சென்னை, ஜூன் 9: சென்னையில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ”தமிழ்நாட்டில் சமூக நீதி அடிப்படையிலான 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், தகுதியான அனைவருக்கும் உரிய உரிமைகள் போய்ச் சேரவும் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும்.கடந்த வாரம் என் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மற்றும் 42 சமுதாயத் தலைவர்களின் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.அந்தத் தீர்மானத்தின் நகலை முதலமைச்சர் விஜய் அவர்களிடம் வழங்கி, விரிவாக ஆலோசிப்பதற்காகவே இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது, ” என்று குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், தமிழ்நாட்டின் சமூக நீதி மற்றும் இடஒதுக்கீட்டு வரலாற்றை A to Z முழுமையாக முதலமைச்சரிடம் விளக்கியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இடஒதுக்கீடு மற்றும் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் 95 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1931-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரித் தரவுகளின் அடிப்படையிலேயே இன்னும் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டினார்.
Also read : டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: நிதி ஆயோக் கூட்டம் மற்றும் முக்கிய அரசியல் சந்திப்புகளுக்கு திட்டம்
“இந்த மிகப்பழைய தரவுகள் தற்போதைய சூழலுக்குப் போதுமானவை அல்ல என்று உச்ச நீதிமன்றமும், நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களும் தெளிவாகக் கூறிவிட்டன.நவீன காலத்திற்கு ஏற்ற துல்லியமான புதிய தரவுகள் (Modern Data) இருந்தால் மட்டுமே இடஒதுக்கீட்டை நீதிமன்றங்களில் சட்டப்பூர்வமாகத் தக்க வைக்க முடியும்.அதனால்தான் மாநில அரசே இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே கையில் எடுக்க வேண்டும் என வற்புறுத்துகிறோம்.”
தவெக-வின் முதல் வாக்குறுதியை நினைவு கூர்ந்த சந்திப்பு:- தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தங்களின் முதல் வாக்குறுதியாகச் சாதிவாரி கணக்கெடுப்பைத்தான் குறிப்பிட்டிருந்தார்கள் என்பதை முதலமைச்சர் விஜய் அவர்களிடம் அன்புமணி ராமதாஸ் இந்தச் சந்திப்பில் நினைவுபடுத்தியுள்ளார்.
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சமுதாயங்களுக்கும் சமூக நீதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும்; அதற்குச் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்பதே தவெக-வின் முதல் தேர்தல் வாக்குறுதி.அதை நான் அவரிடம் இன்று மீண்டும் கோடிட்டுக் காட்டினேன்.அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், ‘நிச்சயமாக, நாங்கள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை உறுதியாக நிறைவேற்றுவோம்.தமிழ்நாட்டு மக்களுக்கு இதை நாங்கள் செய்வோம்’ என்று மிகச் சாதகமான, நல்ல செய்தியைத் தந்துள்ளார், ” என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
மேக்ரோ லெவல் vs மைக்ரோ லெவல் கணக்கெடுப்பு :- மத்திய அரசு நடத்தத் திட்டமிட்டிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் கூடிய சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒரு Macro Level கணக்கெடுப்பு மட்டுமே என்று பாமக தலைவர் விளக்கினார்.அது வெறும் தலைகளை எண்ணும் கணக்காக மட்டுமே இருக்கும்.ஆனால், மாநில அரசு தனியாகக் கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே அது Micro Level-ல் அமையும்.அப்போதுதான் தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களின் நிலை, 2.25 கோடி குடும்பங்களின் துல்லியமான சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலவரங்களை முழுமையாக அறிய முடியும்.இல்லாதவர்களுக்கு, பின்தங்கியவர்களுக்குத் தேடிப் போய்க் கொடுப்பதுதான் உண்மையான சமூக நீதி என்றும், அதற்கு மாநில அரசின் கணக்கெடுப்பே வழிவகுக்கும் என்றும் அவர் வாதிட்டார்.
இதற்கென கர்நாடகா ஏற்கனவே இரண்டு முறை கணக்கெடுப்பு நடத்தியுள்ளதையும், தெலுங்கானா முடித்துள்ளதையும், ஆந்திரா, ஒடிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் இத்தகைய கணக்கெடுப்பைத் தொடர்ந்து நடத்தி வருவதையும் சுட்டிக்காட்டிய அவர், சமூக நீதியின் தொட்டில் எனப்படும் தமிழ்நாட்டில் இது இன்னும் ஏன் தாமதமாக வேண்டும் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
ஆளுநர் உரையில் கொள்கை அறிவிப்பாக வெளியிடக் கோரிக்கை:-
அனைத்துக் கட்சி மற்றும் சமுதாய அமைப்புகளின் கூட்டுக் கோரிக்கையாக, வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரையில் (Governor’s Address), சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அரசின் கொள்கை முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக இடஒதுக்கீட்டு வரலாற்றின் முக்கிய மைல்கற்கள்:- செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு கடந்து வந்த பாதையை அன்புமணி ராமதாஸ் பின்வருமாறு பட்டியலிட்டார்:
- 1921 & 1927: நீதிக்கட்சி (Justice Party) ஆட்சிக் காலத்தில் 100 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கான அரசாணை வெளியிடப்பட்டு, 1927-ல் நடைமுறைக்கு வந்தது.
- 1935: மத்திய அரசு நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு விரிவாக்கம் செய்யப்பட்டது.
- 1950 & 1951: நீதிமன்ற வழக்கால் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டபோது, தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் தொடர் போராட்டத்தால் இந்தியாவின் First Constitutional Amendment (முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்) கொண்டு வரப்பட்டது.அதன் விளைவாக, 1951-ல் 40 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதியானது.
- 1954: இடஒதுக்கீடு 41 விழுக்காடாக உயர்ந்தது.
- 1971: கலைஞர் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீடு 49 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டது.
- 1980: எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் இது 68 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.
- 1989 & 1990: கலைஞர் ஆட்சிக் காலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (MBC) 20 விழுக்காடும், பிற்படுத்தப்பட்டோருக்கு (BC) 30 விழுக்காடும் எனப் பிரிக்கப்பட்டு, ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 69 விழுக்காடாக உயர்ந்து சட்டமாக்கப்பட்டது.
- 2008 : உள் ஒதுக்கீடு , இஸ்லாமியர்களுக்கு 3.5%
- 2009 : அருந்ததியர்களுக்கு 3%
இந்த வரலாற்றுப் பின்னணியைக் குறிப்பிட்டு, 69% இடஒதுக்கீட்டை முழுமையாகப் பாதுகாக்க தற்போதைய நவீனச் சாதிவாரித் தரவுகள் மிக முக்கியம் என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.








