திருநெல்வேலி , ஜூலை 4: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடையதும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் பல மாதங்களாக போலீசாருக்கு போக்கு காட்டி தலைமறைவாக இருந்த நபரை மேலப்பாளையம் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
நெல்லை மேலப்பாளையம் அமீன்புரம் 7-வது தெருவைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரின் மகன் பீர் முகமது (30). இவர் மீது ஏற்கனவே மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை திருநெல்வேலி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Also Read : தாக்குதல் வழக்கு: 16 ஆண்டுக்கு பின் 3 பேருக்கு அபராதம்; நீதிமன்றம் அதிரடி
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பீர் முகமது ஆஜராகவில்லை. தொடர்ந்து அவர் நீதிமன்ற விசாரணையைப் புறக்கணித்து வந்ததால் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை (Warrant) பிறப்பித்து உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் அவர் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார். சட்டத்தின் பிடியில் இருந்து தொடர்ந்து தப்பித்து வந்ததால் இது தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் ஜூலை 3-ஆம் தேதி அவர் மீது புதிதாக மற்றொரு வழக்கைப் பதிவு செய்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி மேலப்பாளையம் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்துடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் மடக்கிப் பிடிக்க முயன்றனர். போலீசாரைக் கண்டதும் அவர்களில் ஒருவர் மட்டும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடினார்.
அப்போது சிக்கிய 3 பேரிடம் போலீசார் நடத்திய சோதனையில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 350 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து கைதானவர்களிடம் தப்பியோடிய நபர் குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அது மேலப்பாளையம் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த அதே பீர் முகமது என்பது உறுதி செய்யப்பட்டது.
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வழக்கிலும் சரி, 4.350 கிலோ கஞ்சா கடத்திய வழக்கிலும் சரி போலீசாருக்குச் சிக்காமல் பீர் முகமது தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார். அவரைப் பிடிக்க மேலப்பாளையம் தனிப்படை போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று அவரது மறைவிடத்தை முற்றுகையிட்டு போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். மேற்கண்ட இரண்டு வழக்குகளிலும் பீர் முகமதுவை முறைப்படி கைது செய்துள்ள மேலப்பாளையம் போலீசார் அவரிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





