நெல்லை , ஜூன் 4: நெல்லை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மதுபான கடை பாரில் ஏற்பட்ட தகராறில், இருசக்கர வாகன ஷோரூம் ஊழியர் மது பாட்டிலால் குத்தியும் தலையில் கல்லைப்போட்டும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் அடுத்துள்ள மேலபுத்தனேரி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் வேணு ஆகாஷ் (24).இவர் அங்குள்ள ஒரு தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் இன்று மாலை கே.டி.சி.நகர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைக்கு (டாஸ்மாக்) வேணு ஆகாஷ் சென்றுள்ளார்.அங்குள்ள பாரில் அமர்ந்து அவர் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்த பாருக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென வேணு ஆகாஷிடம் வம்புக்கு இழுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.மது போதையில் இருந்த இருவருக்கும் இடையே பாரில் வைத்து கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அந்த நபர் தான் கையில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து வேணு ஆகாஷின் வயிற்றில் கொடூரமாகக் குத்தியுள்ளார்.
இதில் நிலைகுலைந்து வேணு ஆகாஷ் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார்.ஆத்திரம் அடங்காத அந்த நபர் அங்குக் கீழே கிடந்த பெரிய கல்லைத் தூக்கி கீழே விழுந்து கிடந்த வேணு ஆகாஷின் தலையில் பலமாகப் போட்டுள்ளார்.இதில் படுகாயமடைந்த வேணு ஆகாஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிய அந்த நபர் மது போதையில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.பாரில் திடீரென நடந்த இந்த கொடூரக் கொலைச் சம்பவத்தைக் கண்டு அங்கிருந்த சக மதுப்பிரியர்களும், பார் ஊழியர்களும் அதிர்ச்சியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.
Also : உசிலம்பட்டி அருகே அங்கன்வாடி மேற்கூரை இடிந்தது: எம்.எல்.ஏ விஜய் நேரில் ஆய்வு
இது குறித்து உடனடியாக சிவந்திபட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவந்திபட்டி போலீஸார் உயிரிழந்த வேணு ஆகாஷின் உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.பின்னர் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகச் சிவந்திபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மது போதையில் ஏற்பட்ட சாதாரணத் தகராறில் இந்த படுகொலை நடந்ததா அல்லது இருவருக்கும் இடையே ஏதேனும் முன்விரோதம் காரணமா என்ற கோணங்களில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.தப்பியோடிய கொலையாளியைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு மதுபான கடை பாரில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கிருஷ்ணாபுரம் மற்றும் கே.டி.சி.நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக அசம்பாவிதம் நடந்த டாஸ்மாக் கடை மற்றும் பாரின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.போலீஸார் அங்குக் குவிக்கப்பட்டுத் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்








