இந்தியாவில் குழந்தைகள் மரணங்களில் புதிய கவலை: 10-வது முக்கிய காரணமாக உருவெடுத்த புற்றுநோய் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் குழந்தைகள் சுகாதாரத் துறையில் இதுவரை இல்லாத ஒரு புதிய கவலைக்குரிய மாற்றம் நிகழ்ந்து வருவதாக சமீபத்திய சர்வதேச மருத்துவ ஆய்வு எச்சரித்துள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாடு & தொற்றுநோய்களால் ஏற்படும் குழந்தைகள் மரணங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் புற்றுநோய் போன்ற தொற்றா நோய்கள் சிறுவர்களின் உயிரைப் பறிக்கும் முக்கிய காரணமாக எழுந்துள்ளது .
உலகளவில் புகழ்பெற்ற ‘குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ்’ (Global Burden of Disease – GBD 2023) அமைப்பின் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் ஐந்து வயது முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணங்களுக்கான காரணங்களில் புற்றுநோய் தற்போது 10-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் தகவல் நாட்டின் மருத்துவத் துறையினர், பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தரவுகளின்படி கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 17000 குழந்தைகள் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் தட்டம்மை , காசநோய் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் போன்ற தொற்றுநோய்கள் குழந்தைகளின் உயிருக்கு அதிக அச்சுறுத்தலாகக் இருந்த நிலையில் , இந்த தொற்றுநோய்களை விட புற்றுநோயின் தாக்கம் சிறுவர்களிடையே மிக வேகமாக அதிகரித்து வருகிறது என இந்த அறிக்கையில் உள்ளது .
உலகளாவிய தரவரிசையோடு ஒப்பிடுகையில் சர்வதேச அளவில் குழந்தைகள் மரணங்களுக்குப் புற்றுநோய் 8-வது முக்கிய காரணமாக உள்ளது. தற்போதைய சூழலில் வளரும் நாடான இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வருவது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பிற்கு ஒரு புதிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.
குழந்தைகள் புற்றுநோய் அதிகரிப்பிற்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியக் காரணமாக ஆரம்பக்கட்ட விழிப்புணர்வு இல்லாமையே காரணம் . குறிப்பாக, இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் குழந்தைகளின் உடலில் தோன்றும் ஆரம்பகால அறிகுறிகளைப் பெற்றோர்கள் கண்டுகொள்ளாமல் விடுவது அல்லது சாதாரண உடல்நலக் குறைவு என்று அலட்சியப்படுத்துவது மரணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நகர்ப்புறங்களில் ஓரளவு மருத்துவ வசதிகளும் விழிப்புணர்வும் இருந்தாலும், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவமனைக்குக் கொண்டு வரும் சூழல் இன்றும் உள்ளது
குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் (Pediatric Oncologists) இது குறித்துக் கூறுகையில், பெரியவர்களுக்கு ஏற்படுவதைப் போன்றே குழந்தைகளுக்கும் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் தகுந்த சிகிச்சைகள் மூலம் இதனை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்று உறுதியாகத் கூறுகின்றனர் .
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்:
- காரணமின்றி நீண்ட நாட்களாக இருக்கும் காய்ச்சல்
- திடீரென உடல் எடை குறைதல் மற்றும் கடுமையான சோர்வு
- கழுத்து, அக்குள், வயிறு அல்லது உடலின் பகுதிகளில் தோன்றும் அசாதாரணக் கட்டிகள் அல்லது வீக்கங்கள்
- அடிக்கடி ஏற்படும் இரத்தப்போக்கு அல்லது உடலில் தோன்றும் விசித்திரமான தழும்புகள்.
இத்தகைய அறிகுறிகள் சாதாரண காய்ச்சலாகவும் இருக்கலாம், ஆனால் மருத்துவ ஆலோசனையின்றி மருந்தகங்களில் நேரடியாக மாத்திரைகளை வாங்கித் உட்கொள்ளும் முறையை தவிர்த்து , முறையான பரிசோதனை மேற்கொள்வதே பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில்தான் குழந்தைகள் புற்றுநோய் மரணங்கள் மிக அதிகமாகப் பதிவாகின்றன. உலக அளவில் நிகழும் மொத்த குழந்தைகள் புற்றுநோய் மரணங்களில் சுமார் 94 சதவீதம் இந்த ஏழை மற்றும் வளரும் நாடுகளிலேயே நிகழ்கின்றன என்ற கசப்பான உண்மையை இந்த ஆய்வு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. போதிய மருத்துவக் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், நவீன சிகிச்சைகளுக்கான செலவுகளை ஏழைக் குடும்பங்களால் தாங்க முடியாததுமே இதற்கு முதன்மைக் காரணங்களாகும்.
இந்தியாவில் இந்த மறைந்திருக்கும் சுகாதார சவாலை எதிர்கொள்ள, ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பிலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறியும் வசதிகளையும், தரமான சிகிச்சை வசதிகளையும் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் குறிப்பாகக் கிராமப்புறங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, பள்ளி அளவிலும், கிராமப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மூலமாகவும் குழந்தைகள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம்களைத் தீவிரமாக நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்க, நோய் வந்த பின் சிகிச்சை அளிப்பதை விட, ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுத்து நிறுத்துவதே தற்போதைய இந்தியாவின் அவசரத் தேவையாகும். பெற்றோர்களின் விழிப்புணர்வும், சமூகத்தின் கூட்டுப் பொறுப்பும் மட்டுமே இந்த இளம் உயிரைக் காப்பாற்ற உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.












