மயிலாடுதுறை , ஜூன் 30: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாத்தங்குடி கிராமத்தில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் இருவர் கீற்றுக் கொட்டகை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் இது திட்டமிட்ட ஆணவக்கொலை என்று குற்றம் சாட்டியுள்ள நிலையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தரங்கம்பாடி தாலுக்கா புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் பார்த்திபன் (19) கொத்தனார் வேலை செய்து வந்தார். அதே பகுதிக்கு அருகிலுள்ள சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் மகள் திவ்யதர்ஷினி (16) அண்மையில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கல்லூரியில் சேருவதற்காகக் காத்திருந்தார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த சில காலமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவந்ததை அடுத்து இரு குடும்பத்தாருக்கும் இடையே கடுமையான மோதலும் தொடர் பஞ்சாயத்துகளும் ஏற்பட்டுள்ளன. இந்த மோதலின் உச்சமாக பெண் வீட்டார் தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாகக் கூறி பார்த்திபனின் குடும்பத்தினர் நேற்று பொறையார் காவல் நிலையத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (PCR) கீழ் புகார் ஒன்றையும் அளித்துள்ளனர்.
பெங்களூர் – நாகர்கோவில் பஸ்சில் கடத்திய 250 கிலோ புகையிலை கோவில்பட்டியில் பறிமுதல்: டிரைவர் கைது
இந்தச் சூழலில் இன்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் சாத்தங்குடி கிராமத்தில் உள்ள குமரவேல் என்பவருக்குச் சொந்தமான தென்னங்கீற்றுக் கொட்டகையில் பார்த்திபனும் திவ்யதர்ஷினியும் தனித்தனியாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினருக்கும், பொறையார் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு முப்பதிற்கும் மேற்பட்ட போலீஸார் விரைந்து வந்து சடலங்களை மீட்க முயன்றனர். உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கிராமத்தில் சாதிய மோதலோ அல்லது சட்டம் ஒழுங்கு பிரச்சினையோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) சுரேஷ், டிஎஸ்பி சரவணன் ஆகியோர் நேரில் வந்து பாதுகாப்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.
அப்போது அங்கு திரண்ட இருதரப்பு உறவினர்களும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சூழல் பதற்றமானது. போலீஸார் இருதரப்பையும் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தங்கள் மகனைப் பெண் வீட்டாரே அடித்துக் கொன்று தற்கொலை போல ஜோடித்துத் தூக்கில் தொங்கவிட்டு ஆணவக்கொலை செய்துள்ளதாகப் பார்த்திபனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த மரணத்தால் ஆத்திரமடைந்த எதிர்தரப்பினர் உயிரிழந்த சிறுமியின் உறவினர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் வாகனங்களை அடித்து உடைத்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இதனால் சாத்தங்குடி மற்றும் புதுப்பாளையம் கிராமங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காதலர்கள் இருவரும் சாதி மறுப்புக் காதலால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது இளைஞர் தரப்பு கூறுவது போல இது ஆணவக்கொலையா என்ற இருவேறு கோணங்களில் பொறையார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





