TVK ஆட்சிக்கு அதிமுக ஆதரவு? எடப்பாடி பழனிச்சாமி ‘கிங் மேக்கர்’ ஆகிறாரா?

தமிழக அரசியலில் திருப்பம்: தமிழகத்தில் தொங்கு நிலை அரசியல் சூழல்; TVK ஆட்சிக்கு அதிமுக ஆதரவு சாத்தியம். எடப்பாடி பழனிச்சாமி கிங் மேக்கராக மாறுவாரா?

AIADMK support to TVK government sparks debate as Edappadi K Palaniswami emerges as potential kingmaker in Tamil Nadu politics

நெல்லை : தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்தவொரு தனித்த கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மையை வழங்காத நிலையில், ‘கூட்டணி அரசியல்’ மற்றும் ‘வெளியிருந்தான ஆதரவு’ ஆகிய சொற்கள் தற்போதைய அரசியல் விவாதங்களின் மையப்பொருளாக மாறியுள்ளன.

குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய அரசு அமைவதற்கோ அல்லது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கோ தேவையான எண்களை எட்டுவதில் தீவிரமான அரசியல் கணக்குகள் பின்னணியில் அரங்கேறி வருகின்றன.

தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்கான மேஜிக் நம்பர் 118 ஆகும். தற்போதைய நிலவரப்படி, தவெக ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 10 முதல் 11 சட்டமன்ற உறுப்பினர்களின் (எம்.எல்.ஏ.) ஆதரவு தேவைப்படும் சூழல் நிலவுகிறது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீள, தவெக தலைமைக்கு முன்னால் இரண்டு பிரதான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

முதல் வாய்ப்பு: காங்கிரஸ் (5), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2) மற்றும் இடதுசாரி கட்சிகள் (4) ஆகியவற்றுடன் இணைந்து தேவையான 11 இடங்களைப் பெறுவது. இரண்டாவது வாய்ப்பு: 47 சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவையின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள அஇஅதிமுகவின் ஒற்றை ஆதரவைப் பெறுவது. தற்போதைய சூழலில், முதல் வாய்ப்பை விட இரண்டாவது வாய்ப்பு குறித்தே அரசியல் வட்டாரங்களில் பலத்த விவாதங்கள் எழுந்துள்ளன. பல கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்கும்போது எழும் கொள்கை முரண்பாடுகளையும், நிர்வாகச் சிக்கல்களையும் தவிர்த்து, அரசியல் ஸ்திரத்தன்மையை (Stable Option) நிலைநிறுத்த ஒற்றைக் கட்சியின் வெளிப்புற ஆதரவே சிறந்தது என தவெக தரப்பு கருதுவதாகத் தெரிகிறது.

‘கிங் மேக்கர்’ ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி?

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெறவிருக்கும் சூழலில், தவெக அரசுக்கு அதிமுக வெளியிலிருந்து ஆதரவு அளிக்கக்கூடும் என்ற தகவல் அரசியல் அரங்கில் இறக்கைக் கட்டிப் பறக்கிறது.

அதிமுக இந்த முடிவை எடுக்கும் பட்சத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசியலின் ‘கிங் மேக்கர்’ (Kingmaker) என்ற அந்தஸ்தைப் பெறுவார் என்பதில் ஐயமில்லை. அமைச்சரவையில் பங்கு பெறாமல், வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதன் மூலம் தவெக அரசின் ஆயுளைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக அதிமுக உருவெடுக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

மாற்று அரசியலா? முந்தைய வரலாறுகளா?

மறுபுறம், எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து அறிவித்துள்ள கூட்டுக் போராட்டம், பழைய ‘மக்கள் நலக் கூட்டணி’ காலத்தை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இக்கட்சிகளின் இந்தத் தனித்த நகர்வு, மாற்று அரசியல் குரலுக்கான தொடக்கமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஒரு கட்சிக்கு முழுமையான பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்படுவது இதுவே முதல்முறை என்று கூற முடியாது. கடந்த 2006-ல் திமுக சிறுபான்மை அரசாக இருந்தபோது, காங்கிரஸ் கட்சியின் 36 எம்.எல்.ஏ-க்களின் பலத்தோடு ஐந்து ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தது. ஆனால், அன்றைய சூழலை விட இன்றைய அரசியல் களம் மிகவும் சிக்கலானது. யார் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பதில் இன்னும் முழுமையான தெளிவு பிறக்கவில்லை.

தேர்தல் அச்சமும் எதிர்கால நகர்வுகளும்

தற்போதைய நிலையில் உடனடியாக மற்றொரு பொதுத்தேர்தலைச் சந்திக்க எந்தவொரு அரசியல் கட்சியும் தயாராக இல்லை என்பதே எதார்த்தம். மீண்டும் ஒரு தேர்தலை நடத்துவது என்பது அரசுக்கும், கட்சிகளுக்கும் மிகப்பெரிய பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும். அதே வேளையில், தற்போதைய அரசியல் சூழலில் நிலவும் அனுதாப அலை தவெக-விற்குச் சாதகமாக மாறிவிடக்கூடும் என்ற அச்சமும் மற்ற கட்சிகளிடம் பரவலாக உள்ளது.

குறுகிய கால அரசியல் ஸ்திரத்தன்மையா அல்லது நீண்ட கால அரசியல் எதிர்காலமா என்ற இருமுனை கத்தியின் மீது தற்போது தமிழக அரசியல் கட்சிகள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அடுத்த சில நாட்களில் வெளிவரவிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மட்டுமே தமிழக அரசியலின் அடுத்த ஐந்தாண்டு காலப் பாதையைத் தீர்மானிக்கும்.

-செய்தியாளர் , மணி

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *