சென்னை , ஜூன் 8: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) கடந்த அதிமுக ஆட்சியின் இறுதி காலம் மற்றும் திமுக ஆட்சியின் தொடக்கக் காலத்தில் நடைபெற்ற மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) கொள்முதல் டெண்டர்களில் சுமார் 397 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் டான்ஜெட்கோ அதிகாரிகள் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் மற்றும் அரசு நிர்வாக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மின்சாரத்துறையில் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தற்போதைய மின் துறை அமைச்சர் தனது செய்தியாளர் சந்திப்புகளில் தொடர்ந்து வெளிப்படையாகக் குற்றம் சாட்டி வந்தார். மின்மாற்றிகள் கொள்முதலில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து ஏற்கனவே பல்வேறு புகார்கள் பொதுவெளியில் உலா வந்த நிலையில் தற்போது சிபிஐயின் இந்த வழக்குப் பதிவு, குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த செந்தில் பாலாஜியை இலக்கு வைக்கும் விதமாக சிபிஐயின் இந்த புதிய விசாரணை வளையம் அமைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Also read : தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறுத்தமா? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
இந்த ஊழல் வழக்கின் பின்னணி குறித்து டான்ஜெட்கோ வட்டாரங்கள் மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் சில முக்கிய விவரங்களை வெளிப்படுத்துகின்றன. கடந்த 2021, 2022 மற்றும் 2023 ஆகிய நிதியாண்டுகளில் தமிழகம் முழுவதும் மின் விநியோகத்திற்காக 25 கிலோவாட் முதல் 500 கிலோவாட் திறன் கொண்ட விநியோக மின்மாற்றிகளை (Distribution Transformers) கொள்முதல் செய்வதற்கான டெண்டர்கள் டான்ஜெட்கோவால் கோரப்பட்டன. இந்த கொள்முதல் நடைமுறைகளில் தான் பெருமளவிலான விதிமீறல்களும், முறைகேடுகளும் அரங்கேறியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தங்களுக்கு சாதகமான குறிப்பிட்ட ஏலதாரர்களுக்கு முறையற்ற வகையில் ஆதாயம் அளிக்கும் நோக்கில் இந்த டெண்டர் விதிகள் தளர்த்தப்பட்டதாகவும் இதன் விளைவாக அரசு கருவூலத்திற்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஏற்கனவே பல்வேறு தரப்பினரால் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ‘அறப்போர் இயக்கம்’ அமைப்பின் மேலாண்மை அறங்காவலர் ஜெயராம் வெங்கடேசன், அதிமுக வழக்கறிஞர் அணியின் துணைச் செயலாளர் சரவணன் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் தனித்தனியாகப் புகார்களை சமர்ப்பித்திருந்தனர். எனினும் மாநில அளவிலான விசாரணையில் தொய்வு ஏற்பட்டதாகக் கூறி இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. மனுக்களை விரிவாக விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விழிபிதுங்க வைக்கும் ஊழல் குறித்து சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு (CBI Anti-Corruption Branch) புதிய விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் நேரடி விளைவாக சிபிஐ அதிகாரிகள் டான்ஜெட்கோவின் அப்போதைய டெண்டர் பரிசீலனைக் குழுவில் இடம் பெற்றிருந்த உயர் அதிகாரிகள், கொள்முதல் அதிகாரத்தைக் கொண்டிருந்த பொறுப்பாளர்கள், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் இதன் மூலம் பலனடைந்த தனியார் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரைக் குற்றவாளிகளாகச் சேர்த்து முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டப்பட்ட நபர்களுக்கும் இந்த நிதி முறைகேட்டிற்கும் இடையே உள்ள நேரடித் தொடர்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மின்சாரத்துறையில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஊழல் வழக்கு தற்போது மத்திய புலனாய்வு அமைப்பின் கைக்கு மாறியுள்ளதால், டான்ஜெட்கோவின் உயர் மட்ட அதிகாரிகள் பலரும் சிபிஐயின் விசாரணைப் பிடிக்குள் வரும் சூழல் உருவாகியுள்ளது. இந்த வழக்கைத் தொடர்ந்து தீவிரமாக நடத்தத் திட்டமிட்டுள்ள சிபிஐ, ஊழலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் நின்றுவிடாமல், அரசுக்கு ஏற்படுத்தப்பட்ட 397 கோடி ரூபாய் இழப்புத் தொகையையும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து முழுமையாக மீட்டுத் தருவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது








