
சென்னை, ஜூன் 9: தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை நேரில் சந்தித்துப் பேசினார். அண்மையில் பாமக சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களின் நகல்களை முதலமைச்சரிடம் அவர் முறைப்படி சமர்ப்பித்தார்.
முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வந்த முதலமைச்சர் விஜய், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அன்புமணி ராமதாஸின் இல்லத்திற்கும் நேரில் சென்றிருந்தார். அந்தச் சந்திப்பின் தொடர்ச்சியாக தற்போது மிக முக்கிய அரசியல் நகர்வாகவும், கொள்கை ரீதியிலான கோரிக்கையை முன்வைக்கும் விதமாகவும் இந்தச் சந்திப்பு தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலக அறையில் (Chamber) நடைபெற்றது.
Also : விஜய் ஒன்றும் மந்திரவாதி அல்ல: பொறுப்பேற்ற உடனே விமர்சிப்பது நியாயமில்லை என திருநாவுக்கரசர் கருத்து
தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பாதுகாக்கவும் சமூக நீதியின் அடிப்படையில் அனைத்துச் சமூகங்களுக்குமான திட்டங்களை வகுக்கவும் சாதிவாரி கணக்கெடுப்பு தற்போதைய சூழலில் மிக அவசியம் என்பதை வலியுறுத்தி, கடந்த ஜூன் 5-ஆம் தேதி சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அனைத்துக் கட்சிகள் மற்றும் சமுதாயத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, தேமுதிக மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட நாற்பதிற்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
குறிப்பாக ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி வீர விக்னேஸ்வரன் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்டு தீர்மானங்களுக்கு ஆதரவு அளித்திருந்தார். அத்தோடு இக்கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்க இயலாத சூழலிலும் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இக்கோரிக்கைக்குத் தங்களின் முழுமையான ஆதரவை பாமக தலைமையிடம் கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்திருந்தன.
அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ‘சமூக நீதி மக்கள் தொகை கணக்கெடுப்பு’ தொடர்பான தீர்மானங்களைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வரக் கோரியே இன்றைய சந்திப்பு நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் வைதிலிங்கம், விக்ரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் உடனிருந்தனர்.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தமிழகத்தின் இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ளவும், 50 சதவீத உச்சவரம்பைத் தாண்டி 69 சதவீத இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாகத் தக்கவைத்துக் கொள்ளவும் அரசிடம் துல்லியமான, தற்காலப் புள்ளிவிவரங்கள் இருப்பது கட்டாயமாகும் என்ற சூழலை அன்புமணி ராமதாஸ் முதலமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் தவெகவின் தேர்தல் அறிக்கையிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த வாக்குறுதி இடம்பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டிய பாமக குழுவினர், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே இதற்கான அறிவிப்பையோ அல்லது ஆளுநர் உரையிலோ இதைக் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த விரிவான சந்திப்பு, தமிழகத்தில் நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வரும் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வையும் புதிய அரசியல் சமன்பாடுகளையும் உருவாக்கும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.








