சேத்துப்பட்டு, June 4: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள மண்டகொளத்தூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் காரணமாக உண்மையான விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் வாரக்கணக்கில் முடங்கிக்கிடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மண்டகொளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது குறுவை மற்றும் சம்பா பருவ அறுவடை நெல்லை விற்பனை செய்வதற்காக இந்த அரசு கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து வருகின்றனர்.இருப்பினும் இங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விவசாயிகளிடம் இருந்து நெல்லை நேரடியாகக் கொள்முதல் செய்யத் தொடர்ந்து தாமதம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
உள்ளூர் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளைப் புறந்தள்ளிவிட்டு வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் கொண்டு வரும் நெல்லுக்கு இங்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேரடியாகக் குற்றம்சாட்டுகின்றனர்.ஆன்லைன் பதிவு நடைமுறைகளில் உள்ள பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்களையும் நெல்லின் ஈரப்பதக் கெடுபிடிகளையும் காரணம் காட்டி விவசாயிகளின் நெல் கொள்முதல் தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டு வருகிறது.அதேநேரம் இடைத்தரகர்களின் நெல் மூட்டைகள் எவ்விதத் தடையுமின்றி உடனடியாகக் கொள்முதல் செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பாரபட்சமான நடைமுறையால் கொள்முதல் நிலையத்திற்கு வெளியே பல நாட்களாகக் காத்திருக்கும் விவசாயிகளின் நெல் மூட்டைகள் பாதுகாப்பற்ற முறையில் சாலையோரங்களிலும் அருகில் உள்ள கோயில் வளாகங்களிலும் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக நெல்லின் எடை குறைந்து வருவதுடன் திடீரெனப் பெய்யும் கோடை மழையால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.மழையில் நனைவதால் நெல் முளைக்கத் தொடங்கி தரம் முற்றிலும் குறைந்துவிடுவதால் கடுமையான பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
Also read : நெல்லை அருகே பார் தகராறில் கொடூரம்: இளைஞர் பாட்டிலால் குத்திக் கொலை
இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளிலும் உள்ளூர் அடகுக்கடைகளிலும் பயிர்க்கடன் பெற்றே விவசாயப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.அறுவடை செய்த நெல்லை விற்று உடனுக்குடன் கடனைத் திருப்பிச் செலுத்தலாம் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் கொள்முதல் தாமதமாவதால் வட்டி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.இதனால் வாங்கிய விவசாயக் கடன்களைத் குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல் தங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனைப் படுகின்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக உயர் அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.கொள்முதல் நிலைய ஆன்லைன் பதிவு நடைமுறைகளில் உள்ள சிக்கல்களை உடனடியாகத் திருத்தம் செய்து எளிய முறையில் நெல் பெற வழிவகை செய்ய வேண்டும்.மேலும் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்களின் தலையீட்டை முற்றிலும் தவிர்த்து உண்மையான விவசாயிகளின் நெல்லை எவ்விதத் தாமதமுமின்றி நேரடியாகக் கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.








