நெல்லையில் செல்போன் செயலி மூலம் இளைஞர்களை வரவழைத்து பணம் பறித்த கும்பல் சிக்கியது!

நெல்லையில் செல்போன் செயலி மூலம் இளைஞர்களை வரவழைத்து தாக்கி பணம் பறித்த கும்பலை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்த அதிர்ச்சி சம்பவம்.

Nellai cyber crime gang trapped after luring youngsters through mobile app and brutally attacking them, with Tiruppur among key targets in the shocking money extortion case
Nellai cyber crime gang trapped after luring youngsters through mobile app and brutally attacking them, with Tiruppur among key targets in the shocking money extortion case

நெல்லையில் செல்போன் செயலி மூலம் வெளியூரை சேர்ந்த இளைஞர்களை நைசாக தொடர்புகொண்டு வரவழைத்து, பின்னர் தாக்கி பணம் மற்றும் பொருட்களை பறித்துவந்த கும்பலை மாநகர போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்களை குறிவைத்து செயல்பட்ட இந்த கும்பல், திட்டமிட்ட முறையில் தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று பணப்பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்பூரை சேர்ந்த இளைஞர் மீது கொடூர தாக்குதல்

திருப்பூர் பகுதியை சேர்ந்த லோகேஷ் (27) என்பவர் கம்ப்யூட்டர் தொடர்பான வேலைகளுடன் மசாஜ் தொழிலும் செய்து வந்துள்ளார். இவரை கடந்த மாதம் செல்போன் செயலி மூலம் தொடர்புகொண்ட நபர் ஒருவர், நெல்லைக்கு வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இரவு லோகேஷ் நெல்லை வண்ணார்பேட்டை பகுதிக்கு வந்துள்ளார். அங்கு பைக்கில் வந்த நபர் ஒருவர், அவரை ரஹ்மத்நகர் செவ்வந்தியான்குளம் அருகே உள்ள இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு ஏற்கனவே மறைந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல், லோகேஷை கடுமையாக தாக்கி அவரது செல்போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

ஆயுர்வேத நிறுவன ஊழியரையும் குறிவைத்த கும்பல்

இதுபோன்ற மற்றொரு சம்பவம் களக்காடு பகுதியை சேர்ந்த ஆல்வின் ஜெகதீஷ் (38) என்பவருக்கு நடந்துள்ளது. டிப்ளோமா பிசியோதெரபி படித்துவிட்டு நெல்லையில் உள்ள ஆயுர்வேத நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவரை கடந்த 7ஆம் தேதி செல்போன் செயலி மூலம் ஒருவர் தொடர்புகொண்டு நேரில் சந்திக்க அழைத்துள்ளார்.

காரில் சென்ற ஆல்வின் ஜெகதீஷை, அந்த நபர் பைக்கில் செவ்வந்தியான்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை கீழே தள்ளி தாக்கியதுடன், ஆடைகளை களைந்து வீடியோ பதிவு செய்து மிரட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கத்தியைக் காட்டி மிரட்டி Google Pay மூலம் பணம் பறித்ததுடன், அவரது கார், வாட்ச் மற்றும் வெள்ளி காப்பையும் பறித்துள்ளனர். அதோடு ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டியபோது, பைக்கில் இருந்து குதித்து ஆல்வின் ஜெகதீஷ் தப்பியதாக கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கிய கும்பல்

இந்த இரண்டு சம்பவங்களும் தொடர்பாக பாளை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் வினோத் சந்தாராம் மற்றும் உதவி கமிஷனர் சுரேஷ் தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ் தலைமையிலான போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

அதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பாளையங்கோட்டை சாந்திநகரை சேர்ந்த தங்கலிங்ககிருஷ்ணன் (20), ரஹ்மத்நகரை சேர்ந்த சிவராமபாண்டியன் (19), தூத்துக்குடி கருங்குளம் பகுதியை சேர்ந்த மகாராஜா முகின் (19), தாழையூத்தை சேர்ந்த மகாதேவன் (19) ஆகியோர் இந்த பணப்பறிப்பு கும்பலில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

4 பேர் கைது.. சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு

இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து கார், செல்போன்கள் மற்றும் பணம் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 17 வயது சிறுவன் ஒருவரை போலீசார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து இந்த கும்பலின் பின்னணி மற்றும் மேலும் யாரேனும் தொடர்புடையவர்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »