ஆந்திராவில் ‘கேஜிஎஃப்’ பாணியில் அமையும் இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம்

அமராவதி , ஜூன் 29: ஆந்திராவில் ஜொன்னகிரி திட்டம்! நம் நாட்டில் திருமணம், காதுகுத்து என எந்தவொரு மங்களகரமான நிகழ்வு என்றாலும் சாமானிய மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை பலரது முதல் தேர்வு தங்கமாகவே இருக்கிறது. உலக அளவில் தங்கத்தை அதிக அளவில் நுகரும் மக்களாக இந்தியர்கள் இருந்தாலும் நாம் அணியும் சங்கிலி, மோதிரம், வளையல் உள்ளிட்ட ஆபரணங்களுக்கான தங்கத்தில் முக்கால்வாசிப் பங்கு இந்திய மண்ணில் இருந்து எடுக்கப்படுவது கிடையாது. நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்ய ஆஸ்திரேலியா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தே பெருமளவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

India's First Private Gold Mine in Andhra Pradesh to Be Developed in KGF-Style, Marking a New Era in India's Gold Mining Industry

இந்தியாவில் தங்கச் சுரங்கம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கர்நாடகாவின் புகழ்பெற்ற ‘கேஜிஎஃப்’ (KGF – கோலார் தங்க வயல்) மட்டுமே. ஆனால் பல காரணங்களால் அந்தச் சுரங்கம் மூடப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தச் சூழலில் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக அரசு நிறுவனம் இல்லாமல் முழுமையாக ஒரு தனியார் கூட்டமைப்பு இணைந்து நாட்டின் மிகப்பெரிய புதிய தங்கச் சுரங்கத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

also : மும்பையில் 30,000 உயிர்களைப் பறிக்க சதி? மொஹரம்  ஊர்வலத்தில் பரபரப்பு பின்னணியில் ஈரான் சதியா ?

8 ஆண்டு காலத் தேடலும் ரூ.450 கோடி முதலீடும்

ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ‘ஜொன்னகிரி’ என்ற கிராமத்தில் இப்புதிய தங்கச் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 8 ஆண்டுகால தீவிரத் தேடல் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகே இப்பகுதியில் தங்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஆந்திர அரசு ‘ஜொன்னகிரி’ கிராமத்திற்கு ‘சொர்ணகிரி’ (சொர்ணம் என்றால் தங்கம், கிரி என்றால் மலை) என்ற அடையாளப் பெயரைச் சூட்டியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே தங்கச் சுரங்கங்களை இயக்கி வந்த நிலையில் வணிக ரீதியாக முதன்முறையாக இரு தனியார் நிறுவனங்கள் இணைந்து இம்முயற்சியில் இறங்கியுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘திரிவேணி எர்த் மூவர்ஸ்’ (Triveni Earthmovers) மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ‘ஜியோ மைசூர் சர்வீசஸ்’ (Geo Mysore Services) ஆகிய நிறுவனங்கள் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதில் ஜியோ மைசூர் நிறுவனம் ‘டெக்கான் கோல்டு மைன்ஸ் லிமிடெட்’ (Deccan Gold Mines Ltd) நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகிறது. இக்கூட்டமைப்பினர் ஒட்டுமொத்தமாக சுமார் 450 கோடி ரூபாய் நிதியை இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர்.

40 கோயம்பேடு பேருந்து நிலைய பரப்பளவு

இப்பகுதியில் தங்கம் எடுப்பதற்காக அரசுத் தரப்பில் மொத்தம் 1,500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பிரம்மாண்டத்தை விளக்க வேண்டுமானால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் போல் சுமார் 40 மடங்கு பெரிய பரப்பளவைக் கொண்டதாகும். தற்போதைய முதற்கட்டப் பணிகளுக்காக 600 ஏக்கர் நிலத்தில் மட்டும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள நிலப் பரப்புகள் வருங்காலத்தில் பணிகளின் தேவைக்கேற்ப படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கச் சுரங்கத் தொழில் என்பது அதிக உழைப்பும் பொறுமையும் தேவையானது. இங்கு பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்படும் சுமார் 10 கிலோ எடையுள்ள பாறையை உடைத்துச் சுத்திகரித்தால் அதிலிருந்து வெறும் 0.5 கிராம் முதல் 1 கிராம் வரையிலான தங்கம் மட்டுமே கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உற்பத்தி இலக்கும் ஆந்திர அரசுக்கான வருவாயும்

