சென்னை, ஜூன் 6 : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடர் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக, ஆளுநரின் அனுமதியைக் கோரி தமிழக அரசு முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 2011-2016 ஆம் ஆண்டு காலக்கட்ட அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் இந்த முக்கிய நகர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை (ED) தொடர் விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் சம்பந்தப்பட்ட காலக்கட்டத்தில் அமைச்சராகப் பதவி வகித்ததால் அவர் மீது வழக்குத் தொடர ஆளுநரின் முன் அனுமதி அவசியமாகிறது. முன்னதாக கடந்த திமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர்வதற்கான ஒப்புதலை தமிழக அரசு ஆளுநரிடம் கோராத நிலை நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இதற்கான ஒப்புதலை வழங்கி அது தொடர்பான அதிகாரப்பூர்வ கோப்புகளை ஆளுநர் மாளிகையான ராஜ் பவனுக்கு அனுப்பி வைத்துள்ளது.
also read : மதுரை மாநகராட்சி முறைகேடு முதல் ஹார்ட் டிஸ்க் சர்ச்சை வரை… சி.டி.ஆர். அதிரடி!
முன்னதாக இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை நேரடியாக ஆளுநர் மாளிகையை அணுகி அனுமதி கோரியிருந்தது. ஆனால் சட்ட விதிகளின்படி மாநில அரசின் மூலமாக மட்டுமே ஆளுநரின் அனுமதியைக் கோர முடியும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை தொடர் நடவடிக்கைகளைத் தொய்வின்றி மேற்கொள்ளும் பொருட்டு, தமிழக அரசு எவ்வித காலதாமதமும் இன்றி உடனடியாக இக்கோப்புகளை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.
தற்போது ஆளுநர் மாளிகையின் பரிசீலனையில் உள்ள இந்த கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தவுடன் செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர்வதற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிடும். ஆளுநர் எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகளும் அமலாக்கத்துறையின் மேல்விசாரணையும் அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








