விழுப்புரம் , ஜூன் 28:விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த திருவக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நூற்றாண்டு பழமையான வடிவாம்பிகை உடனுரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் கோபுரக் கலசங்கள் மாயமாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கோயிலின் வளாகத்தில் உள்ள விநாயகர் மற்றும் நடராஜர் சன்னதிகளின் விமான கோபுரங்களில் வைக்கப்பட்டிருந்த இரண்டு செப்பு கலசங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் சன்னதி கோபுரங்களில் கலசங்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து இது குறித்து உடனடியாக கோயில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிர்வாகத்தினர் நடத்திய முதற்கட்ட சோதனையில் இரண்டு செப்பு கலசங்களும் திட்டமிட்டுத் திருடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆலய நிர்வாகம் தரப்பில் வானூர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் உறங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயம்… கிணற்றில் சடலமாக மீட்பு!
புகாரின் பேரில் வானூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் திருவக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமராக்களின் காட்சிகளைச் சேகரித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் நடந்துள்ள இந்த திருட்டுச் சம்பவம் உள்ளூர் மக்களிடையேயும், ஆன்மீக அன்பர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கலசங்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.





