இந்தியாவின் முதல் Cool Roof Coating SOP வெளியீடு: தமிழக அரசு புதிய சாதனை

சென்னை ,ஜூன் 5: கோடை வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கவும்,நகர்ப்புற வெப்ப அலையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும் ஏதுவாக,இந்தியாவின் முதலாவது மாநில அளவிலான ‘குளிர் கூரை பூச்சு’ (Cool Roof Coating) பயன்பாட்டிற்கான நிலையான செயல்முறை வழிகாட்டியை (SOP) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்ட இந்த வழிகாட்டி,முறையான மற்றும் தர உத்தரவாதத்துடன் கூடிய குளிர் கூரை தீர்வுகளை செயல்படுத்துவதற்கான நாட்டின் முதல் மாநில அளவிலான தொழில்நுட்ப கட்டமைப்பாகக் கருதப்படுகிறது.

image 73

தலைநகர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் டாக்டர் வி.ராஜீவ் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகியோர் இந்த அதிகாரப்பூர்வ வழிகாட்டு ஆவணத்தை வெளியிட்டனர்.தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC) மற்றும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (TNCCM) ஆகியவை ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் சீட்ஸ் தொழில்நுட்ப சேவைகள் (STS) ஆகியவற்றுடன் இணைந்து இந்த விரிவான ஆவணத்தை உருவாக்கியுள்ளன.இந்த சர்வதேச மற்றும் மாநில அளவிலான கூட்டமைப்பு தமிழ்நாட்டின் காலநிலை மாற்ற நடவடிக்கைகளில் மிக முக்கியமானதொரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

ALso read : உதயநிதிக்கு படிப்பும் வரவில்லை,சினிமாவும் வரவில்லை: திமுக தோல்வி குறித்து தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்

அண்மைக்காலமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் குறிப்பாக நகர்ப்புறங்களிலும் வெப்பத்தின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வருகிறது.இந்தச் சூழலில்,காலநிலை மாற்ற இலக்குகளை வெறும் கொள்கைகளாக மட்டும் சுருக்கிவிடாமல் அவற்றை மக்கள் நேரடியாகப் பயன்பெறும் வகையிலான நடைமுறை நடவடிக்கைகளாக மாற்றுவதை இந்த வழிகாட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது.மாநிலத்திலுள்ள பொது மக்களின் வீடுகள்,அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,மற்றும் பல்வேறு பொதுக் கட்டடங்களுக்குப் பொருந்தும் வகையில் இந்த ஆவணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் கூரைகளின் தற்போதைய நிலையை மதிப்பீடு செய்தல்,பூச்சுகளைப் பயன்படுத்தும் முறை,தரக் கட்டுப்பாடு,தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் நீண்ட கால பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் தரநிலைப்படுத்தப்பட்டு துல்லியமாக விளக்கப்பட்டுள்ளன.

அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்பட்ட இந்த இயற்கை குளிர்வூட்டும் (Passive Cooling) முறையானது மின்சாரச் செலவின்றி வெப்பத்தைக் குறைக்கும் எளிய தீர்வாக முன்வைக்கப்படுகிறது.இந்த குளிர் கூரை பூச்சுகளை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் கட்டடங்களின் மேற்பரப்பு வெப்பநிலையை 6 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலும்,உட்புற வெப்பநிலையை 4 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலும் குறைக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதன் மூலம் கோடைக்காலங்களில் கட்டடங்களின் உள்சூழல் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வெப்பநிலைக்கு மாறுவதுடன் வெப்ப அலைகளால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளும் பெருமளவில் தவிர்க்கப்படும்.

மேலும் இந்த வழிகாட்டியில் சூரிய ஒளிப் பிரதிபலிப்புத் திறன் (Solar Reflective Index – SRI) 102 கொண்ட பூச்சுகளைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இத்தகைய அதிகப் பிரதிபலிப்புத் திறன் கொண்ட பூச்சுகளைக் கூரைகளில் பூசுவதன் மூலம் கட்டடங்களை குளிர்விப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஏசி மற்றும் மின்விசிறிகளுக்கான மின்சாரத் தேவை சுமார் 20 சதவீதம் வரை குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.அத்துடன் பகல் நேரங்களில் நிலவும் கடுமையான வெப்ப இடர்பாட்டு நேரங்களை 30 சதவீதம் வரை இந்த பூச்சுகள் குறைக்கின்றன.இதன் காரணமாக செயற்கையான மற்றும் அதிக செலவு பிடிக்கும் இயந்திரக் குளிர்விப்பு அமைப்புகளைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் குறைந்து மிகக் குறைந்த செலவில் நிலையான ஆற்றல் திறன் மிக்க தீர்வை பொதுமக்கள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தை எவ்விதத் தொய்வுமின்றி களத்தில் செயல்படுத்துவதற்காக 12 கட்ட செயலாக்கக் கட்டமைப்பை இந்த நிலையான செயல்முறை வழிகாட்டி வழங்குகிறது.இதில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு தரமான மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்தல் கூரையின் மேற்பரப்பைத் தயார் செய்தல்,பூச்சுகளைத் துல்லியமாகப் பயன்படுத்துதல்,தர உறுதிப்பாடு,பணியாளர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் எதிர்கால பராமரிப்புத் தேவைகள் ஆகியவை முறைப்படுத்தப்பட்டுள்ளன.அத்துடன் இத்திட்டத்தில் ஈடுபடும் பல்வேறு துறைகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகளும் இதில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதால் திட்டச் செயலாக்கத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனமும்,ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த நிலையான செயல்முறை வழிகாட்டி,எதிர்காலத்தில் பெரிய அளவிலான குளிர்விப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முதன்மை வழிகாட்டி நூலாகத் திகழும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.காலநிலை மாற்றத்திற்கு எதிரான தாங்கும் திறனை மாநில அளவில் அதிகரிக்கவும்,கார்பன் உமிழ்வைக் குறைத்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த வழிகாட்டி உதவும்.இந்தியாவின் பிற மாநிலங்களும் தங்கள் பகுதிகளில் வெப்பத்தைக் குறைக்கப் பின்பற்றுவதற்கு உகந்ததொரு முன்னோடி மாதிரியாகத் தமிழ்நாடு அரசு இந்த கட்டமைப்பை வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1133

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »