மதுரை மாநகராட்சி முறைகேடு முதல் ஹார்ட் டிஸ்க் சர்ச்சை வரை… சி.டி.ஆர். அதிரடி!

மதுரை, ஜூன் 6: மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள நிதி இழப்புகள் மற்றும் முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் புதிய மாநகராட்சி ஆணையர் தலைமையில் முழுமையான மறுமதிப்பீடு (Re-assessment) செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக ஐடி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மாநகராட்சி முறைகேடுகள், திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரம், மின்வாரிய அலுவலக சர்ச்சை மற்றும் தலைமைச் செயலக ஹார்ட் டிஸ்க் திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அரசின் நிலைப்பாட்டை விரிவாக விளக்கினார்.

Madurai Corporation Scam to Hard Disk Controversy: CDR Launches Fresh Crackdown in High-Profile Investigation

மதுரை மாநகராட்சியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துப் பேசிய அமைச்சர் “மதுரை மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் கட்டிட அனுமதி வழங்கியதில் முறையான மதிப்பீடுகள் செய்யப்படாததால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. எந்தெந்த ஆண்டுகளில் இந்த விதிமீறல்கள் நடந்தன, யார் யாருடைய காலத்தில் திட்ட அனுமதிகள் பெறப்பட்டன, அப்போது மண்டல தலைவர்களாகவும் மேயராகவும் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். இதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் புதிய கார்ப்பரேஷன் கமிஷனர் ஆகியோர் இணைந்து ஒரு பெரிய அதிகாரப்பூர்வ குழுவை அமைக்கவுள்ளனர். வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களின் தற்போதைய நிலவரம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது” என்றார்.

Also : செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்

உதயநிதிக்கு படிப்பும் வரவில்லை,சினிமாவும் வரவில்லை: திமுக தோல்வி குறித்து தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்

மாநகராட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் குவாரிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் மதுரையின் பல பகுதிகளில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், இதற்கான நிரந்தரத் திட்டங்களைச் செயல்படுத்தக் காலதாமதம் ஆகும் என்பதால், உடனடியாகத் தற்காலிக தீர்வுகளைக் கண்டறிந்து செயல்படுத்த மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் சட்டவிரோத குவாரிகள் அனைத்தையும் முழுமையாகக் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க சுரங்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இயற்கை வளங்களைத் திருடுபவர்கள் மீது எந்தவித சமரசமும் இன்றி கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்த குவாரிகள் அனைத்தும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Also : இந்தியாவின் நீண்டநாள் கனவு நனவாகிறதா? Su-57 மூலம் அசூர பலம்! புடின் கிரீன் சிக்னல்.!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சைக்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசு மிகவும் தெளிவான கொள்கையைக் கொண்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இப்பகுதியில் அமைதியையே விரும்புகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகள் அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பு அங்கு என்ன சுமுகமான சூழ்நிலை நிலவியதோ, அதையேதான் தற்போதும் தொடர வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள், அரசும் அதையேதான் விரும்புகிறது. இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி எந்தவொரு மதவாத சக்திகளும் உள்ளே நுழைந்து அரசியல் செய்ய அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இதில் நூறு சதவீதம் அரசு உறுதியாக உள்ளது” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மின்வாரிய அலுவலகத்தில் நெறிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுவது குறித்த கேள்விக்கு, மக்கள் பிரதிநிதிகள் தங்களின் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்துவதும் அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பதும் வழக்கமான ஒன்றுதான் என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்ததாக தமிழக முதல்வர் ஏன் செய்தியாளர்களைத் தொடர்ந்து சந்திக்க மறுக்கிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் காரசாரமாகப் பதிலளித்தார். “எதிர்க்கட்சியாக இருந்தபோது எவ்வளவோ மிரட்டல்களை விடுத்த திமுகவைப் பார்த்து எங்களுடைய முதல்வர் ஒரு நிமிடம் கூட பயந்ததில்லை. எதற்கும் அஞ்சாத ஒரு தலைவரைப் பார்த்து, செய்தியாளர்களைச் சந்திக்க பயப்படுகிறார் என்று கூறுவது வேடிக்கையானது. செய்தியாளர்களைச் சந்திப்பது மட்டும்தான் ஒரு சிறந்த நிர்வாகத்திற்கான அளவுகோல் (Bench mark) என்று எங்குமே எழுதப்படவில்லை. கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாக ஒரு சிலர் தங்களுடைய சொந்த விளம்பரத்திற்காகவும், தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்வதற்காகவும் மட்டுமே தொடர்ச்சியாகப் பிரஸ்மீட்களை நடத்தி வந்தனர்.

முன்பு அச்சு ஊடகங்கள் (Print Media) மட்டுமே இருந்த காலத்தில் அரசின் கொள்கை முடிவுகள் செய்திக் குறிப்புகளாக மட்டுமே வெளியிடப்பட்டன. தற்போது மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்கள் மற்றும் நேரலை கலாச்சாரம் வந்த பிறகுதான் இந்த பிரஸ்மீட் நடைமுறை அதிகரித்துள்ளது. செய்தியாளர்களைச் சந்திப்பதை விட மக்களை நேரடியாகச் சந்திப்பதையே முதல்வர் முதன்மையாகக் கருதுகிறார். கடந்த வாரம் திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் போல அவர் தொடர்ந்து மக்களை நேரடியாகச் சந்தித்து வருகிறார். மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்ட இந்த அரசு மக்களுக்குத் தேவையான அனைத்து விளக்கங்களையும் உரியக் காலங்களில் தொடர்ந்து வழங்கி வருகிறது” என்று விளக்கமளித்தார்.

தலைமைச் செயலகத்தில் ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரம் மற்றும் சாட்சிகள் அழிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய அவர் இந்தத் திருட்டு சம்பவத்தில் என்னென்ன தரவுகள் (Data) காணாமல் போயுள்ளன என்பது குறித்துத் துறை ரீதியான மதிப்பீட்டுப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகக் குறிப்பிட்டார். காவல்துறையினர் இந்த வழக்கை முழு வீச்சில் விசாரித்து வருவதாகவும், உண்மை விரைவில் வெளிவரும் என்றும் கூறினார்.

இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் விமர்சனம் செய்திருப்பது குறித்துக் கேள்வி எழுப்பியபோது “இந்த ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் காவல்துறை விசாரணை இன்னும் நிறைவடையாத நிலையில், செந்தில் பாலாஜி மட்டும் ஏன் இவ்வளவு அவசரமாகப் பதற்றமடைந்து முன்னால் வந்து பதில் சொல்கிறார் என்று தெரியவில்லை. அவரை யாராவது குற்றம் சாட்டினார்களா அல்லது அவர்தான் அதைத் திருடினார் என்று யாராவது கூறினார்களா? விசாரணை முடியும் முன்பே அவர் கருத்து தெரிவிப்பது அனைவருக்குமே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மின்தடைப் பிரச்சினையைத் திசைதிருப்பவே இந்த ஹார்ட் டிஸ்க் விவகாரம் கிளப்பப்பட்டுள்ளது என்ற அவரது கூற்று தவறானது. இதன் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மையை அவரிடம்தான் செய்தியாளர்கள் கேட்க வேண்டும்” என்றார்.

தமிழக அரசியல் சூழலில் புதிய கட்சிகளின் வருகை மற்றும் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (TVK) குறித்த கேள்விக்கு, “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் புதிய அரசியல் கட்சிகளைத் தொடங்குவதற்கும், அரசியல் செய்வதற்கும் முழு சுதந்திரமும் இடமும் உள்ளது. அது அவரவர் காலத்தின் கட்டாயம்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

இறுதியாக தற்போதைய அமைச்சரவையின் செயல்பாடு குறித்துப் பேசிய அவர் முதல்வர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சரவையும், அனைத்து அமைச்சர்களும் ஒருங்கிணைந்து ஒரு கூட்டுக் குடும்பமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஒரு வித்தியாசமான மற்றும் திறமையான கேபினெட்டாக இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும், இதன் பலன்களை மக்கள் உணர்ந்து பாராட்டி வருவதாகவும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1133

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »