
Chennai , May 8 : விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து நாளை திருமாவளவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட உள்ளதாக VCK தெரிவித்துள்ளது. தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ள விஷயம் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு (TVK) விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்குமா என்பதுதான். இந்த அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், VCK தலைவர் தொல். திருமாவளவன் நாளை காலை அதிகாரப்பூர்வமாக தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக கட்சி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read : விசிக ஆதரவு ! கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபடும் விசிக
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பாவலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆதரவு கோரிய நிலையில், கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் இன்று இணையவழியில் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்ட உயர்நிலை குழு உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
VCK உயர்நிலை குழு கூட்டத்தில் என்ன நடந்தது?
இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்த இணையவழி கூட்டம் தமிழக அரசியல் வட்டாரங்களில் மிகுந்த கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, விஜயின் அரசியல் பயணம் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், VCKவின் முடிவு அடுத்த அரசியல் சமநிலையை தீர்மானிக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது.
பாவலன் வெளியிட்ட அறிக்கையில், கூட்டத்தில் பகிரப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை கட்சித் தலைவர் திருமாவளவன் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறினார் . மேலும், ஊடகங்களில் VCKவின் நிலைப்பாடு குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருவது தமிழக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், இது கட்சியின் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “இடதுசாரிகள் எப்படிப் முடிவு எடுக்கிறார்களோ அதே பாதையில் VCKவும் செல்லும்” என குறிப்பிட்டிருந்தார். அதாவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்தே ஒரே முடிவு எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால் தற்போது இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துவிட்ட நிலையில், VCK மட்டும் இன்னும் அதிகாரப்பூர்வ முடிவை வெளியிடாமல் இருப்பது அரசியல் ஆர்வலர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.





