
சென்னை , ஏப்ரல் 8 : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சென்னை பெரம்பூர் தொகுதி தற்போதைய முதன்மை விவாதப் புள்ளியாக மாறியுள்ளது. நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இந்தத் தொகுதியில் களம் காண்பதால் மாநிலம் தழுவிய கவனம் இங்கு குவிந்துள்ள நிலையில் வாக்காளர்களைக் குழப்பும் வகையில் ‘விஜய்’ என்ற ஒரே பெயரில் மேலும் பல வேட்பாளர்கள் இங்கு போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also : மணிப்பூர் வன்முறை: பிஷ்ணுபூர் குண்டுவெடிப்பில் இரு குழந்தைகள் பலி
கிருஷ்ணகிரி TVK வேட்பாளர்கள் திடீர் மாற்றம்: விஜய் எடுத்த அதிரடி முடிவு
தேர்தல் களத்தில் பிரதான வேட்பாளர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவும் வாக்காளர்களிடையே குழப்பத்தை உருவாக்குவதற்காகவும், ஒரே பெயருடைய நபர்களை சுயேச்சையாகவோ அல்லது சிறிய அமைப்புகளின் சார்பிலோ களம் இறக்குவது இந்திய அரசியலில் நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் ஒரு உத்தியாகும். ‘ப்ராக்ஸி கேண்டிடேட்ஸ்’ (Proxy candidates) எனப்படும் இந்த மாற்று வேட்பாளர்களின் களம் பெரம்பூர் தொகுதியில் தற்போது தீவிரமடைந்துள்ளது. இம்முறை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் சென்னையின் முக்கிய நகர்ப்புற தொகுதியான பெரம்பூரில் ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்திருப்பது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சி என்பதால் சின்னமும் கட்சியின் பெயரும் மக்களிடம் முழுமையாகச் சென்றடைய வேண்டிய கட்டாயத்தில் தமிழக வெற்றிக் கழகம் உள்ளது. இத்தகைய சூழலில் வாக்குச்சீட்டிலோ அல்லது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலோ ஒரே பெயரில் பல தெரிவுகள் இருப்பது குறிப்பாக கிராமப்புற மற்றும் குறைந்த தகவல்களுடன் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை விதைக்கும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது கட்சியின் அடிப்படை வாக்கு வங்கியைப் பாதிக்கக்கூடும் என்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பலத்த விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே சில முக்கிய நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களுடன் அவர்களின் புகைப்படங்களும் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஓரளவுக்குப் பெயர் குழப்பத்தைத் தவிர்க்க உதவும் என்றாலும், ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் வரிசையாக இருக்கும்போது வாக்காளர்கள் அவசரத்தில் தவறிழைக்க வாய்ப்புள்ளதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர்கள், நடுத்தரக் குடும்பங்கள் அதிகம் வசிக்கும் பெரம்பூர் தொகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு, வேலைவாய்ப்பின்மை மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த அடிப்படைப் பிரச்சினைகள் இந்தத் தேர்தலின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. இவற்றுடன் தற்போது எழுந்துள்ள இந்த ‘விஜய்’ பெயர் குழப்ப அரசியல் போட்டியும் இணைந்து , வரும் நாட்களில் பெரம்பூர் தொகுதித் தேர்தல் களம் இன்னும் பல திருப்பங்களைச் சந்திக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.





