
சிறப்பு செய்தி பிரிவு : உதயநிதிக்கு எதிர்க்கட்சித் தலைவராகும் தகுதி இல்லை; விஜய் மீது விமர்சனம் வைப்பவர்கள் ‘குட்டிச் சுவர்கள்’ – நாஞ்சில் சம்பத் அதிரடிப் பேட்டி
]தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் அரசியல் நகர்வுகள் மற்றும் அவர் மீதான விமர்சனங்களுக்கு அக்கட்சியின் ஆதரவாளரும் பிரபல அரசியல் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் விரிவான பதிலடிகளை வழங்கியுள்ளார். திமுக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டசபை செயல்பாடுகள் மற்றும் விஜயின் மேடைப் பேச்சு முறை குறித்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் தனது பாணியில் கூர்மையான கருத்துகளை முன்வைத்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நோக்கித் தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்த நாஞ்சில் சம்பத், “தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எந்தவொரு தகுதியும் உதயநிதி ஸ்டாலினுக்கு கிடையாது” என்று குறிப்பிட்டார். மேலும், சமூக நீதி குறித்து அரை மணி நேரம் அவரைத் தொடர்ந்து பேசச் சொல்லுங்கள், அவர் பேசிவிட்டால் நான் பேசுவதையே நிறுத்திக் கொள்கிறேன் என்று நேரடி சவாலையும் விடுத்துள்ளார்.
சட்டமன்றப் புறக்கணிப்பும் ‘ரீல்ஸ் ஆட்சி’ குற்றச்சாட்டும்
சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் எழுப்பும் கேள்விகளுக்கு விஜயிடம் பதில் இல்லை என்ற விமர்சனத்தை நாஞ்சில் சம்பத் திட்டவட்டமாக மறுத்தார். இது குறித்து அவர் பேசுகையில், “நீ சட்டமன்றத்தில் தொடர்ந்து அமர்ந்து விவாதங்களில் பங்கேற்றிருந்தால் அல்லவா பதில் கிடைத்திருக்கும்? வெளிநடப்பு செய்துவிட்டு வெளியே போன பிறகு, சபை எப்படி பதில் சொல்ல முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகள் விவாதங்களை எதிர்கொள்ளாமல் வெளியேறும் அணுகுமுறையையே இது காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல், திமுக தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் “ரீல்ஸ் ஆட்சி” என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்த அவர், “இது ரீல்ஸ் ஆட்சி அல்ல, மக்களின் தேவைகளை நேரடியாக நிறைவேற்றுகின்ற ரியல் ஆட்சி” என்று வர்ணித்தார். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த எதிர்பார்ப்புகளைத் தவெக தனது அரசியல் அணுகுமுறையாகக் கொண்டுள்ளதாகவும் அவர் விவரித்தார்.
‘ஸ்கிரிப்ட் பேச்சு’ மற்றும் ‘குட்டி ஸ்டோரி’ சர்ச்சைகளுக்கு விளக்கம்
விஜய் பொதுவெளியில் பேசும்போது எப்போதும் கையில் குறிப்புத் தாள்களை (ஸ்கிரிப்ட்) வைத்தே பேசுகிறார் என்ற விமர்சனம் அரசியல் அரங்கில் பரவலாக வைக்கப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலளித்த நாஞ்சில் சம்பத், “ஒரு பொது மேடையில் செய்திகளையும் தரவுகளையும் துல்லியமாக மக்கள் முன் கொண்டு சேர்க்க குறிப்புகளை வைத்திருப்பது தவறான விஷயம் அல்ல. நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவே தனது உரைகளின் போது கையில் குறிப்புகளை வைத்திருக்கிறார்” என்று சுட்டிக்காட்டினார்.
அதே நேரத்தில், இந்திய அரசியல் வரலாற்றிலேயே பதவிப் பிரமாண உறுதிமொழியைப் பார்த்துப் படிக்காமல், மனப்பாடமாக நெஞ்சில் நிறுத்தி ஏற்ற ஒரே தலைவர் விஜய் மட்டும்தான் என்பதை நினைவூட்டி அவரது நினைவாற்றலையும் பேச்சுத் திறனையும் பாதுகாத்துப் பேசினார். சட்டமன்றத்தில் விஜய் அளித்த “இது குதிரை பேர அரசு அல்ல, குதிரை வேகத்தில் போகும் அரசு” என்ற பதிலைச் சுட்டிக்காட்டிய அவர், அது உடனடி அரசியல் புத்திசாலித்தனத்துடன் அளிக்கப்பட்ட பதில், ஸ்கிரிப்ட் அல்ல என்றார்.
