சென்னை , ஏப்ரல் 16 : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து இசையமைப்பாளரும் ஊடகவியலாளருமான ஜேம்ஸ் வசந்தன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவர் பேசியுள்ள கருத்துகள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. விஜயின் அரசியல் அனுபவம், அவரது சினிமா பின்னணி மற்றும் வாக்காளர்களின் கடமை ஆகியவற்றை மையப்படுத்தி பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
தமிழகத்தையும் தமிழ் சமூகத்தையும் இந்த தலைமுறையையும் கெடுக்க வந்த ஒரு கருவியாகத்தான் தமிழக வெற்றிக் கழகத்தையும் அதன் தலைவர் விஜயையும் தான் பார்ப்பதாக ஜேம்ஸ் வசந்தன் நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அதிரடி கருத்து விஜயின் அரசியல் வருகையையே நேரடியாக சவாலுக்கு உள்ளாக்குவது போல் அமைந்துள்ளதுடன், இதுவரை தமிழக அரசியல் வரலாறு இவ்வளவு பெரிய குழப்பத்தையும் அவமானத்தையும் சந்தித்ததில்லை என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
விஜய் பிரச்சாரக் குழப்பம்: ஜெயலலிதா காலத்து மேலாண்மை பாடம் தேவைப்படுவது ஏன்?
திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து சாதித்த முந்தைய தலைவர்களுடன் விஜயை ஒப்பிட முடியாது என்பதற்கான காரணங்களையும் அவர் விளக்கியுள்ளார். சினிமா பின்னணியில் இருந்து அரசியலுக்கு வந்த முன்னாள் தலைவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் அரசியல் புரிதலோ அல்லது நீண்ட கால அரசியல் பின்புலமோ இருந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு குடும்பத்தில் அரசியல் சார்ந்த உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால் மட்டுமே அங்குள்ளவர்களுக்கு இயல்பான அரசியல் புரிதல் உருவாகும் என்றும், ஆனால் விஜய் வீட்டில் எப்போதும் சினிமா மட்டுமே பிரதானமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இத்தகைய சூழலில் முறையான அரசியல் அறிவோ அல்லது கள அனுபவமோ இல்லாமல் நேரடியாக முழுநேர அரசியலுக்கு வருவது மிகப்பெரிய தவறு என்பது அவரது வாதமாக உள்ளது.
விஜயின் முதலமைச்சர் ஆசையை கடுமையாக விமர்சித்துள்ள ஜேம்ஸ் வசந்தன், படப்பிடிப்புத் தளங்களில் கேரவனுக்குள் கூட்டுப்புழுவாக வாழ்ந்த ஒருவர் திடீரென தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என ஆசைப்படுவது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம், ஆனால் வாக்காளர்கள்தான் இதைப்பற்றி தீர்க்கமாக சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். படப்பிடிப்புகளை முடித்த கையோடு நேரடியாக வந்து முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்று நினைப்பது ஒரு சரியான அரசியல் அணுகுமுறை அல்ல என்றும் அவர் சாடியுள்ளார்.
விஜய்க்கு பின்னால் இருக்கும் ஆதரவு என்பது வெறும் சினிமா கவர்ச்சியால் உருவான ரசிகர் கூட்டமே தவிர, அது கொள்கை சார்ந்த அரசியல் ஆதரவு கிடையாது என்றும் ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்துள்ளார். தமிழக அரசியலில் உண்மையானதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அதற்குத் தகுந்த அனுபவமும் தெளிவான கொள்கைகளும் மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
வாக்காளர்களுக்கான எச்சரிக்கையாக தனது கருத்தின் இறுதியில் பேசிய அவர், தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைப்பது சரியான எண்ணம்தான் என்றாலும், அந்த மாற்றத்தை யாரால் உண்மையாகக் கொண்டு வர முடியும் என்பதை மக்கள் சிந்தித்துத் தான் வாக்களிக்க வேண்டும் என்றார். குறைந்தது சில ஆண்டுகளாவது அரசியல் களத்தில் நின்று வேலை செய்து அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், அதை விடுத்து உடனடியாக ஆட்சிக் கட்டிலைக் கைப்பற்ற நினைப்பது தவறான எதிர்பார்ப்பு என்றும் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.





