
சென்னை , மே 17: இந்திய கிரிக்கெட் அரங்கில் தமக்கென ஒரு தனித்துவமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் சஞ்சு சாம்சன். நடப்பு ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக அவர் செயல்பட்டு வந்தாலும், அண்டை மாநிலமான தமிழகத்திலும், குறிப்பாக சென்னை ரசிகர்களிடமும் அவருக்குப் பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் அண்மையில் நடைபெற்ற “அதிரடி” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சஞ்சு சாம்சன் கலந்துகொண்டார்.
விளையாட்டு, சினிமா, நட்பு, சென்னை உணவு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ரசிகர்கள் எனப் அவர் மேடையில் பகிர்ந்துகொண்ட இயல்பான பேச்சு கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த நிகழ்வின் மிக முக்கியத் தருணமாக அமைந்தது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற திரைப்பட வசனத்தை சஞ்சு சாம்சன் மேடையில் பேசிக் காட்டியதுதான். அரங்கில் கூடியிருந்த ரசிகர்களின் தொடர் கோரிக்கைக்கு இணங்க, மைக் பிடித்த சஞ்சு சாம்சன், ரஜினிகாந்தின் பாணியில், “நான் ஒரு வாட்டி சொன்னா, நூறு வாட்டி சொன்ன மாதிரி!” என்று தமிழில் பேசினார்.
அவர் இந்த வசனத்தைக் கூறிய உடனே அரங்கம் முழுவதும் ரசிகர்களின் பலத்த கைதட்டலாலும் முழக்கத்தாலும் அதிர்ந்தது. இதனைத் தொடர்ந்து, அந்தச் சூழலை மேலும் கலகலப்பாக்கும் வகையில், “அது ஒரு தடவை சொன்னா… ஒரு தடவை சொன்ன மாதிரிதான்!” என்று தனது வழக்கமான புன்னகையுடன் அவர் மாற்றிப் பேசியது அங்கிருந்தவர்களைக் கவர்ந்தது.
பேசில் ஜோசப்புடனான ‘மொக்க ஃபிரண்ட்ஷிப்’
மலையாளத் திரையுலகின் பிரபல இயக்குநரும் நடிகருமான பேசில் ஜோசப் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்கு இடையே இருக்கும் நெருங்கிய நட்பு குறித்தும் இந்த மேடையில் விரிவாகப் பேசப்பட்டது.
தங்களுடைய நட்பு குறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், “அவர் (பேசில் ஜோசப்) என்னுடைய ஒவ்வொரு கிரிக்கெட் போட்டி முடிவடைந்த பிறகும் எனக்கு அலைபேசியில் அழைப்பார். ‘நீ விளையாடிய அந்த ஷாட் சரியாக இல்லை, இதை இன்னும் கொஞ்சம் சிறப்பாகச் செய்திருக்கலாம்’ என்று கிரிக்கெட் விமர்சனம் செய்வார். அதேபோல, அவர் இயக்கும் அல்லது நடிக்கும் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு நானும் எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வேன்,” என்று குறிப்பிட்டார்.
பேசில் ஜோசப்பின் திரைப்பயணம் குறித்துப் பேசிய சஞ்சு, “கேரளாவில் அவர் ஏற்கனவே ஒரு பெரிய இயக்குநராக அறியப்பட்டவர்தான். ஆனால், அவசியமான திருப்புமுனையாக அமைந்த ‘மின்னல் முரளி’ திரைப்படம் வெளியான பிறகு, நான் அவருடைய தீவிர ரசிகனாக மாறிவிட்டேன். உடனே அவருக்குத் தொடர்பு கொண்டு, நான் உங்களின் பெரிய விசிறி என்று கூறினேன்,” என்றார்.
தொடர்ந்து தங்களது நட்பின் தன்மையை நகைச்சுவையாக விவரித்த அவர், “எங்களுடையது ஒரு ‘மொக்க ஃபிரண்ட்ஷிப்’. இது மிகவும் சீரியஸான ஒரு உறவுமுறை கிடையாது. ஆனால், நாங்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்போம்,” என்று தெரிவித்தார். குறிப்பாக, தனது நண்பர் சோர்வாக இருக்கும் தருணங்களில் அவரை எப்படி உற்சாகப்படுத்துவீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, “அவருடைய அந்த ‘கககனு’ சிரிப்பு ஒன்று மட்டுமே போதும், சூழலே மாறிவிடும்,” என்று பதிலளித்தார்.