மேலும், விஜய் தனது உரைகளில் கதைகள் (குட்டி ஸ்டோரி) சொல்வதை விமர்சிப்பவர்களைச் சாடிய அவர், “பேரறிஞர் அண்ணாவே தனது அரசியல் வாழ்வில் 34 வெவ்வேறு இடங்களில் 34 கதைகளைக் கூறி கருத்துகளை விளக்கியுள்ளார். மக்களின் மனதில் ஒரு கொள்கையை எளிமையாகப் பதிய வைக்க கதைகள் மிகச் சிறந்த ஊடகம். இதைத் தெரியாமல் விமர்சிப்பவர்கள் அரசியலில் வெறும் ‘குட்டிச் சுவர்கள்’ மட்டுமே” என்று சாடினார்.
also read: டிடிவி தினகரன் விஜய் ஆட்சியின் ஆயுள் குறித்து பரபரப்பு பேச்சு
ஆடை அலங்காரமும் கரூர் சம்பவப் பின்னணியும்
விக்ரவாண்டி மாநாட்டில் விஜய் கோட் சூட் அணிந்து ‘ராம்ப் வாக்’ சென்றது மற்றும் அவரது ஆடைத் தெரிவுகள் குறித்த விவாதங்களுக்கும் நாஞ்சில் சம்பத் விளக்கமளித்தார். “தமிழக அரசியலில் இதுவரை யாரும் செய்யாத புதிய உத்திகளைச் செய்யும் தலைவர் விஜய். அவர் எந்த உடை அணிந்தாலும் அது அவருக்குப் பொருத்தமாகவே இருக்கும். விக்ரவாண்டியில் கருப்பு நிற கோட், வெள்ளை சட்டை அணிந்து அவர் வந்த விதம் மக்களைக் கவர்ந்துள்ளது. இது வரும் தேர்தலில் கூடுதல் வாக்குகளாக மாறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கரூர் சம்பவத்தின் போது உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விஜய் உடனடியாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தது ஏன் என்ற கேள்விக்கு, “விஜய் அங்கு தொடர்ந்து தங்கியிருந்தால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கரூரை நோக்கி வரத் தொடங்கியிருப்பார்கள். அது தேவையற்ற கூட்ட நெரிசலையும் சட்டம் ஒழுங்கு அசம்பாவிதங்களையும் ஏற்படுத்தியிருக்கும். அதைத் தவிர்க்கவே அவர் அங்கிருந்து புறப்பட்டார்” என்றார்.
மேலும், பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கும் தவெக சார்பில் முறையான உதவிகள் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய அவர், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களின் குழந்தைகளின் முழு கல்விச் செலவையும் கட்சியே ஏற்றுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பாஜகவின் ‘பி டீம்’ அல்ல; சினிமா பின்னணி குறித்த பார்வை
தமிழக வெற்றிக் கழகத்தை “பாஜகவின் பி டீம் (B Team)” என்று விமர்சிப்பவர்களின் கூற்றை நாஞ்சில் சம்பத் முற்றிலுமாக நிராகரித்தார். “அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்ற விஜயின் அரசியல் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. விஜயமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது, தலைவரை விடவும் தொண்டர்களே ‘கொள்கை எதிரி பாஜக’ என்று உணர்வுப்பூர்வமாக முழக்கமிட்டனர். தவெக எந்த இடத்திலும் பாஜகவோடு சமரசம் செய்து கொள்ளவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
திரைப்படப் பின்னணியில் இருந்து அரசியல் வருகை தருபவர்களை ‘கூத்தாடிகள்’ என விமர்சிப்பது குறித்துப் பேசுகையில், “ஒரு காலத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆரையும் இதேபோலத்தான் விமர்சித்தார்கள். கலையும் இலக்கியமும் மக்களுக்கானவை. பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், எஸ்.எஸ். ராஜேந்திரன் போன்ற ஆளுமைகளின் அரசியல் பயணம் கலை உலகத்தோடு பிணைந்ததுதான். திரையுலகில் இருந்து வந்தவர்தான் எங்கள் தலைவர் என்பதில் எங்களுக்குப் பெருமையே” என்றார்.
சீனியாரிட்டிக்கு மரியாதை வேண்டும்
பேட்டியின் நிறைவாக மீண்டும் திமுகவின் உட்கட்சி அரசியல் குறித்துப் பேசிய நாஞ்சில் சம்பத், “திமுக உதயநிதியை முன்னிலைப்படுத்துவது அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்களுக்குச் செய்யும் அநீதி. ஐ. பெரியசாமி, கே.என். நேரு, சக்கரபாணி போன்ற எத்தனையோ மூத்த தலைவர்கள் அந்த கட்சியில் இருக்கிறார்கள். அவர்களின் சீனியாரிட்டிக்கும் அரசியல் அனுபவத்திற்கும் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். அதை விடுத்து உதயநிதிதான் அடுத்த முகமாக நிறுத்தப்படுவார் என்றால், வரும் பொதுத்தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாத சூழல் உருவாகும்” என்று எச்சரிக்கும் தொனியில் தனது கருதுக்களை நிறைவு செய்தார்.












