விஜய் அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு துறைகள் எதன் அடிப்படையில் ஒதுக்கப்பட்டன? சமூக நீதி, அனுபவம், நம்பிக்கை ஆகியவை எப்படி தாக்கம் செலுத்தின?

Chennai, May 29:தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையின் துறை ஒதுக்கீட்டுப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே 10ஆம் தேதி ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், அவர்களுக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்படும் என்பது குறித்தான விவாதங்கள் கடந்த ஒரு வார காலமாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக நிலவி வந்தன. இந்த தாமதம் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை ஈர்த்திருந்த சூழலில், தற்போது வெளியாகியுள்ள பட்டியல் நிர்வாகத் திறன், சமூகப் பிரதிநிதித்துவம் மற்றும் தனிப்பட்ட நம்பிக்கை ஆகிய அடிப்படைகளின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளதை தெளிவுபடுத்துகிறது.
புதிய அமைச்சரவையின் கட்டமைப்பில் மிக முக்கிய மாற்றமாக, முதலமைச்சர் விஜய் பல முக்கிய துறைகளை நேரடியாகத் தன் வசம் வைத்துள்ளார். பொது நிர்வாகம், உள்துறை, காவல்துறை, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் நிர்வாகம் ஆகிய பாரம்பரியமான துறைகளுடன் மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைகளையும் அவர் ஏற்றுள்ளார். குறிப்பாக, கடந்த ஆட்சிகளில் தனி அமைச்சரின் கீழ் செயல்பட்டு வந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை முதலமைச்சரே நேரடியாகக் கையாள்வது கவனிக்கத்தக்கது. உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாடு மற்றும் மகளிர், இளைஞர் நலனில் நேரடியாக கவனம் செலுத்துவதன் மூலம் தனது எதிர்கால அரசியல் திட்டங்களை அடிமட்ட அளவில் வலுப்படுத்த முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
also read : விழுப்புரம் நெல் கொள்முதல் போராட்டம் : 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல்
அமைச்சரவையின் மிக முக்கியப் பொறுப்புகள் முதலமைச்சரின் நம்பிக்கைக்குரியவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், விஜயின் நெருங்கிய அரசியல் கூட்டாளியான என். ஆனந்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலங்களில் இரு வேறு அமைச்சர்களால் நிர்வகிக்கப்பட்ட இந்த இரு முக்கிய துறைகளும் தற்போது ஒரே அமைச்சரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளான நீர் மேலாண்மை மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பொறுப்பு, முதலமைச்சரின் முழு நம்பிக்கையைப் பெற்ற ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
மறுபுறம், தமிழக அரசியல் களத்தில் நீண்டகால அனுபவம் கொண்ட மூத்த அரசியல்வாதியான கே.ஏ. செங்கோட்டையனுக்கு நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வருவாய், செலவினங்கள், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலையைத் தீர்மானிக்கும் மிக உன்னதமான இத்துறைக்கு, செங்கோட்டையனின் பழுத்த அரசியல் அனுபவமும் நிர்வாக முதிர்ச்சியும் தகுந்த பலம் சேர்க்கும் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் கல்வி மற்றும் முந்தைய பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு சில முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவிற்கு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை வழங்கப்பட்டுள்ளது. இந்திய கைப்பந்து கூட்டமைப்பின் தலைவராகச் செயலாற்றிய அனுபவமும், விளையாட்டு வீரர் என்ற அவரது தனிப்பட்ட அடையாளமும் இத்துறை ஒதுக்கீட்டின் பின்னணியாக அமைந்துள்ளது. அதேபோல், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான அருண்ராஜுக்கு மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலன் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியும், உயர்மட்ட நிர்வாக அனுபவமும் கொண்ட ஒருவரை இத்துறைக்குத் தேர்ந்தெடுத்திருப்பது, உலகளாவிய சுகாதார சவால்களுக்குப் பிந்தைய சூழலில் திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. தொழில்நுட்பத் திறனை அடிப்படையாகக் கொண்டு, பொறியியல் மற்றும் சட்டம் பயின்ற சிடிஆர் நிர்மல் குமாருக்கு மின்சாரம் மற்றும் சட்டத்துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
சமூக நீதி மற்றும் பிரதிநிதித்துவ சமநிலையை நிலைநாட்டுவதிலும் இந்த அமைச்சரவை பட்டியல் முக்கிய சிக்னல்களை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் இல்லாத துறைகளே ஒதுக்கப்படுவதாக எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், இம்முறை ராஜ்மோகனுக்கு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை போன்ற முதன்மைத் துறைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், அமைச்சரவையின் முன்வரிசையில் அவர் அமர்த்தப்பட்டிருப்பதும் அதிகாரப் பகிர்வில் சமூக நீதியை முன்னிறுத்தும் படியாக அமைந்துள்ளது. இதேபோல், தமிழக அரசியலில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிராமண சமூகப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில், விஜயின் நெருங்கிய நண்பரான வெங்கட்டராமணனுக்கு உணவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைப் பட்டியலின் ஆகச்சிறந்த ஆச்சரியமாக 29 வயதேயான இளம் பெண் கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டிருப்பது பார்க்கப்படுகிறது. பல்வேறு தேர்தல்களில் அரசியல் வியூக வகுப்பாளராகப் பணியாற்றிய அனுபவம், பன்மொழித் திறன் மற்றும் புள்ளியியல் துறையிலான அவரது கல்விப் பின்னணி ஆகிய தகுதிகள் இத்தகைய பெரிய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படக் காரணமாக மாறியுள்ளன. தமிழகத்திற்கான உலகளாவிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் இளம் தலைமுறையின் புதிய சிந்தனைகளைப் பயன்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் அமைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், முதலமைச்சர் விஜயின் இந்த முதல் அமைச்சரவைத் துறை ஒதுக்கீடு என்பது வெறும் அரசியல் சமரசமாக இல்லாமல், மூத்தவர்களின் அனுபவம், இளைஞர்களின் வேகம், சமூக சமநிலை மற்றும் நிர்வாகத் தகுதி ஆகியவற்றைத் துல்லியமாக இணைத்த ஒரு சமச்சீரான பட்டியலாகத் திகழ்கிறது.