“சென்னை எனது இரண்டாவது இல்லம்”
தமிழ்நாடு மற்றும் சென்னை நகருடனான தனது உணர்வுபூர்வமான பிணைப்பு குறித்து சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சியுடன் பேசினார். தனது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், “என்னுடைய சொந்த ஊர் திருவனந்தபுரம். அது தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதிக்கு மிக அருகில் உள்ள இடம். இதனால், சிறு வயது முதலே தமிழ் திரைப்படங்களோடு எனக்கு மிக நெருக்கமான தொடர்பு உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினி சார், உலகநாயகன் கமல் சார் மற்றும் விஜய் அண்ணா ஆகியோரின் திரைப்படங்களைப் பார்த்துதான் நாங்கள் வளர்ந்தோம்,” என்று விவரித்தார்.
சென்னை ரசிகர்களின் அன்பான அணுகுமுறை பற்றிக் குறிப்பிட்ட சஞ்சு, “நான் எங்குச் சென்றாலும் சென்னை ரசிகர்கள் என்னை அணுகி, ‘சேட்டா, அடுத்த மேட்ச் ஜெயிங்க… இந்த முறை ஐபிஎல் கப்பை நாமதான் அடிக்கிறோம்’ என்று உரிமையோடு கூறுவார்கள். அவர்கள் காட்டும் அந்த அன்பு, நேரடியாக இதயத்திலிருந்து வருகிறது என்பதை என்னால் உணர முடிகிறது. அதனால், சென்னை மக்களுடன் எளிதாக என்னால் கனெக்ட் ஆக முடிகிறது,” என்றார். சிஎஸ்கே ரசிகர்களின் இந்த உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு தனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாகவும், இது ஒரு நீண்ட பயணத்தின் தொடக்கமாகத் தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிஎஸ்கே மற்றும் அதன் பொறுப்புகள்
இதற்கு முன்னதாக நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில், “நீங்கள் எந்த ஐபிஎல் அணியை ஆதரிக்கிறீர்கள்?” என்று பேசில் ஜோசப்பிடம் கேட்கப்பட்ட போது, “என்னுடைய சிறந்த நண்பர் சஞ்சுவிற்காக நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஆதரிக்கிறேன்,” என்று அவர் கூறியிருந்த சம்பவம் இந்த மேடையில் நினைவு கூரப்பட்டது.
அதே கேள்வி தற்போதைய மேடையில் மீண்டும் முன்வைக்கப்பட்ட போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து சஞ்சு சாம்சன் மிகவும் முதிர்ச்சியுடனும் பொறுப்புடனும் பதிலளித்தார். “இத்தனை முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரு பெரிய பிரான்சைஸ் (Franchise) பற்றிப் பேசும் போது நாம் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இதனை வெறும் ‘பாசம்’ என்று கடந்து போகலாம். ஆனால், அது அன்பையும் தாண்டிய ஒரு மிகப்பெரிய எமோஷன் (Emotion),” என்று சென்னை அணியின் முக்கியத்துவத்தை விளக்கினார். சென்னை ரசிகர்களின் கிரிக்கெட் மீதான ஈடுபாடு தன்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்துவதாக அவர் தெரிவித்தார்.
ரஜினி மீதான ஈர்ப்பு மற்றும் சென்னை உணவு
திரையுலகில் தனக்குப் பிடித்தமான நாயகர் யார் என்ற கேள்விக்கு, எவ்விதத் தயக்கமும் இன்றி, “எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான்,” என்று சஞ்சு சாம்சன் பதிலளித்தார். மேடையில் ரஜினி பாணி வசனங்களை அவர் பேசிய விதம், அதேபோல், சென்னையின் பாரம்பரிய உணவுகள் குறித்தும் அவர் பேசினார். “கடந்த வாரம் கூட நான் சென்னையில் உள்ள புகழ்பெற்ற ‘நாயர் மெஸ்’ பகுதிக்குச் சென்று சாப்பிட்டேன். அதன் சுவை உண்மையிலேயே வேற லெவல்,” என்று சஞ்சு சாம்சன் கூறியது, மேலும், பேசில் ஜோசப்பும் சஞ்சு சாம்சனும் கொச்சியில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் மேல் மற்றும் கீழ் வீடுகளில் வசித்து வருவதாகவும், தங்களின் ஓய்வு நேரங்களைச் செலவிடுவதற்கான முதன்மை இடமாக மொட்டை மாடியே திகழ்கிறது என்றும் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை கலகலப்பாகப் பகிர்ந்துகொண்டனர்.













