நெல்லை , ஜூன் 22: தமிழக முதல்வர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் பரவலாக நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகர் மேலப்பாளையம் அருகே உள்ள குறிச்சி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் மரிய ஜான் நேரில் கலந்துகொண்டார். முன்னதாக குறிச்சி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற முத்தாரம்மன் கோவிலில் கட்சியின் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தமிழக முதல்வரின் ஆயுள் ஆரோக்கியத்திற்காகவும், மக்கள் நலனுக்காகவும் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கோவில் வழிபாடுகளைத் தொடர்ந்து அப்பகுதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. இதில் ஏழை எளிய மக்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உணவருந்தினர்.
அன்னதான நிகழ்வைத் தொடர்ந்து முதல்வரின் 52-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்ட 52 பயனாளிகளுக்கு தலா ஒரு அரிசி பை உள்ளிட்ட அத்தியாவசிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாகவும், பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கிலும் 52 நபர்களுக்கு இலவச மரக்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டன.
நெல்லை குறிச்சி பகுதியில் நடைபெற்ற இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் வடக்கு மாவட்ட முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் முகாம்களாகத் திரண்டு கலந்துகொண்டனர். மாவட்டம் முழுவதும் தவெக தொண்டர்கள் பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு இந்த நாளைக் கொண்டாடினர்





