TN Assembly : கோவில் நிதி விவகாரம்: பேரவையில் தவெக – திமுக இடையே காரசார விவாதம்

சென்னை , ஜூன் 22: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, இந்து சமய அறநிலையத்துறையின் நிதி பயன்பாடு மற்றும் கோவில் சொத்துக்கள் தொடர்பாக தமிழக வெற்றி கழக (தவெக) சட்டமன்றக் குழுத் தலைவர் உதயநிதி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோருக்கு இடையே கடுமையான வாக்குவாதமும் விவாதமும் நடைபெற்றது.

image 315

ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள அறநிலையத்துறை தொடர்பான கொள்கை விளக்கக் குறிப்பு, பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) அரசியல் நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாக உள்ளதா என்ற எதிர்க்கட்சியினரின் கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் விரிவான விளக்கமளித்தார். முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் இந்த விவாதத்தில் குறுக்கிட்டுத் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

TN Assembly : சபையில் கேலி சைகை செய்த எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை! இனி உரிமை மீறல் நடவடிக்கை

ஆளுநர் உரை மீதான சந்தேகம்

விவாதத்தைத் தொடங்கிப் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்றக் குழுத் தலைவர் உதயநிதி, “அறநிலையத்துறையின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் வருவாய் அதன் புனிதமான நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாசகத்தைப் பார்க்கும்போது அறநிலையத்துறையே இருக்கக் கூடாது என்று தொடர்ந்து பேசி வரும் பாஜக மற்றும் வலதுசாரிகளின் குரலாகத்தான் தவெக அரசின் இந்த அறிவிப்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும் “அறநிலையத்துறை கல்வி நிறுவனங்களையோ, பள்ளி மற்றும் கல்லூரிகளையோ நடத்தக் கூடாது என்று கூறி வலதுசாரிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அரசின் இந்த புதிய நிலைப்பாடு திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதோடு நின்றுவிடுமா அல்லது கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்துமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் ரமேஷின் விளக்கம்

இதற்குப் பதிலளித்துப் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், “கோவில்களின் வருமானம், அந்தந்த கோவில்களின் பயன்பாட்டிற்கும் அங்கு வரக்கூடிய பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்காகவும் மட்டுமே செலவிடப்படும் என்பதுதான் ஆளுநர் உரையின் உண்மையான சாராம்சம். இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை” என்றார்.

சமீபத்தில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கிய அமைச்சர், “கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு இன்னும் பணிகள் ஆரம்பிக்கப்படாமல் இருந்த சில திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகத் திட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், கோவில்களில் பக்தர்களுக்குத் தேவையான தங்குமிடம், கழிவறை மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்துவதை விடுத்து முழுக்க முழுக்க வணிக நோக்கில் (Commercial) வருவாய் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அவை திட்டமிடப்பட்டிருந்தன. மேலும், இத்திட்டங்கள் தொடர்பாகப் பல நீதிமன்ற வழக்குகளும், இடைக்காலத் தடைகளும் (Stay orders) அமலில் இருந்ததால் அவற்றை ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

குன்னூர் விவகாரமும் 10 கோடி ரூபாய் திட்டமும்

கடந்த ஆட்சியில் கோவில் நிதிகள் எவ்வாறு கையாளப்பட்டன என்பதற்கு ஒரு உதாரணத்தைக் குறிப்பிட்ட அமைச்சர் ரமேஷ், “குன்னூரில் உள்ள அருள்மிகு விநாயகர் திருக்கோவிலில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் (Multi-level Car Parking) அமைப்பதற்குக் கடந்த ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த கோவிலுக்கு மாதத்திற்கே சராசரியாக 500 பக்தர்கள் மட்டும்தான் வருகிறார்கள். அதைவிட முக்கியமாக அந்த கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை கழிவறை வசதி கூட இல்லை.

குன்னூர் மற்றும் உதகை சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கோவில்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதபோது, 10 கோடி ரூபாய் கோவில் நிதியை எடுத்து வணிக ரீதியிலான வாகன நிறுத்துமிடம் கட்டுவது ஏன்? இது வணிக நோக்கம் இல்லையா? இதற்கு எதிராகத்தான் இந்த அரசு செயல்படுகிறது. எங்கள் அரசாணையின் கடைசி வரியைத் தெளிவாகப் படித்தால் புரியும் கோவில் நிதியைப் பயன்படுத்தி பக்தர்களுக்கும் கோவிலுக்கும் பயன்படும் மாற்றுத் திட்டங்கள் உருவாக்கப்படும் என்றுதான் கூறியுள்ளோம். கல்வி நிறுவனங்களையோ மருத்துவமனைகளையோ அமைக்க மாட்டோம் என்று எங்கும் கூறவில்லை” என்று விளக்கினார்.

பழனி சித்த மருத்துவமனைத் திட்டம் குறித்துப் பேசிய அமைச்சர், “கடந்த ஐந்து ஆண்டு கால ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் பழனியில் சித்த மருத்துவமனை கட்டும் திட்டத்தைக் கடந்த ஆட்சித் துறை தொடர் செலவினங்களை (Recurring expenditure) ஏற்க முடியாது எனக் கூறி முடக்கி வைத்திருந்தது. ஆனால், தற்போதைய தவெக அரசு அந்தத் திட்டத்தைக் கையில் எடுத்து அதைத் தொடங்குவதற்கான முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. எனவே மக்கள் நலத்திட்டங்களை நாங்கள் எங்கும் தடுக்கவில்லை. நாங்கள் யாருக்கும் ‘பி டீம்’ (B-Team) ஆகச் செயல்பட வேண்டிய அவசியமும் இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவின் மறுப்பு

அமைச்சரின் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதற்காக முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவையில் குறுக்கிட்டுப் பேசினார். “இந்து சமய அறநிலையத்துறை கொடைகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டும் சட்டப்பிரிவு 36 மற்றும் விதி 69-ன் கீழ் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றியும்தான் கடந்த ஆட்சியில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஏதோ அமைச்சரே தனிச்சையாக முடிவெடுத்து திருமண மண்டபங்களையும், வணிக வளாகங்களையும் கட்ட உத்தரவிட்டது போல அமைச்சர் அவைக்கு உண்மைக்கு மாறான தகவலைத் தருகிறார். அன்றைய காலகட்டத்தில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன” என்றார்.

மேலும் குன்னூர் வாகன நிறுத்துமிடம் குறித்துப் பேசிய சேகர் பாபு “குன்னூர் மற்றும் ஊட்டி பகுதிகளில் உள்ள 56 கோவில்களுக்கும் நான் நேரடியாக ஐந்து நாட்கள் முகாமிட்டு ஆய்வு நடத்தினேன். குன்னூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்தப் போதிய இடமில்லாமல் நகராட்சி நிர்வாகம் திணறியது. அங்கு மல்டி லெவல் பார்க்கிங் அமைத்தால் நகராட்சி மூலமாகக் கோவிலுக்கு நிலையான வருமானம் பெருகும், அந்த வருவாயைக் கொண்டு பிற கோவில்களை மேம்படுத்தலாம் என்ற நோக்கில்தான் நகராட்சியின் பரிந்துரையின் பேரில் அது கொண்டு வரப்பட்டது. இன்று அரசாணை வெளியிட்டுள்ள அதே அதிகாரிகள்தான் அன்றைக்கு ஆணையாளராக இருந்தபோது இதற்கான பரிந்துரையையும் வழங்கியிருந்தனர்” என்று சுட்டிக்காட்டினார்.

பேரவைத் தலைவரின் தலையீடு

இதற்கு மீண்டும் பதிலளித்த அமைச்சர் ரமேஷ், “நகராட்சி நிர்வாகம் பரிந்துரை வழங்கியபோது, கோவிலுக்குச் சொந்தமான நிலத்தைக் குத்தகைக்கு (Lease) விட்டுக் கோவில் வருவாயைப் பெருக்கியிருக்கலாம். அதை விடுத்து ஒட்டுமொத்த கோவில் நிதியான 10 கோடி ரூபாயை எடுத்து ஏன் அங்குச் செலவிட வேண்டும்? பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கேட்பது மனநிறைவான தரிசனமும் அடிப்படை வசதிகளுமே தவிர, மல்டி லெவல் பார்க்கிங் அல்ல” என்று பதிலடி கொடுத்தார்.

இருதரப்பிலும் வாதங்கள் நீடித்ததை அடுத்து முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீண்டும் விளக்கம் அளிக்க முற்பட்டார். அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர், “ஏற்கனவே அமைச்சர் விளக்கம் அளித்துவிட்டார் அதற்கு நீங்களும் பதில் சொல்லிவிட்டீர்கள். மல்டி லெவல் கார் பார்க்கிங் தேவை என்று நீங்கள் கூறுகிறீர்கள், தேவையில்லை என்று அமைச்சர் கூறுகிறார். இதோடு இந்த விவாதம் முடிந்தது. அமைச்சர் உங்களின் மீது எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை, திட்டத்திற்கான விளக்கத்தை மட்டுமே அளித்துள்ளார். எனவே, அடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் பேசலாம்” என்று கூறி விவாதத்தை முடித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவை முன்னவரும் விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியதால் பேரவையில் நிலவிய பரபரப்பு அடங்கியது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *