சிவகங்கையில் தவெக பிரமுகர் கொலை செய்யப்பட்ட பார் மீண்டும் திறப்பதாக தகவல்: கிராம மக்கள் முற்றுகை

சிவகங்கை  , ஜூன் 10 : சிவகங்கை ரயில் நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட அரசு மதுபான கடை பார் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக வெளியான தகவலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து இரண்டு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு அந்த மதுபான பாரை முற்றுகையிட்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

image 135

சிவகங்கை மாவட்டம், சூரக்குளம் பொன்னாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் நவீன்குமார் (24). இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பொன்னாம்பட்டி கிளைக் கழக செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த ஜூன் 7-ஆம் தேதி மாலை, சிவகங்கை ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையின் பாருக்கு நவீன்குமார் சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த ஒரு கும்பலுக்கும் நவீன்குமாருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறி பெரும் மோதலாக வெடித்தது. ஆத்திரமடைந்த அந்த கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் நவீன்குமாரை சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த நவீன்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டத்திலும் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ ரோந்து வாகனம் தொடக்கம் பெண்கள், குழந்தைகளுக்கு பலத்த பாதுகாப்பு!

இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், இந்த கொலையில் தொடர்புடைய டி. புதூரைச் சேர்ந்த மதன்ராஜ் மற்றும் சிவகங்கை போஸ் ரோட்டைச் சேர்ந்த சரவணக்குமார் ஆகிய இருவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இக்கொலைச் சம்பவம் நடந்த அன்றே சம்பந்தப்பட்ட மதுபானக் கடையை முற்றுகையிட்ட பொன்னாம்பட்டி கிராம மக்கள், அரசு அதிகாரிகளிடமும் காவல் துறையினரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையம், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் ஆன்மீக வழிபாட்டுத் தலங்கள் நிறைந்த இப்பகுதியில் இந்த மதுபானக் கடை செயல்படுவதால் சமூக விரோதச் செயல்கள் மற்றும் தொடர் மோதல்கள் வாடிக்கையாகிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த பாரை இங்கிருந்து உடனடியாக அகற்றக் கோரி ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திற்கும், டாஸ்மாக் அதிகாரிகளுக்கும் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கே இன்று ஒரு இளைஞரின் உயிர் பறிபோகக் காரணம் என்றும் பொதுமக்கள் தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். மக்களின் தொடர் எதிர்ப்பைத் தொடர்ந்து அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அந்த மதுபானக் கடை மற்றும் பார் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்த நிலையில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அந்த அரசு மதுபானக் கடை பார் இன்று மீண்டும் அதே இடத்தில் திறக்கப்பட உள்ளதாக அப்பகுதி கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பொன்னாம்பட்டி மற்றும் அதன் அருகிலுள்ள புதூர் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பெண்கள் உட்பட திடீரென அங்கு திரண்டனர். கொலைக் குற்றம் நடந்த சில நாட்களிலேயே மீண்டும் அதே பாரைத் திறக்க அதிகாரிகள் முயல்வதை கண்டித்து அவர்கள் அந்த மதுபான பாரை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

பொதுமக்களின் திடீர் முற்றுகைப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தற்போதைக்கு இந்த மதுபான பார் திறக்கப்படவில்லை என்றும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பாரை வேறு பகுதிக்கு மாற்றுவதற்கான மாற்று ஏற்பாடுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் உறுதியளித்தனர்.

அதிகாரிகளின் முறையான உத்தரவாதம் மற்றும் காவல் துறையினரின் சமாதானப் பேச்சைத் தொடர்ந்து கிராம மக்கள் தங்களது முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1187

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »