ஐம்பதாண்டு கால இடைவெளிக்குப் பின் அத்தாணி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் இளம்பெண்கள் விளக்கேந்தி ‘அம்மை அழைத்தல்’ வழிபாடு: பக்திப் பரவசத்தில் உறைந்த பக்தர்கள்
ஈரோடு: கிராமிய ஆன்மிக மரபுகளும், தலைமுறை கடந்த நம்பிக்கைகளும் இன்றும் மாறாமல் தொடர்வதைச் சான்றளிக்கும் விதமாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வளைய பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில், அரை நூற்றாண்டு காலத்திற்குப் பிறகு அரிய வழிபாட்டு நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. இத்திருவிழாவின் முக்கிய அங்கமான “அம்மை அழைத்தல்” வழிபாட்டின் போது, திருமணம் ஆகாத நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் கைகளில் விளக்கேந்தி அம்மனை எதிர்கொண்டு வரவேற்ற நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர், அத்தாணி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராம மக்களின் முதன்மை வழிபாட்டுத் தலமாக விளங்கும் இப்பெரிய மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பெருந்திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். வட்டாரப் பாரம்பரியத்தையும் கிராமிய கலாசாரத்தையும் பறைசாற்றும் இத்திருவிழாவில், நடப்பாண்டுக்கான வழிபாடுகள் கடந்த மாதம் 29 ஆம் தேதி பூச்சாட்டுகளுடன் முறைப்படி தொடங்கின. இதனைத் தொடர்ந்து, கம்பம் நடுதல், பூவோடு வைத்தல் மற்றும் தீர்த்த குடம் எடுத்தல் உள்ளிட்ட அம்மனுக்குரிய பல்வேறு ஆன்மிக மரபுச் சடங்குகள் அடுத்தடுத்து பக்தி சிரத்தையுடன் நடத்தப்பட்டு வந்தன.
Also read : மயிலாடுதுறையில் 14 ஆண்டுகளுக்கு பின் வருந்தீஸ்வரர் கும்பாபிஷேகம்..கண்ணங்குடி விழாவும் கோலாகலம்!
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான “அம்மை அழைத்தல்” வழிபாட்டில் எதிர்பாராத ஒரு ஆன்மிக திருப்பம் நிகழ்ந்தது. சில தினங்களுக்கு முன்பு கோவில் வளாகத்தில் சாமியாடிய பக்தர் ஒருவர், இந்த ஆண்டு அம்மை அழைத்தல் ஊர்வலத்தின் போது, ஊர்ப் பகுதியிலிருந்து மாரியம்மனைத் திருமணம் ஆகாத இளம்பெண்கள் கைகளில் நெய்விளக்கேந்தி எதிர்கொண்டு அழைத்து வர வேண்டும் என அருள்வாக்கு கூறியுள்ளார். கிராமிய நம்பிக்கைகளின்படி இந்த அருள்வாக்கினை ஏற்றுக் கொண்ட திருவிழா அமைப்பாளர்களும், ஊர் பெரியவர்களும் முறைப்படியான ஏற்பாடுகளைச் சிறப்புடன் மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வில், மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரிய மாரியம்மன் எழுந்தருளச் செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் தொடங்கியது. அப்போது, பாரம்பரிய உடைகளான பட்டுப் பாவாடை மற்றும் வெண்ணிற ஆடைகளை அணிந்த நூற்றுக்கணக்கான அவா திருமண இளம்பெண்கள், கைகளில் சுடரேந்திய விளக்குகளுடன் பக்திப் பரவசத்தோடு மாரியம்மனை எதிர்கொண்டு வரவேற்றனர். சத்தியமங்கலம் சாலை மற்றும் கோபிசெட்டிபாளையம் சாலை வழியாகத் தொடர்ந்த இந்த கண்கொள்ளா ஊர்வலம், வழிநெடுகிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.
நீண்ட வீதிகளில் இளம்பெண்கள் வரிசையாக விளக்கேந்தி நின்ற காட்சி, அப்பகுதியில் பெரும் ஆன்மிக அதிர்வை ஏற்படுத்தியதாகத் தரிசனத்திற்கு வந்திருந்த மூத்த பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். கடந்த 50 ஆண்டுகளில் இத்தகையதொரு வழிபாட்டு முறையைத் தாங்கள் கண்டதே இல்லை என்றும், இது தங்களுக்குக் கிடைத்த அரிய தெய்வீக அனுபவம் என்றும் அவர்கள் நெகிழ்ந்து கூறினர். ஊர்வலம் இறுதியாகக் கோவில் வளாகத்தை வந்தடைந்ததும், இளம்பெண்கள் தாங்கள் கொண்டு வந்த விளக்குகளைக் கோவில் முன்பாக நடப்பட்டிருந்த கரக கம்பத்தைச் சுற்றி வைத்து மனமுருக வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கவச விசேஷ அலங்காரத்தில் காட்சியளித்த மாரியம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
திருவிழாவின் தொடர்ச்சியாக, அம்மனுக்குப் பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் மற்றும் நேர்த்திக்கடனாக மாவிளக்கு எடுத்தல் போன்ற பல்வேறு கிராமிய வழிபாட்டு முறைகளும் விமரிசையாக நடைபெற்றன. இதில் அத்தாணி, அந்தியூர் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், வெளியூர் பக்தர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட கொங்குப் பகுதிகளில் நடைபெறும் அம்மன் கோவில் திருவிழாக்கள் என்பது வெறும் வழிபாடாக மட்டுமின்றி, சமூக ஒற்றுமையையும் கலாசாரத் தொடர்ச்சியையும் வெளிப்படுத்தும் தளமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டு அத்தாணியில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ள இந்த “விளக்கேந்தி அம்மை அழைத்தல்” நிகழ்வானது, இளம்தலைமுறையினரின் ஆன்மிகப் பங்களிப்பையும், கிராமிய மரபுகள் சிதையாமல் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதையும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.








