கோவில்பட்டி , ஜூன் 30: பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பஸ்சில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கோவில்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பஸ்சின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையப் பகுதி வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பெருமளவில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கூடுதல் பஸ் நிலையப் பகுதியில் தீவிர வாகன தணிக்கை மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பஸ் ஒன்றை போலீசார் மறித்து சோதனையிட்டனர். பஸ்சின் சரக்கு வைக்கும் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மூட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை பிரித்து சோதித்தபோது தமிழக அரசால் முற்றிலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேல்மலையனூர் கோயிலில் ஆனி பௌர்ணமி திருவிளக்கு பூஜை
மொத்தம் ஆறு மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 250 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட தனியார் ஆம்னி பஸ்சையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பஸ் ஆகியவை கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தடை செய்யப்பட்ட பொருட்களை பஸ்சில் கடத்தி வந்ததாக திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையைச் சேர்ந்த சங்கரன் மகன் பாலமுருகன் (டிரைவர்) என்பவரை கைது செய்தனர். பெங்களூரில் இருந்து இந்த புகையிலைப் பொருட்களை பஸ்சில் ஏற்றி அனுப்பியது யார், தென் மாவட்டங்களில் இவை யாருக்கு விநியோகம் செய்யப்படவிருந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




