
Delhi , May 21: இந்திய அரசியலில் சாதி, மதம், மொழி, தொழிலாளர், விவசாயி, மாணவர் இயக்கங்கள் என பல்வேறு சமூக மற்றும் அரசியல் அடையாளங்கள் காலந்தோறும் உருவாகி வந்துள்ளன. ஆனால் தற்போது சமூக வலைதளங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய இணைய தலைமுறை, தங்களின் ஏமாற்றங்களையும் அரசியல் அதிருப்தியையும் நையாண்டி மற்றும் மீம்கள் வழியாக வெளிப்படுத்தும் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் சமீப நாட்களாக இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள பெயர் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” அல்லது “சிஜேபி”.
உச்சநீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கின் போது பயன்படுத்தப்பட்ட சில கருத்துகளே இந்த இணைய இயக்கத்தின் தொடக்கமாக அமைந்தது. போலி பட்டய வழக்கு தொடர்பான விசாரணையின் போது, வேலை இல்லாத இளைஞர்கள், போலி பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்டிஐ ஆர்வலர்கள் குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் பயன்படுத்தியதாக கூறப்படும் “காக்ரோச்சஸ்” மற்றும் “பாரசைட்ஸ்” என்ற ஆங்கில வார்த்தைகள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினையை உருவாக்கின. பின்னர் அந்த கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டாலும், அதற்குள் இணையத்தில் எதிர்ப்பின் அலை பரவத் தொடங்கியிருந்தது.
Also read : சிவகங்கை : முதல்வர் குறித்து அவதூறு பேச்சு? பேருந்து நடத்துனர் மீது TVK அதிரடி மனு!
பொதுவாக இத்தகைய கருத்துகளுக்கு எதிராக தெருக்களில் போராட்டம் நடைபெறும். ஆனால் இந்த தலைமுறை தங்களது எதிர்ப்பை டிஜிட்டல் வடிவத்தில் வெளிப்படுத்தியது. ஹாஷ்டேக்குகள், மீம்கள் மற்றும் நையாண்டி பதிவுகள் சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வைரலானது. “மேயின் பி காக்ரோச்”, “காக்ரோச் ரெவல்யூஷன்” போன்ற ஹாஷ்டேக்குகள் இந்திய சமூக வலைதளங்களில் முன்னணியில் டிரெண்டானது.
“நாங்கள் கரப்பான் பூச்சிகள் தான்; எவ்வளவு மிதித்தாலும் மீண்டும் எழுவோம்” என்ற வாசகம் பல இளைஞர்களின் கோஷமாக மாறியது. வேலைவாய்ப்பு இல்லாமை, தேர்வு முறைகேடுகள், அரசியல் அமைப்பின் மீதான நம்பிக்கையின்மை போன்ற பிரச்சினைகளை நேரடியாக வெளிப்படுத்த முடியாத இளைஞர்கள், மீம்களையே அரசியல் கருவியாக மாற்றியுள்ளனர் என்பதே இந்த இயக்கம் குறித்து முன்வைக்கப்படும் முக்கியமான கருத்து.
இந்த இயக்கத்தின் பின்னணியில் 30 வயதான அபிஜித் தீப்கே என்ற இளைஞர் இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பப்ளிக் ரிலேஷன்ஸ் படித்த அவர், டிஜிட்டல் அரசியல் தொடர்பான பணிகளில் அனுபவம் பெற்றவர் ,. 2020 டெல்லி தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சிக்காக சமூக வலைதள தன்னார்வலராக பணியாற்றியவர்.
மே 16ஆம் தேதி வெளியிட்ட சமூக வலைதள பதிவில் “கரப்பான் பூச்சிகளுக்கான களம் தயாராகிவிட்டது” என்று அபிஜித் தீப்கே குறிப்பிட்டிருந்தார். அதன்பின் சில நாட்களிலேயே இந்த இயக்கம் மிக வேகமாக பரவியது. தொடங்கிய 72 மணி நேரத்திலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இணையத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஆயிரக்கணக்கான மீம் பக்கங்கள், டெலிகிராம் குழுக்கள், டிஸ்கார்ட் சர்வர்கள் மற்றும் யூடியூப் விவாதங்கள் மூலம் இந்த இயக்கம் இணையத்தில் தொடர்ந்து பேசுபொருளாக மாறியுள்ளது .
சிஜேபி உண்மையான அரசியல் கட்சியா அல்லது வெறும் டிஜிட்டல் நையாண்டி இயக்கமா என்பது தற்போது அரசியல் ஆய்வாளர்களிடையே விவாதமாகியுள்ளது. குறிப்பாக அதன் உறுப்பினர் சேர்க்கை விதிகள் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தன. வேலை இல்லாதவராக இருக்க வேண்டும், குறைந்தது 11 மணி நேரம் ஆன்லைனில் செலவிட வேண்டும், உடல் ரீதியாக சோம்பேறியாக இருந்தாலும் சிந்தனையில் புரட்சியாளராக இருக்க வேண்டும், எல்லாவற்றையும் நையாண்டி செய்யத் தெரிந்திருக்க வேண்டும் போன்ற விதிகள் நகைச்சுவையாக அந்த X பக்கத்தில் பகிரப்பட்டன.
ஆனால் இவை வெறும் இணைய நகைச்சுவையாக மட்டும் பார்க்கப்படவில்லை. அந்த நகைச்சுவையின் பின்னால் இருக்கும் இளைஞர்களின் மன அழுத்தம் மற்றும் விரக்தியே முக்கியம் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக வேலைவாய்ப்பு பற்றாக்குறை, தேர்வு முறைகேடுகள், அரசியல் கட்சிகளின் மீதான ஏமாற்றம், கார்ப்பரேட் ஆதிக்கம் போன்ற பிரச்சினைகள் இந்த இணைய தலைமுறையின் அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சிஜேபியின் “தேர்தல் அறிக்கை” என பரவியுள்ள சில கோரிக்கைகளும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு அரசியல் பதவி வழங்கக்கூடாது, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படுவது ஜனநாயக குற்றமாக கருதப்பட வேண்டும், பெண்களுக்கு 55 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த இயக்கம் குறித்து சில முக்கிய அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா, “இந்த ஆன்டி நேஷனல் கூட்டணியில் நானும் சேர தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் “பாஜக vs சிஜேபி” என்று குறிப்பிட்டிருந்ததும் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டது.
அதேநேரத்தில் இந்த இயக்கம் குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன. இது ஆம் ஆத்மி கட்சியின் மறைமுக டிஜிட்டல் பிரச்சாரமாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு பதிலடியாக “நேஷனல் பாராசைட் பிரண்ட்” என்ற மற்றொரு நையாண்டி இயக்கமும் உருவாகியுள்ளது. தற்போது “காக்ரோச் vs பாராசைட்” மீம் போர் சமூக வலைதளங்களில் தொடர்கிறது.
இந்நிலையில், சிஜேபி பீகாரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது நடந்தால், இணைய நகைச்சுவையாக தொடங்கிய இந்த இயக்கம் தேர்தல் அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கும் சூழல் உருவாகலாம்.
எனினும் சிஜேபியின் உண்மையான வலிமை அதன் நகைச்சுவையில் இல்லை; அதன் பின்னால் இருக்கும் இளைஞர்களின் விரக்தியில்தான் இருக்கிறது என்பதே பல அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. இணையத்தில் உருவான இந்த புதிய அரசியல் மொழி தற்காலிக ட்ரெண்டாக மறைந்துவிடுமா அல்லது இந்திய அரசியலில் புதிய டிஜிட்டல் கலாச்சாரத்தை உருவாக்குமா என்பது வரும் காலங்களில் தான் தெளிவாகும்.












