கோவில்பட்டி அம்மா உணவகத்தில் முறைகேடு: ஹோட்டல்களுக்கு மொத்தமாக இட்லி விற்பனை

கோவில்பட்டி  ,ஜூன் 16 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தின் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ,பொதுமக்களுக்கு இட்லி வழங்காமல் தனியார் ஹோட்டல்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த உணவகத்தில் ,முறைகேடுகள் தங்குதடையின்றி நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த அம்மா உணவகத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் ,முதியவர்கள் ,பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் ,வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினர் நாள்தோறும் காலையில் உணவருந்தி வருகின்றனர். இங்கு தினசரி காலையில் சராசரியாக 1,200 இட்லிகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும். பொதுவாகவே காலை 7:00 மணிக்கு இங்கு இட்லி விற்பனை தொடங்குவது வழக்கம்.

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: அஸ்ஸாம் தாய் ,மகன் உயிரிழப்பு; உடல்களை மீட்க உறவினர்கள் தவிப்பு

ஆனால் ,சமீப காலமாக உணவகம் திறக்கப்பட்ட அரை மணி நேரத்திற்குள்ளாகவே ,அதாவது 7:30 மணிக்கெல்லாம் இட்லி விற்பனை முடிந்துவிட்டதாக ஊழியர்கள் அறிவிக்கின்றனர். காலை உணவிற்காக இங்கு வரும் சாமானிய மக்கள் இட்லி கேட்டால் ‘இல்லை’ என்ற பதிலே ஊழியர்களிடம் இருந்து அழுத்தமாக வருகிறது.

அதே நேரத்தில் ,அப்பகுதியில் சிறு சிறு ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் வைத்திருப்பவர்களுக்கு தலா 60 இட்லிகள் ,80 இட்லிகள் என மொத்தமாகப் பார்சல் கட்டிக் கொடுக்கப்படுவதாகப் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. அம்மா உணவக விதிமுறைகளின்படி அங்கு சாப்பிட வருபவர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்பட வேண்டும்; யாருக்கும் பார்சல் வழங்கக் கூடாது என்பது மிக முக்கியமான விதியாகும். ஆனால் ,இந்த விதிமுறைகள் அனைத்தும் இங்கு முற்றிலும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

இங்கு ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் இட்லிகளை மொத்தமாக வாங்கிச் செல்லும் தனியார் ஹோட்டல் உரிமையாளர்கள் ,அதனைத் தங்களது கடைகளில் வெளிச்சந்தையில் பத்து ரூபாய் வரை வைத்து விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேடு குறித்து அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது ,அதிகாரிகள் சொன்னதைத்தான் தாங்கள் செய்வதாகக் கூறி பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ளனர்.

மறுபுறம் ,தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவர்களின் பயன்பாடும் இந்த உணவகத்தில் தாராளமாக நீடிக்கிறது. மொத்தமாக இட்லிகளைப் பார்சல் வாங்கிச் செல்பவர்களுக்கு ,எவ்வித அச்சமும் இன்றி பிளாஸ்டிக் கவர்களிலேயே இட்லிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்கள் நேரில் சென்று தங்களது கேமராக்களில் காட்சிகளைப் பதிவு செய்யத் தொடங்கியதும் ,அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதைப் பார்த்த நகராட்சி ஊழியர் ஒருவர் உடனடியாக அம்மா உணவகத்திற்குள் விரைந்தார். அங்கு பணியில் இருந்த பெண்களிடம் ,”நேற்றுதானே பார்சல் கொடுக்கக் கூடாது என்று அதிகாரிகள் சொன்னார்கள் ,நீங்கள் ஏன் திரும்பத் திரும்பக் கொடுக்கிறீர்கள்? தயவு செய்து இனிமேல் கொடுக்காதீர்கள்” என்று கேமராக்களுக்கு முன்னாலேயே கூறிவிட்டுச் சென்றார். இதன் மூலம் அங்கு தொடர்ந்து விதிமீறல்களும் பார்சல் விநியோகமும் நடந்து வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதற்கு முன்பு வரை இந்த உணவகத்திற்குச் சாப்பிட வரும் அனைவருக்கும் இட்லி தடையின்றிக் கிடைத்து வந்ததாகக் கூறும் அப்பகுதி மக்கள் ,சமீப காலமாகவே இந்த அவல நிலை நீடிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். காலை 7:00 மணிக்குத் தொடங்கி வெறும் அரை மணி நேரத்தில் 1,200 இட்லிகள் எப்படி விற்றுத் தீர முடியும் என்ற நியாயமான கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.

ஏழைகளின் பசியைப் பயன்படுத்தி ஒரு சிலர் ஆதாயம் அடைவதைத் தடுக்கவும் ,அம்மா உணவகத்தின் நோக்கத்தைச் சிதைக்காமல் இருக்கவும் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக இந்த உணவகத்தில் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் ,முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து ஏழை எளிய மக்களுக்குத் தடையின்றி உணவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »