சிறப்பு செய்தி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நிறுவனரும்,முன்னாள் தலைவருமான லலித் மோடி,‘ஏஎன்ஐ’ நிறுவனத்திற்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில்,நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கொலை மிரட்டல்,லண்டனில் தனது மகன் கடத்தப்பட்ட விவகாரம் மற்றும் ஐபிஎல் தொடரைச் சுற்றியிருந்த பல்வேறு மர்மங்கள் குறித்துப் பேசி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்து தான் முற்றிலுமாக விலகியதற்கான பின்னணியில் இருந்த அதிர்ச்சித் தகவல்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

$4 பில்லியன் சூதாட்டச் சந்தை: ஸ்பாட் பிக்ஸிங் ரகசியம்
ஐபிஎல் தொடரின் சூதாட்டப் பின்னணி குறித்துப் பேசிய லலித் மோடி,“நான் ஐபிஎல் நடத்திய ஆரம்ப காலகட்டங்களில்,ஒரு போட்டிக்கு சுமார் இரண்டு பில்லியன் டாலர் அளவிற்குச் சட்டவிரோத சூதாட்டம் நடைபெற்றது.தற்போது அது ஒரு போட்டிக்கு நான்கு பில்லியன் டாலராக உயர்ந்து,கற்பனைக்கு எட்டாத பிரம்மாண்ட சந்தையாக மாறியுள்ளது” என்றார்.
மேலும்,தற்போதைய சூழலில் யாரும் ஒட்டுமொத்தப் போட்டியையும் முன்கூட்டியே நிர்ணயிப்பது (Match Fixing) இல்லை என்று குறிப்பிட்ட அவர்,அதற்கு மாறாக ‘ஸ்பாட் பிக்ஸிங்’ (Spot Fixing) எனப்படும் ஒரு குறிப்பிட்ட ஓவர் அல்லது ஒரு குறிப்பிட்ட பந்தை மட்டுமே பிக்ஸ் செய்கிறார்கள் என்று கூறினார்.மைதானத்தில் இருக்கும் வீரர்கள் தங்களின் கைக்குட்டையை வெளியே எடுப்பது,தலையை ஒருபுறமாகத் தேய்ப்பது போன்ற மிகச் சாதாரணச் செயல்களின் மூலமாகவே புக் மேக்கர்களுக்கு (Bookmakers) சிக்னல் கொடுக்கிறார்கள்.இதனைத் தான் தீவிரமாகக் கண்காணித்து,அத்தகைய நபர்களை மைதானத்தை விட்டே துரத்தியதால் மாபியா கும்பலுக்கு தன் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது என்று அவர் விவரித்தார்.
தாவூத் இப்ராஹிம் மிரட்டலும்,பயத்தில் கழிந்த சிறுநீரும்
நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கும்பலிடமிருந்து வந்த தொடர்ச்சியான அச்சுறுத்தல்களே தான் கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்து நிரந்தரமாக விலகியதற்கான முக்கியக் காரணம் என்று லலித் மோடி ஒப்புக்கொண்டுள்ளார்.மாபியாக்களின் கோடிக்கணக்கான டாலர் ஆஃபர்களைத் தான் நிராகரித்ததால்,தாவூத் இப்ராஹிம் தன்னைத் தீர்த்துக்கட்ட மூன்று முறை திட்டமிட்டதாக அவர் தெரிவித்தார்.
Also : பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை: புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாக அறிவிப்பு ரஜினியிடம் மன்னிப்பு
இதுகுறித்து அவர் பேசுகையில்,“மும்பை போலீசார் எனக்குத் திடீரென ‘ஜி’ பிரிவு பாதுகாப்பு கொடுத்தனர்.மும்பையில் என் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்தது.ஜோகன்னஸ்பர்க்கில் என்னைக் கொல்ல ஸ்கெட்ச் போடப்பட்டது.பின்னர் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நான் இருந்தபோது,அந்நாட்டு அரசுதான் என்னைக் காப்பாற்றியது.மாஞ்சனி கிரோவிலும் எனக்கு எதிராகக் கொலை முயற்சி நடந்தது.
