சென்னை , ஜூன் 25 : தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவையை நிறைவு செய்யவும், வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைத் தவிர்க்கவும் புதிய நீண்டகால மின் ஒப்பந்தங்களை மேற்கொள்ள தமிழக மின்சார வாரியம் (டான்ஜெட்கோ) திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மின் வாரியத்திற்கு ஒவ்வொரு மாதமும் 215 கோடி ரூபாய் வரை சேமிப்பு ஏற்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.

தமிழகத்தின் தற்போதைய மின் தேவை மற்றும் அதனைப் பூர்த்தி செய்யும் விதம் குறித்த வெள்ளை அறிக்கையை விளக்கி அமைச்சர் பேசியதாவது:
தமிழகத்தின் தினசரி மின் தேவை தற்போது உச்சகட்டமாக 21,307 மெகாவாட் என்ற அளவை எட்டியுள்ளது. தினசரி தேவையைப் பொறுத்து இதில் 200 முதல் 500 மெகாவாட் வரை ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது வழக்கம். இந்த ஒட்டுமொத்த மின் தேவையை மின் வாரியம் மூன்று முக்கிய வழிகளில் பூர்த்தி செய்து வருகிறது. முதலாவதாக தமிழக மின் வாரியத்திற்குச் சொந்தமான நீர்மின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள் மற்றும் எரிவாயு மின் நிலையங்கள் மூலம் சராசரியாக 3,495 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த வாரங்களில் அனல் மின் நிலையங்களின் உற்பத்தி திறன் 4,000 மெகாவாட் வரை உயர்ந்தாலும் உற்பத்தி நிலையங்களின் செயல்பாட்டுத் திறனைப் பொறுத்து இந்த அளவு தினசரி மாறுதலுக்கு உட்பட்டது.
மின் தேவையை நிறைவு செய்யும் இரண்டாவது காரணியாக தமிழகத்திற்குள்ளேயே செயல்படும் தனியார் மற்றும் இதர மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. சூரிய ஒளி, காற்று மற்றும் சுய தேவைக்கான மின் உற்பத்தி நிலையங்கள் (கேப்டிவ்) மூலம் மொத்தம் 4,246 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. இதற்கான சராசரி கொள்முதல் விலையாக காற்று ஆலை மின்சாரத்திற்கு 2 ரூபாய் 92 பைசாவும், சூரிய ஒளி மின்சாரத்திற்கு 3 ரூபாய் 61 பைசாவும் வழங்கப்படுகிறது. சுய தேவை மின் உற்பத்தியாளர்களிடமிருந்து சராசரியாக 6 ரூபாய் 50 பைசா என்ற விலையில் மின்சாரம் பெறப்படுகிறது.
மூன்றாவது மற்றும் முக்கிய ஆதாரமாக மத்திய தொகுப்பு மற்றும் இதர மாநிலங்களில் இருந்து 13,566 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. இதில் நீண்டகால ஒப்பந்தங்கள் தவிர குறுகிய கால ஒப்பந்தங்கள் (Short Term Open Access) மற்றும் தினசரி மின் சந்தை (Exchange Market) மூலமும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் பெறப்படும் மின்சாரத்திற்கு சராசரியாக 6 ரூபாய் 66 பைசாவும், மின் சந்தையில் வாங்கும் மின்சாரத்திற்கு 8 ரூபாய் 91 பைசாவும் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
மாலை நேரங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி இல்லாத காலங்களிலும், குறிப்பிட்ட சில மாதங்களில் காற்றின் வேகம் குறையும் போதும் மின் தேவை எதிர்பாராத விதமாக அதிகரிக்கும். இத்தகைய அவசர காலங்களில் மத்திய தொகுப்பில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் விலை யூனிட் ஒன்றுக்கு 16, 17 மற்றும் ஒரு சில நேரங்களில் 21 ரூபாய் வரை மிக அதிக விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயம் மின் வாரியத்திற்கு ஏற்படுகிறது. தினசரி சந்தையில் 3,000 மெகாவாட் மின்சாரத்தை இவ்வாறு அதிக விலை கொடுத்து வாங்குவதால் மின் வாரியத்திற்குப் பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது.
இந்த நிதி கசிவுகளைத் தடுக்கும் பொருட்டு மின் வாரியம் தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதன்படி அதிக விலை கொண்ட குறுகிய கால ஒப்பந்தங்கள் மற்றும் தினசரி மின் சந்தை கொள்முதலைக் குறைத்து அவற்றுக்குப் பதிலாகப் புதிய நீண்டகால மின் ஒப்பந்தங்களை (Long Term Contract) மேற்கொள்ளும் பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, தலா 1000 மெகாவாட் மின்சாரத்தை 6 ரூபாய் என்ற நிலையான விலையில் நீண்டகால அடிப்படையில் வாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடுத்த சில வாரங்களில் இந்த நீண்டகால மின் ஒப்பந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும். இதன் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, தமிழக மின் வாரியத்திற்கு ஒவ்வொரு மாதமும் 215 கோடி ரூபாய் வரை நிதி சேமிக்கப்படும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.





