
.Chennai: தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய அரசியல் நகர்வுகள் மற்றும் தேர்தல் களப் பங்களிப்புகள், மாநிலத்தின் பாரம்பரிய அரசியல் சமன்பாடுகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் எழுச்சி குறித்துப் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வரும் வேளையில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கியக் கருத்தை ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களிடம் முன்வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை “மக்கள் விரும்புகிற முதல்வர்” என்று வர்ணித்துள்ள அவர், இந்த அரசியல் மாற்றத்தை ஒரு “அமைதிப் புரட்சி” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நெல்லைப் பகுதியில் உள்ள அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும், இந்த ஒப்பீடும் தற்போதைய அரசியல் சூழலும் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
எந்தவொரு பெரிய அரசியல் கூட்டணியும் இல்லாமல், தேர்தல் களத்தில் “மக்களோடு மட்டுமே கூட்டணி” என்ற ஒற்றை நிலைப்பாட்டோடு தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்ட விதம், இந்த அளவுக்குப் பெரிய அரசியல் கவனத்தைப் பெற்றதற்குக் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இது குறித்துப் பேசிய ஜேசிடி பிரபாகர், விஜயின் ஆளுமைத் திறன், களத்தில் அவர் காட்டிய பொறுமை மற்றும் அவரது நற்பண்புகள் தான் மக்களிடம் அவருக்கு இந்த அளவிற்கான மிகப்பெரிய ஆதரவை பெற்றுத் தந்துள்ளதாகத் தெரிவித்தார். தற்போதைய அரசியல் சூழலில், வழக்கமான தேர்தல் உத்திகளைத் தாண்டி, ஒரு மாற்று அரசியலை மக்கள் எதிர்பார்ப்பதையே தவெக-வின் இந்த எழுச்சி காட்டுவதாக அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
ஜேசிடி பிரபாகரின் கருத்துப்படி, இத்தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான திருப்பமாகும். “ஜனநாயகமா அல்லது பணநாயகமா” என்ற நீண்ட நாள் கேள்விக்கு, மக்கள் இந்த முறை மிகத் தெளிவாக ஜனநாயகத்தைத் தேர்வு செய்து தங்களது தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற நினைக்கும் வழக்கமான நடைமுறைகளுக்குப் பாடம் புகட்டும் வகையில், நேர்மையான முறையில் தேர்தலைச் சந்தித்த விஜயின் அணுகுமுறைக்கு மக்கள் மத்தியில், குறிப்பாக நடுநிலையான வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தேர்தலின் மற்றொரு தனிச்சிறப்பாக அவர் குறிப்பிட்டது, வேட்பாளர்களின் தனிப்பட்ட பின்னணி குறித்த கேள்விகளைத் தாண்டி, “விஜயின் சின்னம்” மற்றும் அவரது தலைமை என்ற ஒற்றை நம்பிக்கை மக்கள் முன்னிலைப்படுத்தி வாக்களித்திருக்கிறார்கள் என்பதுதான்.
தனது உரையில் தற்போதைய ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) ஜேசிடி பிரபாகர் கடுமையாக விமர்சித்தார். “இன்றைக்கு அவர்கள் ஒன்றுமில்லை என்று செய்து காட்டியிருக்கிறார் விஜய்” என்று குறிப்பிட்ட அவர், “தளபதி விஜயா அல்லது தளபதி ஸ்டாலினா” என்ற அரசியல் போட்டியில், மக்கள் தங்களது விருப்பமாக விஜயையே தேர்வு செய்துள்ளனர் என்றும் கூறினார் .
பொதுவாக ஆளுங்கட்சிகளுக்குச் சாதகமாக இருக்கும் என்று கருதப்படும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகர்ப்புறப் பகுதிகளிலும் கூட, தமிழக வெற்றிக் கழகத்திற்கான ஆதரவு தளம் கணிசமாக அதிகரித்துள்ளது. இது மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் மாற்றத்திற்கான ஒரு தெளிவான மற்றும் வலுவான அறிகுறி .
எம்ஜிஆருடன் உணர்ச்சிபூர்வமான அவரது ஒப்பீடு :-இந்த அரசியல் நிகழ்வுகளின் உச்சகட்டமாக, விஜய்க்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் (எம்ஜிஆர்) காலத்தோடு ஒப்பிட்டு ஜேசிடி பிரபாகர் பேசியது “புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்தில் மக்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், தன்னிச்சையாகக் கூடினர். அதே போன்ற ஒரு காட்சியைத் தான் இன்று விஜய் செல்லும் இடமெல்லாம் பார்க்க முடிகிறது. அங்கு மக்கள் கூட்டம் தன்னிச்சையாகப் பெருகுகிறது” என்று அவர் உணர்ச்சிபூர்வமாகக் குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தில் நீண்ட காலமாக எம்ஜிஆர் போன்ற ஒரு மக்கள் தலைவர் கிடைக்கவில்லை என்று ஏங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு, இன்று விஜய் அந்த இடத்தைப் பூர்த்தி செய்யும் தலைவராகக் கிடைத்திருக்கிறார் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.