சுரங்கத்தின் ஆரம்பக்கட்டப் பணிகளின்படி முதல் ஆண்டில் 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டில் இந்த உற்பத்தியை ஆண்டுக்கு 900 கிலோவாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இத்திட்டம் முழுமையான விரிவாக்கத்தை எட்டும்போது ஆண்டுக்கு 2,000 கிலோ (2 டன்) தங்கம் வரை உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல நூறு டன் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் இந்தியாவிற்கு உள்நாட்டிலேயே கிடைக்கும் இந்த உற்பத்தி மிகப்பெரிய அளவில் உதவும்.

தங்கம் என்பது நாட்டின் இயற்கை வளம் என்பதால் இதனைத் தனியார் நிறுவனங்கள் வெட்டி எடுத்தாலும், அதன் மதிப்பில் குறிப்பிட்ட சதவீதத்தை அரசுக்கு ராயல்டியாக (உரிமைத்தொகை) செலுத்த வேண்டும். அந்த வகையில் ஆந்திர அரசாங்கத்திற்கு இத்திட்டத்தின் மூலம் 4 சதவீத ராயல்டி வருவாய் கிடைக்கும். அரசுத் தரப்பு கணக்கீட்டின்படி ஆண்டுக்கு 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்படும் போது சுமார் 57 கோடி ரூபாய் வருமானமும் உற்பத்தி 900 கிலோவாக உயரும்போது அதற்கேற்ப கூடுதல் வருவாயும் ஆந்திர அரசுக்குக் கிடைக்கப் பெறும்.

கேஜிஎஃப் சுரங்கத்திற்கும் சொர்ணகிரிக்கும் உள்ள வேறுபாடு

வரலாற்றுப் புகழ்பெற்ற கேஜிஎஃப் சுரங்கத்துடன் ஒப்பிடும்போது இந்தச் சொர்ணகிரி திட்டம் சில தொழில்நுட்ப வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. கேஜிஎஃப் சுரங்கத்தில் கடந்த 120 ஆண்டுகளில் சுமார் 800 முதல் 900 டன் தங்கம் எடுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக ஆழமான தங்கச் சுரங்கங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட கேஜிஎஃபில், தங்கம் இருக்கும் பகுதி மிக ஆழத்திற்குச் சென்றதாலும் இருப்பு குறைந்ததாலும் அதனைத் தோண்டி எடுப்பதற்கான செலவு பல மடங்கு அதிகரித்தது. இதன் காரணமாகவே காலப்போக்கில் அச்சுரங்கம் மூடப்பட்டது.

ஆனால் ஜொன்னகிரி (சொர்ணகிரி) திட்டத்தில் தங்கம் எடுக்கும் முறை முற்றிலும் மாறுபட்டது. இங்கு பூமிக்கு அடியில் மிக ஆழமாகச் சுரங்கப் பாதைகளை அமைக்க வேண்டிய அவசியமில்லை. தங்கம் கலந்த பாறைகள் பூமியின் மேலோட்டப் பகுதியிலேயே காணப்படுவதால் ‘ஓபன் காஸ்ட்’ (Open Cast) எனப்படும் திறந்தவெளிச் சுரங்க முறையில் மேலோட்டமாகப் பெரிய குழிகளைத் தோண்டி எளிதாகப் பாறைகளை வெட்டி எடுத்துவிட முடியும். இதனால் உற்பத்திச் செலவும் கணிசமாகக் குறையும்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *