கும்மிடிப்பூண்டி ,ஜூன் 15 : கும்மிடிப்பூண்டி அருகே மூன்று வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் ,கூட்டுப் பாலியல் வன்கொடுமை எதுவும் நடக்கவில்லை என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஊடகப் பயனர்களுக்குக் காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் அருகே வசித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதியரின் மூன்று வயது பெண் குழந்தை ,நேற்று உடல்நலக்குறைவு மற்றும் காயங்களுடன் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த அந்த பச்சிலம் குழந்தை ,சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து ,அது கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் நிகழ்ந்த மரணம் என்று பல்வேறு தரப்பிலும் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்தச் சூழலில் ,இச்சம்பவம் குறித்துத் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தரப்பில் தற்பொழுது மிக முக்கியமான விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது. உயிரிழந்த மூன்று வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்பதைத் தங்களது முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மருத்துவ அறிக்கைகள் மற்றும் முதற்கட்ட விசாரணைகளின் விவரங்களைச் சுட்டிக்காட்டி இந்த விளக்கத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
also : அதிமுகவில் ‘ஈபிஎஸ் மகன்’ விவகாரம் தீவிரம்: சி.வி.சண்முகம் – பசுபதி மோதலால் அதிமுகவில் பரபரப்பு
மேலும் ,இந்த விவகாரம் தொடர்பாகப் பொதுமக்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் உண்மைக்கு மாறான மற்றும் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இத்தகைய வதந்திகள் தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதோடு ,வழக்கின் உண்மையான போக்கை திசைதிருப்பும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் ,குழந்தையின் மரணத்திற்கான சரியான காரணம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் மகளிர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கின் தொடர்ச்சியாக ,பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவரைக் காவல்துறையினர் தற்பொழுது கைது செய்து தங்களது காவலில் எடுத்துள்ளனர். அவரிடம் குழந்தையின் மரணம் குறித்தும் ,அதற்கு முந்தைய நிகழ்வுகள் குறித்தும் சிப்காட் மகளிர் காவல் துறையினர் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் முழுமையான உண்மைகளைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காவல்துறையினர் காத்திருக்கின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ,சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.