குறிப்பாக,2012ஆம் ஆண்டு லண்டனில் இருந்தபோது அதிகாலை 3:30 மணிக்கு ஒரு இடைத்தரகர் என்னைத் தொடர்புகொண்டு,பாபா என்ற செல்வாக்கு மிக்க நபரின் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்கு வருமாறு வற்புறுத்தினார்.நான் அங்குச் சென்றதும்,ஒரு செயற்கைக்கோள் தொலைபேசியை (Satellite Phone) என்னிடம் கொடுத்து,தாவூத் இப்ராஹிம் போனில் காத்திருக்கிறார் என்றார்.அப்போது ஏற்பட்ட கடுமையான பயத்தின் காரணமாக,நான் என் பேண்டிலேயே சிறுநீர் கழித்துவிட்டேன்.போனில் பேசிய தாவூத்,‘இனி உன் வேலை எல்லாம் முடிந்துவிட்டது’ என்று கூறிவிட்டுப் போனை வைத்துவிட்டார்” என்று அந்த நடுக்கமூட்டும் சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
லண்டனில் மகன் கடத்தல்: பாபா அவின் பின்னணி
தாவூத் கும்பலின் அச்சுறுத்தல் தன் குடும்பத்தினரையும் விட்டுவைக்கவில்லை என்று குறிப்பிட்ட லலித் மோடி,லண்டனின் புகழ்பெற்ற ஸ்லோன் ஸ்ட்ரீட்டில் (Sloan Street) வைத்து தனது மகனை ‘பாபா அவின்’ என்பவன் கடத்தியதாகக் கூறி அதிர வைத்தார்.தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் தொடர் நடந்தபோது,சூதாட்ட மாபியாக்கள் நினைத்தபடி பந்தயம் கட்ட முடியாததால் ஏற்பட்ட பெரும் பண இழப்பைத் தன்னிடம் கேட்டு இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சசி தரூர் சர்ச்சை: கேரளா அணியின் பின்னணி
ஐபிஎல் தொடரில் சொந்தமாக மைதானமே இல்லாத கேரளா (கொச்சி) அணிக்குத் தான் எவ்வாறு அனுமதி அளித்தேன் என்று யாரும் என்னிடம் கேள்வி எழுப்பவில்லை என்று சாடிய லலித் மோடி,“கேரளா அணியை அனுமதிக்கக் காரணமே சசி தரூர்தான்.அவரின் பேச்சிலேயே நான் மயங்கிவிட்டேன்” என்றார்.
அன்றைய காலகட்டத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது,சுனந்தா புஷ்கருக்கு அந்த அணியில் முறைகேடாக 25 சதவீத இலவச பங்குகள் (Free Equity) வழங்கப்பட்டதை எதிர்த்ததால் தனக்குக் கடுமையான அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகவும்,சசி தரூர் தன்னை போனில் மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த சசி தரூர் – சுனந்தா புஷ்கர் எபிசோடிற்குப் பிறகுதான்,ஒட்டுமொத்தப் பழிவாங்கல்களும் தன் மீது திருப்பப்பட்டதாக அவர் நேர்காணலில் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.
திரைப்படமாகும் வாழ்க்கை வரலாறு
தன் வாழ்நாளில் எதற்கும் வருத்தப்பட்டதில்லை என்று கூறும் லலித் மோடி,தற்போது லண்டனில் முழுநேர வசிப்பிட உரிமையுடன் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தார்.மேலும்,தனது ஒட்டுமொத்த வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக அல்லது நெட்ஃப்ளிக்ஸ் பாணியிலான ஒரு வெப் சீரிஸாக எடுக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும்,அதில் தன் பாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் ஒருமுறை தன்னை அணுகியதாகவும் லலித் மோடி அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்








