நெல்லை ,June 3: தமிழக அரசு தங்களின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியின்படி,கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம் காரியாண்டியில் விவசாயிகள் திரண்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விஜயநாராயணம் பெரியகுளம் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது,தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய்,தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.ஆனால்,புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு,தற்போது ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே பயன்பெறும் வகையில்,அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரையிலான பயிர்க்கடன்கள் மட்டுமே ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசின் இந்த புதிய நிபந்தனை ஒட்டுமொத்த விவசாயப் பெருங்குடி மக்களையும் ஏமாற்றும் செயலாக அமைந்துள்ளது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குற்றம்சாட்டினர்.ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள நடுத்தர மற்றும் குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் அனைத்தையும் எவ்வித நிபந்தனையுமின்றி முதலமைச்சர் விஜய் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
Also read : தமிழகத்தில் பயறு பதப்படுத்தும் நிலையம் அமைக்க ₹25 லட்சம் மானியம்: அமைச்சர் தகவல்
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாசன விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள்,”தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாமல்,தற்போது ஏக்கர் கணக்கிலும்,கடன் தொகையிலும் வரம்பு விதிப்பது விவசாயிகளுக்குச் செய்யும் துரோகமாகும்.தற்போது காவல்துறையிடம் உரிய அனுமதி பெற்று இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அமைதியான முறையில் நடத்தியுள்ளோம்.ஆனால்,எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால்,அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்.அதற்கு காவல்துறையின் அனுமதிக்கு நாங்கள் காத்திருக்கப் போவதில்லை” என்று எச்சரித்தனர்.
விவசாயிகளின் இந்த திடீர் போராட்டத்தினால் காரியாண்டி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த டெல்டா மற்றும் தென்மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.








