
அவிநாசி, May 22:- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு பெண் புள்ளி மான்கள், தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தன. அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது, உள்ளூர் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த புதுப்பாளையம், கோதபாளையம், வஞ்சிபாளையம், சாமந்தங்கோட்டை உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான புள்ளி மான்கள் கூட்டமாக வசித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் போதிய மழையின்மை, காடுகளில் நிலவும் வறட்சி போன்ற காரணங்களால் வனவிலங்குகளுக்கான இயற்கை வாழ்விடங்கள் சுருங்கி வருகின்றன. இதனால் உணவு மற்றும் தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காகத் தண்ணீர் தேடி மான் கூட்டங்கள் அடிக்கடி விளைநிலங்களுக்கும், மக்கள் வசிக்கும் ஊரகப் பகுதிகளுக்கும் இடம்பெயர்வது வழக்கமாகிவிட்டது.
இவ்வாறு காட்டை விட்டு வெளியேறும் மான்கள், அவிநாசி-கோவை தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புறச் சாலைகளைக் கடக்க முயம்போது அதிவேக வாகனங்களில் அடிபட்டும்..குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களிடம் சிக்கியும் உயிரிழப்பது சமீபகாலமாகத் தொடர் கதையாகி உள்ளது .
இந்நிலையில், நேற்று இரவு அவிநாசியை அடுத்த வெங்கமேடு பாரதிநகர் குடியிருப்புப் பகுதிக்குள் வனப்பகுதியில் இருந்து வந்த மான் கூட்டம் ஒன்று நுழைந்துள்ளது, அப்போது அங்கு சுற்றித் திரிந்த தெருநாய்கள், மான்களைக் கண்டதும் ஆக்ரோஷமாகக் துரத்தத் தொடங்கியுள்ளன. நாய்களிடமிருந்து தப்பிக்க மான்கள் நாலாபுறமும் சிதறி ஓடிய நிலையிலும் இருவேறு இடங்களில் இரண்டு பெண் மான்களை நாய்கள் சூழ்ந்து கடித்ததில் அவை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன. உயிரிழந்த மான்கள் முறையே இரண்டு மற்றும் மூன்று வயதுடையவை என்று தெரியவந்துள்ளது.
இன்று காலை வழக்கம் போல் பாரதிநகர் தோட்டத்துப் பகுதிக்கு ஆடுகளை மேய்ப்பதற்காகச் சென்ற உள்ளூர் விவசாயிகள், ஆங்காங்கே மான்கள் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் உடனடியாக அவிநாசி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வனத்துறை காவலர்கள் வெங்கடேசன் மற்றும் பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த இரண்டு பெண் மான்களின் உடல்களையும் மீட்ட அவர்கள் உடற்கூறாய்வு நடைமுறைகளுக்காக தெக்கலூர் அரசு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர் செந்தில் முருகன் மான்களின் உடல்களை முறைப்படி உடற்கூறாய்வு செய்தார். வனவிலங்கு பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அருகில் உள்ள வனப்பகுதிக்கு மான்களின் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு வனத்துறையினரால் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டன.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். “அவிநாசி சுற்றுவட்டாரக் கிராமங்களில் புள்ளி மான்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஆனால் அவற்றுக்கான குடிநீர் & தீவனத் தேவைகளை வனப்பகுதியிலேயே பூர்த்தி செய்வதற்கான உள்கட்டமைப்புகள் போதிய அளவில் இல்லை. இதனாலேயே மான்கள் அச்சத்துடனும் தாகத்துடனும் கிராமங்களுக்குள் வருகின்றன.
அதேபோல் ஊராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளும், வனவிலங்குகளைப் பாதுகாக்க வனத்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மான்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் செயற்கைத் தொட்டிகளை அமைத்துத் தண்ணீர் நிரப்ப வேண்டும்; சாலைகளில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட வேண்டும்” எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரிய வகை வனவிலங்கினமான புள்ளி மான்கள் நாய்கள் கடித்தும் விபத்துகளில் சிக்கியும் தொடர்ந்து அழியும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வனத்துறை உயர்மட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒஅப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.













