சென்னை , June 9 : தமிழக முதலமைச்சர் விஜய் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நாளை காலை தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதுடன், மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் டெல்லியில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. நாட்டின் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்கும் இந்த உயர்மட்டக் கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் விஜய் டெல்லி செல்கிறார். இதற்காக நாளை காலை 8:00 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் அவர், முற்பகல் 11:00 மணி அளவில் டெல்லியைச் சென்றடைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கொறடா உத்தரவை மீறிய விவகாரம்: 21 எம்.எல்.ஏ.க்களை மன்னித்த சபாநாயகர்; 4 பேர் மீது நடவடிக்கை?
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, இதற்கு முன்பும் விஜய் டெல்லி சென்று பிரதமர் மோதி மற்றும் சில மத்திய அமைச்சர்களைச் சந்தித்திருந்தார். எனினும், அந்தப் பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. அது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியிருந்தது.
இந்தச் சூழ்நிலையில், தற்போதைய பயணத்தின் முதல் நாளான நாளை, அரசியல் மற்றும் அலுவல் ரீதியிலான முக்கியச் சந்திப்புகளுக்கு முதலமைச்சர் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நாளை மாலை நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களைச் சந்திப்பதற்கான நேரம் கோரப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், கடந்த முறை விடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்களைச் சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்துப் பேசுவதற்கும் முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார். நாளை முழுவதையும் இந்தச் சந்திப்புகளுக்காகப் பயன்படுத்திய பின்னர், நாளை மறுநாள் பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் அவர் முழுமையாகப் பங்கேற்கிறார். தமிழகத்திற்கான திட்டங்கள் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த கோரிக்கைகளை இந்த கூட்டத்தில் அவர் முன்வைக்கவுள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, நாளை மறுநாள் மாலையே தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் சென்னை திரும்புகிறார். இந்த மூன்று நாள் பயணத்தின் போது முதலமைச்சருடன் செல்லும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வப் பட்டியல் குறித்த விவரங்கள் விரைவில் முறைப்படி வெளியிடப்படும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சரின் இந்த டெல்லி பயணம், தமிழகத்தின் நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.








