சென்னை , ஜூன் 18 : தமிழகத்தில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பரவலான பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு பதிவாகியுள்ள சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.இதுதவிர திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், சிவகங்கை, ராணிப்பேட்டை மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.இதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு பின் நீதி : கரூர் மாணவி சோனாலி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்த மதுரை அமர்வு
நாளைய தினம் மழையின் தாக்கம் மேலும் வலுவடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி நாளை தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை முன்னறிவிப்பு கூறுகிறது.நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 27 மாவட்டங்கள் இந்த எச்சரிக்கை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த அடுத்த இரு தினங்களுக்கான பலத்த மழைக்குப் பிறகு, வரும் 24-ஆம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை மட்டுமே பெய்ய வாய்ப்புள்ளது.இந்த 48 மணி நேர மழைப்பொழிவுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை திடீரென பெய்யக்கூடும்.சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வந்தது.தற்போதைய மழை வாய்ப்பு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து, அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.








