எம்ஜிஆர் காலத்தில் தொடங்கிய செங்கோட்டையன் அரசியல் பயணம், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக ஆட்சியில் எப்படி முக்கிய சக்தியாக மாறியது?

தமிழக அரசியலில் பல தலைமுறைகளை கடந்து தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் குறைவு. அந்த வரிசையில் தற்போது மீண்டும் பேசுபொருளாக மாறியிருப்பவர் கே.ஏ. செங்கோட்டையன். எம்ஜிஆர் தொடங்கிய அரசியல் பாதையில் பயணத்தை தொடங்கி, ஜெயலலிதா காலத்தில் முக்கிய தூணாக உருவெடுத்து, தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.
தமிழக வெற்றி கழகம் முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். “ஸ்ரீ ஜோசப் விஜய் எனும் நான்” என உறுதிமொழி எடுத்த விஜய், எம்ஜிஆருக்கு பின்னர் கட்சி தொடங்கி தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்த அரசியல் தலைவராக தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார்.
எம்ஜிஆர் மீது கொண்ட ஈர்ப்பு செங்கோட்டையனின் அரசியல் தொடக்கம்
1970களில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கியபோது தமிழக அரசியல் புதிய திருப்பத்தை சந்தித்தது. அந்த காலத்திலேயே எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருந்த செங்கோட்டையன், தனது 25வது வயதில் 1972ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.
அடிமட்ட உறுப்பினராக தொடங்கிய அவர், விரைவில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளராக உயர்ந்தார். கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை வெற்றிகரமாக ஒருங்கிணைத்ததன் மூலம் எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரியவராக மாறினார்.
அதன் தொடர்ச்சியாக 1977 சட்டசபை தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றார். தனது முதல் தேர்தலிலேயே காங்கிரஸ் வேட்பாளரை 1506 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சட்டமன்றத்தில் காலடி வைத்தார்.
கோபிசெட்டிப்பாளையத்தை கோட்டையாக மாற்றிய தலைவர்
1980ஆம் ஆண்டு கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்ட செங்கோட்டையன், அங்கிருந்து தொடங்கி அந்த தொகுதியை தனது அரசியல் கோட்டையாக மாற்றினார். தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரே தொகுதியில் 10 முறை போட்டியிட்டு 9 முறை வெற்றி பெற்ற அரசியல் தலைவர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார்.
இதன் மூலம் கொங்கு மண்டல அரசியலில் செங்கோட்டையன் தனித்த அடையாளத்தை உருவாக்கினார். அடிப்படை தொண்டர்களுடன் நேரடி தொடர்பு, தொகுதி மேலாண்மை, அமைப்பு கட்டுப்பாடு ஆகியவை அவரது அரசியல் வெற்றியின் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
ஜெயலலிதா காலத்தில் நம்பிக்கைக்குரிய அமைச்சர்
எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளந்தபோது, ஜெயலலிதா அணியில் உறுதியாக நின்றவர் செங்கோட்டையன். 1989 தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், பின்னர் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியிலும் முக்கிய பங்காற்றினார்.
இதன் காரணமாக ஜெயலலிதாவின் நெருக்கமான தலைவராக மாறிய செங்கோட்டையன், 1991ஆம் ஆண்டு முதல் முறையாக அமைச்சர் பொறுப்பேற்றார். போக்குவரத்து துறை, விவசாயத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களை கவனித்துள்ளார்.
குறிப்பாக 2017 முதல் 2021 வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பல நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதிமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் ஆகியவை செங்கோட்டையனின் அரசியல் பாதையை மாற்றின. 2021 தேர்தலுக்கு பின்னர் அதிமுக ஆட்சியை இழந்த நிலையில், அவருக்கு கட்சி மீது அதிருப்தி அதிகரித்ததாக கூறப்பட்டது.
இந்த சூழலில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தது தமிழக அரசியலில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. “அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் நம்முடைய தமிழக வெற்றி கழகத்திற்கு பெரிய உறுதுணையாக இருப்பார்” என விஜய் தெரிவித்திருந்தார்.
அக்கட்சியில் மூத்த அரசியல் அனுபவம் கொண்ட தலைவர்கள் இல்லாத நிலையில், செங்கோட்டையன் முக்கிய ஆலோசகராக செயல்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
விஜய் வெற்றியின் பின்னணியில் செங்கோட்டையன் திட்டமா?
தமிழக வெற்றி கழகம் முதல் முறையாக களமிறங்கிய சட்டமன்ற தேர்தலிலேயே ஆட்சியை பிடித்திருப்பது இந்திய அரசியலிலேயே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் ஏற்பட்ட வாக்கு மாற்றங்கள், அமைப்பு கட்டமைப்பு மற்றும் தரைமட்ட பணிகளில் செங்கோட்டையனின் அனுபவம் முக்கிய பங்காற்றியதாக பார்க்கப்படுகிறது.
எம்ஜிஆர் காலத்தில் தொடங்கிய அவரது அரசியல் அனுபவம், ஜெயலலிதா கால நிர்வாக பின்புலம், தொகுதி மேலாண்மை திறன் ஆகியவை தற்போது விஜய்க்கு அரசியல் அடித்தளமாக அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.







