சென்னை , ஜூன் 19 : சென்னையை அடுத்த தாம்பரம் அருகே குடும்பத் தகராறு காரணமாகக் கணவரின் காலை உடைக்கக் கூலிப்படைக்கு நான்கு லட்சம் ரூபாய் பேசி, முன்பணமாக மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்த மனைவி உட்பட மூன்று பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். கணவனின் காலை உடைத்துவிட்டுத் தப்பிய கூலிப்படை நபருக்கு, அதே நாளில் நடந்த விபத்தில் அதே கால் முறிந்த விசித்திர சம்பவமும் இதில் அரங்கேறியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த வேங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். இவருக்கும் வசந்தா என்ற பெண்ணுக்கும் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பதினொரு வயதில் மகன் ஒருவர் உள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோவில் கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற வசந்தா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. கணவன் தாமோதரன் பல இடங்களில் தேடியபோது வசந்தாவுக்கு ஓர் ஆட்டோ ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டு தனது ஐந்து வயது குழந்தையையும் கணவனையும் தவிக்க விட்டுவிட்டு அவருடன் உறத்தூர் பகுதியில் வசித்து வந்தது தெரியவந்தது.
also : சென்னையை சுற்றி வளைத்த கருமேகங்கள்.. இதுதான் காரணமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்
மதுரையிலிருந்து கடத்தப்பட்ட 1 கிலோ கஞ்சா பறிமுதல்: நெல்லையில் வாலிபர் கைது
தாமோதரன் பல முறை நேரில் சென்று மனைவியின் காலில் விழுந்து கதறி அழைத்தும் வசந்தா வர மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த தாமோதரன் தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு வசந்தா திடீரென தாமோதரனிடம் வந்து தனது மகனைத் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்குத் தாமோதரன் எனக்குத் துரோகம் செய்த உன்னோடு என் குழந்தையை அனுப்ப முடியாது எனக் திட்டவட்டமாகக் கூறி வசந்தாவைத் திட்டி அனுப்பியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வசந்தா தாமோதரனைப் பழிவாங்கத் திட்டம் தீட்டியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தாமோதரனின் கைபேசிக்கு வந்த ஓர் அழைப்பில், நீங்கள் ஆர்டர் செய்த பார்சல் வந்துள்ளது முகவரியைக் கூறுங்கள் என்று கேட்டுள்ளனர். அதை நம்பி தாமோதரனும் தனது வீட்டு முகவரியைக் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் பார்சலைக் கொடுப்பது போல நடித்து கண் இமைக்கும் நேரத்தில் தாமோதரனைக் கீழே தள்ளிவிட்டுத் தங்கள் கையில் வைத்திருந்த இரும்பு பேஸ்பால் பேட்டனால் அவரது வலது காலைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். தாமோதரனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது வயதான தாயாரையும் அந்தக் கும்பல் கீழே தள்ளிவிட்டுத்ாக்கியுள்ளது.
பொதுமக்கள் திரள்வதைக் கண்ட கூலிப்படையினர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். படுகாயமடைந்த தாமோதரனை மீட்ட பொதுமக்கள் அவரைத் தாம்பரம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களின் இருசக்கர வாகனப் பதிவு எண்களை வைத்துப் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சென்னையைச் சேர்ந்த பரத் மற்றும் அகஸ்டின் என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி பொன்மணி என்பவரிடம் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து பொன்மணியைக் கைது செய்து விசாரித்தபோதுதான் தாமோதரனின் மனைவி வசந்தா தன் கணவரின் உயிருக்கு ஆபத்து வராமல் கால்களை மட்டும் உடைப்பதற்காக நான்கு லட்சம் ரூபாய் பேசி மூன்றரை லட்சம் ரூபாய் முன்பணமாகக் கொடுத்த அதிர்ச்சி உண்மை வெளிவந்தது.
இந்த வழக்கில் மற்றொரு சுவாரசியமான திருப்பமாகத் தாமோதரனின் காலை இரும்பு பேட்டினால் அடித்து உடைத்த குற்றவாளி அகஸ்டின் சம்பவத்தன்று தாக்குதலை முடித்துவிட்டு மதுரவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும்போது நிலைதடுமாறிக் கீழே விழுந்துள்ளார். இதில் விசித்திரமாக அவர் தாமோதரனுக்கு எந்தக் காலை உடைத்தாரோ அதே கால் அகஸ்டினுக்கும் முறிவடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கூலிப்படை ஏவிய மனைவி வசந்தா, ரவுடி பொன்மணி மற்றும் பரத் ஆகியோரைக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திச் சிறையில் அடைத்தனர். கால் முறிவு ஏற்பட்டுச் சிகிச்சை பெற்றவரும் கூலிப்படை நபருமான அகஸ்டினைத் தற்போதைக்குச் சிறைக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை நிலவுவதால் அவர் மீது பிரிவு 41-இன் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் எப்பொழுது அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அவரது கால் குணமடைந்த பிறகு அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடரும் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.





