மும்பை, ஜூன் 6: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிக்கும் வகையில்,இந்திய டி20 அணியின் தலைமைப் பொறுப்பில் பிசிசிஐ (BCCI) அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்கள் மற்றும் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய போட்டிகளுக்கான இந்திய டி20 அணி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மூன்று தொடர்களுக்கும் இந்திய அணியின் புதிய கேப்டனாக மூத்த வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த 2026ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில்,நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தந்த தற்போதைய கேப்டன் சூரியகுமார் யாதவ்,கேப்டன் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.கடந்த 2024ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவுக்குப் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்ற சூரியகுமார் யாதவ்,அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி உலகக் கோப்பையை வென்று கொடுத்த போதிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.தற்போது 35 வயதாகும் சூரியகுமார் யாதவுக்குப் பதிலாக,எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அணியை அடுத்தகட்ட மாற்றத்திற்கு (Transition Period) தயார்படுத்தும் நோக்கில் பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Also : 2029 National Games நடத்த தமிழகம் தயாராகிறது! டெல்லியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முக்கிய மனு
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை சாம்பியன் ஆக்கியது மற்றும் கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டி வரை வழிநடத்தியது என கேப்டன்சியில் சிறந்த அனுபவம் கொண்ட ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இடையில் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில்,தற்போது அவருக்கு நேரடியாக கேப்டன் பொறுப்பே வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.மற்றொரு இளம் நட்சத்திரமான திலக் வர்மா இந்தத் தொடர்களுக்கான துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக,அண்மைக்கால ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்சி முதல் முறையாக சீனியர் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ‘ஆரஞ்சு கேப்’ வென்றதோடு,கிறிஸ் கெயிலின் சிக்சர் சாதனையை முறியடித்து,மூன்று போட்டிகளில் சதத்தின் விளிம்பு வரை வந்து 600-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து சென்சேஷனல் பிளேயராக உருவெடுத்துள்ள சூரியவன்சிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.அவரது அதிரடி ஆட்டம் சர்வதேச சீனியர் தளத்தில் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இவர்களுடன்,நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனும் தனது அதிரடி ஐபிஎல் ஃபார்ம் காரணமாக அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.பிசிசிஐ அறிவித்துள்ள 15 பேர் கொண்ட சமபலமிக்க இந்த அணியில் ரவி பிஷ்னாய்,அபிஷேக் சர்மா,நிதீஷ் குமார் ரெட்டி,முகமது சிராஜ்,சஞ்சு சாம்சன்,அக்சர் பட்டேல்,ஹர்ஷித் ராணா,வாஷிங்டன் சுந்தர்,அர்ஷ்தீப் சிங்,சிவம் துபே,வருண் சக்கரவர்த்தி மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இம்மாத இறுதியில் இந்திய அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.அதனைத் தொடர்ந்து அடுத்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும்,பின்னர் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய போட்டிகளிலும் இதேCore அணியே களம் காணவுள்ளது.எதிர்கால உலகக் கோப்பை சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்டு ஒரு சமநிலையான அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.








