நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை: பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வு

நெல்லை, ஜூன் 8 : தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக இப்பகுதிகளில் உள்ள பிரதான அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருவதுடன் நீர்நிலைகளுக்கு வரும் வரத்தும் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பாபநாசம் அணையின் நீர் இருப்பு தற்போது 70 அடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

image 92

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நீடிக்கும் தொடர் மழையினால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து மிக பலத்த அளவில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி, பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 68 அடியை எட்டியுள்ளது. கடந்த ஜூன் 4-ஆம் தேதி இந்த அணையின் நீர்மட்டம் 49 அடியாக இருந்த நிலையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 19 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பாபநாசம் அணைக்கு அருகிலுள்ள சேர்வலாறு அணையின் நீர்மட்டமும் மிக வேகமாகக் கூடி வருகிறது. நேற்றுடன் ஒப்பிடுகையில் ஒரே நாளில் 12 அடி உயர்ந்துள்ள சேர்வலாறு அணையின் தற்போதைய நீர்மட்டம் 89.5 அடியாகப் பதிவாகியுள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் இந்த அணையின் நீர் இருப்பு 26 அடி உயர்ந்துள்ளது மாவட்ட விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் மற்றும் சேர்வலாறு ஆகிய இரு அணைகளுக்கும் வினாடிக்கு 3,285 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

Also : நெல்லை : போலி நகையை மாற்றி 5 பவுன் திருடிய தம்பதி உள்பட 3 பேர் கைது!

மற்றொரு முக்கிய அணையான 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் அரை அடி உயர்ந்து 68.5 அடியாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பாபநாசம் அணைப் பகுதியில் 32 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 28 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 17 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மலைப் பகுதிகள் மட்டுமின்றி நகர்ப் புறங்களிலும் பரவலாகச் சாரல் மழை நீடிக்கிறது. ராதாபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் 13 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில் நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை லேசான சாரல் மழை பெய்துள்ளது. நெல்லை மாநகரப் பகுதியிலும் இன்று அதிகாலை நேரத்தில் சிறிது நேரம் சாரல் மழை அடித்தது.

மலைப் பாதைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மணிமுத்தாறு அருவியில் வெள்ள நீர் ஆபத்தான அளவில் கொட்டுவதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை இன்று 4-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், அருவியின் இயற்கை அழகைப் பார்வையிட மட்டும் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் களக்காடு தலையணைப் பகுதியில் குளிப்பதற்கும், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள நம்பி கோயிலுக்குச் செல்வதற்கும் இன்று 5-வது நாளாக வனத்துறையினர் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் அனுமதி மறுத்துள்ளனர். இதற்கிடையே கொடுமுடியாறு அணைப் பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருவதோடு அங்கு 37 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரை, மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடையம் பகுதியில் அமைந்துள்ள 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா நதி அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 2.5 அடி உயர்ந்து 39 அடியை எட்டியுள்ளது. இதேபோல் ராமநதி அணையின் நீர்மட்டம் 5.5 அடி உயர்ந்து 42 அடியாக நிலைபெற்றுள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணையின் நீர் இருப்பு 2 அடி உயர்ந்து தற்போது 41 அடியைக் கடந்துள்ளது. மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை மிக வேகமாக நிரம்பி வருகிறது. இந்த அணைப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 38 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில் அணையின் தற்போதைய நீர்மட்டம் 28 அடியை எட்டியுள்ளது.

தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான அடவிநயினார் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கொட்டி வரும் கனமழையின் காரணமாக, அணைக்கு வினாடிக்கு 80 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இன்று காலை நிலவரப்படி அடவிநயினார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6.5 அடி உயர்ந்து 56 அடியை எட்டியுள்ளது.

மலைப் பகுதிகளின் தட்பவெப்பநிலை மாற்றத்தால் நகர்ப் புறங்களிலும் குளிர்ந்த காற்றுடன் கூடிய வானிலை நிலவுகிறது. செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலையில் தொடங்கி இரவு வரை தொடர்ச்சியாகச் சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்படினும் அப்பகுதியில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. செங்கோட்டையில் 24 மில்லிமீட்டர் மழையும், தென்காசி நகர்ப் பகுதியில் 11 மில்லிமீட்டரும், ஆய்குடி பகுதியில் 6 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இரு மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளின் நீர்மட்டம் இன்னும் உயரும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1227

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »