டி, அ.வலையபட்டி, அ.வல்லாளபட்டி, அரிட்டாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருந்தனர். மேலும், மதுரை மாவட்ட எல்லைகளைத் தாண்டி, அண்டை மாவட்டங்களான திண்டுக்கல் மற்றும் சிவகங்கையில் இருந்தும் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாலை முதலே கண்மாய் கரையை நோக்கி வரத் தொடங்கினர்.

கண்மாய் கரையில் திரண்டிருந்த பொதுமக்கள், தங்களின் பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களான ஊத்தா, அரிவலை, கச்சா வலை உள்ளிட்டவற்றைத் கைகளில் ஏந்தியவாறு மிகுந்த உற்சாகத்துடன் குழுமியிருந்தனர். விடியற்காலையிலேயே ஒட்டுமொத்த கண்மாய் பகுதியும் மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மேல கள்ளந்திரி, கீழ கள்ளந்திரி, அம்மச்சியாபுரம், தொப்புளான்பட்டி மற்றும் ஆமந்தூர்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த அம்பலகாரர்கள் (கிராமத் தலைவர்கள்) கண்மாயின் முக்கிய மடைப்பகுதிக்கு வருகை தந்தனர். அங்கு, நடப்பாண்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்றும், கிராம மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி வளமாக வாழ வேண்டும் என்றும் வேண்டி பாரம்பரிய வழிபாடுகளை மேற்கொண்டனர். பின்னர், திருவிழா தொடங்குவதற்கான சமிஞ்கையாக அவர்கள் முறைப்படி “வெள்ளை வீசினர்”.

அம்பலகாரர்கள் வெள்ளை வீசிய அடுத்த கணமே, கரையில் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஆரவாரத்துடன் கண்மாய்க்குள் இறங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த வலைகள் மற்றும் ஊத்தா உபகரணங்களைப் பயன்படுத்திச் சேற்று நீரில் விறுவிறுப்பாக மீன்களைப் பிடிக்கத் தொடங்கினர். ஆண்கள், பெண்கள், சிறியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவரும் போட்டிப்போட்டு மீன் வேட்டையில் ஈடுபட்டதால் கண்மாய் முழுதும் பரப்பரப்பான சூழல் நிலவியது.

இந்த மீன்பிடித் திருவிழாவில் சிலேப்பி, கட்லா, கெளுத்தி, அயிரை, விரால், பாப்லட் உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மீன்கள் அதிக அளவில் பொதுமக்களின் வலைகளில் சிக்கின. ஒருசிலர் சிறிய வலைகளை வீசி மீன்களை அள்ளிய நிலையில், இளைஞர்கள் பலர் வெறும் கைகளாலேயே சேற்றுக்குள் துள்ளிய நாட்டு மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களை வீடுகளுக்கு எடுத்துச் சென்று, தங்களது உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார்களுடன் பகிர்ந்து, சமைத்து உண்பது இப்பகுதி மக்களின் நீண்டகால சமூக மரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தாருடன் ஒன்றாக அமர்ந்து இந்த நாட்டு மீன் குழம்பை உண்பது, கிராம மக்களிடையேயான சமூக ஒற்றுமையையும், உறவுப் பிணைப்பையும் மேலும் வலுப்படுத்துவதாக முதியவர்கள் தெரிவிக்கின்றனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1043

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »