கோவை , ஜூன் 18 : கோவையில் நீட் மற்றும் ஜேஇஇ (JEE) நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சிக் கட்டண முன்பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்ததாக, தனியார் சிபிஎஸ்இ பள்ளித் தலைவர் மற்றும் பயிற்சி மைய நிறுவனர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கோவை காளப்பட்டி பகுதியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்தப் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு நீட் (NEET) மற்றும் ஜேஇஇ (JEE) நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காகப் பள்ளி நிர்வாகமும், தனியார் நீட் பயிற்சி மையமும் இணைந்து மாணவர்களிடம் இருந்து பெருந்தொகையை முன்பணமாக வசூலித்துள்ளன.
ஆனால், உறுதியளித்தபடி மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் அதிருப்தியடைந்த பெற்றோர், தங்களது பிள்ளைகளை அந்தப் பயிற்சியில் இருந்து விடுவிக்குமாறும், தாங்கள் செலுத்திய முன்பணத்தைத் திரும்ப வழங்குமாறும் கோரியுள்ளனர்.பலமுறை வற்புறுத்திக் கேட்டும், வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகையைத் திருப்பித் தராமல் பள்ளி நிர்வாகமும் நீட் பயிற்சி மையமும் இழுத்தடித்து வந்ததாகத் தெரிகிறது.
also : தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களிலும், நாளை 27 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு
கட்டணப் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றி, மோசடியில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறை, சம்பந்தப்பட்ட சிபிஎஸ்இ பள்ளியின் தலைவர் லட்சுமி நாராயணசாமி மற்றும் நீட் பயிற்சி மைய நிறுவனத் தலைவர் தினேஷ் குமார் கோயல் ஆகிய இருவர் மீதும் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது.இந்தச் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கல்வி நிறுவனங்களின் கட்டண முறைகேடுகள் குறித்த விவாதத்தையும் எழுப்பியுள்ளது.








