2029 National Games நடத்த தமிழகம் தயாராகிறது! டெல்லியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முக்கிய மனு

2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி கோரி மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு மனு

புதுதில்லி,ஜூன் 3: இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாகத் தமிழ்நாட்டை உயர்த்தும் நோக்கோடும்,சர்வதேசத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை மாநிலம் முழுவதும் பரவலாக்கும் இலக்கோடும் பல்வேறு முக்கியப் புதிய திட்டங்களுக்கான விரிவான முன்மொழிவுகளை மத்திய அரசிடம் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது.

2029 National Games நடத்த தமிழகம் தயாராகிறது! டெல்லியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முக்கிய மனு

விளையாட்டை ஒரு சக்திவாய்ந்த சமூக மாற்றக் கருவியாகக் கருதி,’போதைப்பொருள் இல்லாத தமிழகம்’ என்ற இலக்கை நோக்கித் தூய்மையான,அறநெறி சார்ந்த விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஒலிம்பிக்,பாராலிம்பிக்,ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இந்தியாவை விளையாட்டு வல்லரசாக மாற்றும் மத்திய அரசின் இலக்கிற்குத் தமிழ்நாடு தனது முழுப் பங்களிப்பையும் வழங்கும் எனத் தமிழக முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக,முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி,தமிழகப் பொதுப்பணி,நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜூனா இன்று (03.06.2026) புதுதில்லியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் முனைவர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்துப் பேசினார்.இந்தச் சந்திப்பின் போது,தமிழகத்தில் விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான 10-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கான கோரிக்கைகள் அடங்கிய அதிகாரப்பூர்வ மனு மத்திய அமைச்சரிடம் வழங்கப்பட்டது.

Also read : தமிழகத்தில் பயறு பதப்படுத்தும் நிலையம் அமைக்க ₹25 லட்சம் மானியம்: அமைச்சர் தகவல்

2029 தேசிய விளையாட்டுப் போட்டிகள்

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளைத் தமிழ்நாடு சமீபகாலமாக மிக வெற்றிகரமாக நடத்திய அனுபவத்தைக் கொண்டு,வரும் 2029-ஆம் ஆண்டின் ‘தேசிய விளையாட்டுப் போட்டிகளை’ (National Games) தமிழ்நாட்டில் நடத்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற முதன்மையான கோரிக்கை இந்த சந்திப்பில் முன்வைக்கப்பட்டது.இப்போட்டிகளைத் தமிழ்நாட்டில் நடத்துவது,மாநிலத்தின் நீடித்த விளையாட்டு உள்கட்டமைப்புத் தேவைகளுக்கு ஒரு வலுவான மற்றும் நிரந்தரமான அடித்தளமாக அமையும் என்று மத்திய அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

மண்டல வாரியான விளையாட்டு மையங்கள்

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள புவியியல் சாதகங்கள் மற்றும் அங்குள்ள வீரர்களின் திறன்களுக்கு ஏற்ப பிராந்திய வாரியாக விளையாட்டு மையங்களை அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

  • திருச்சி மற்றும் நாகப்பட்டினம்: திருச்சி மாவட்டத்தில் 48 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள ‘திருச்சி ஒலிம்பிக் அகாடமி’ வளாகத்தில்,தற்காப்புக் கலைகளுக்கான (Martial Arts) தேசிய முதன்மை நிலை மையத்தை அமைக்கக் கோரப்பட்டுள்ளது.அதேபோல,தமிழ்நாட்டின் 1,076 கி.மீ நீளமுள்ள பரந்த கடற்கரையையும்,அங்குள்ள உள்ளூர் இளைஞர்களின் திறனையும் பயன்படுத்தி,நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரை விளையாட்டுகளுக்கான (Beach Games) தேசிய முதன்மை நிலை மையம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
  • கோயம்புத்தூர்: மிதிவண்டி (Cycling) போட்டிகளில் தமிழக வீரர்கள் கொண்டுள்ள சர்வதேசத் திறனை மேம்படுத்தும் வகையில்,கோயம்புத்தூர் மாவட்டத்தில் சர்வதேசத் தரத்திலான UCI (Union Cycliste Internationale) அங்கீகாரம் பெற்ற உள்ளரங்க மிதிவண்டி தடம் (Velodrome) மற்றும் தேசிய மிதிவண்டி உயர்செயல்திறன் மையம் அமைக்க ஆலோசிக்கப்பட்டது.
  • மதுரை: மதுரையில் ஏற்கனவே அமைந்துள்ள ஒலிம்பிக் அகாடமி மற்றும் உயர் செயல்திறன் மையங்களின் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு,நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஒருங்கிணைந்த மருத்துவச் சேவைகளை வழங்கும் நோக்கில்,’தேசிய விளையாட்டு மையம்,விளையாட்டு மருத்துவம்,காயம் மீட்பு மற்றும் செயல்திறன் மேம்பாட்டு மையம்’ (Sports Medicine and Injury Recovery Centre) ஒன்றை மதுரையில் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தடகளம்,நீச்சல் மற்றும் உள்ளரங்க வசதிகள்

தடகளத் துறையில் அடிமட்ட அளவிலான வீரர்களைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் புதுக்கோட்டை,தூத்துக்குடி,விழுப்புரம்,திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் சர்வதேசத் தரத்திலான 400 மீட்டர் செயற்கை ஓடுதளங்கள் (Synthetic Track) அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நீச்சல் போட்டிகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த வீரர்களைத் தமிழ்நாடு தொடர்ந்து உருவாக்கி வருவதால்,கோயம்புத்தூர்,செங்கல்பட்டு,திருவாரூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உலகத்தரம் வாய்ந்த நீச்சல் வளாகங்கள் (Swimming Complexes) அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.மேலும்,உள்ளரங்க விளையாட்டுகளில் இளைஞர்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதைக் கணக்கில் கொண்டு,கள்ளக்குறிச்சி,திருநெல்வேலி,இராணிப்பேட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பல்நோக்கு உள்ளரங்க விளையாட்டு வளாகங்கள் (Multipurpose Indoor Stadiums) அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னைக்கான சிறப்புத் திட்டங்கள்

ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ள ‘ஏறு விளையாட்டு’ (Sport Climbing) பயிற்சிக்காக,தற்போதைய விளையாட்டுச் சூழல் மற்றும் உள்கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு,சென்னையில் சர்வதேசத் தரத்திலான ஏறு விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையில் நேர்மையைப் பேணவும்,தூய்மையான விளையாட்டுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்துடன் (NADA) இணைந்து,ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒரு தேசிய மையமாகச் செயல்படும் வகையில்,’தேசிய ஊக்கமருந்து தடுப்பு கல்வி மற்றும் விழிப்புணர்வு மையம்’ (National Anti-Doping Education and Awareness Centre) ஒன்றைச் சென்னையில் அமைக்கவும் தமிழக அரசு முன்மொழிந்துள்ளது.

கேலோ இந்தியா மையங்கள் விரிவாக்கம்

நாட்டிலேயே அதிக இளைஞர்களையும்,வலுவான விளையாட்டுக் கலாச்சாரத்தையும் கொண்ட முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்வதால்,தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டுப் பிரிவுகளுக்கு உரிய முன்னுரிமை வழங்கி,கூடுதலாக ‘கேலோ இந்தியா மையங்கள்’ மற்றும் ‘கேலோ இந்தியா மாவட்ட மையங்களை’ விரிவுபடுத்த வேண்டும் என்று இந்த ஆலோசனையின் போது மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் இந்தத் தீவிர முயற்சிகளையும்,முன்வைக்கப்பட்டுள்ள விரிவான திட்டங்களையும் பாராட்டிய மத்திய அமைச்சர் முனைவர் மன்சுக் மாண்டவியா,இத்திட்டங்களுக்கு மத்திய அரசின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த உயர்நிலச் சந்திப்பின் போது,தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசுச் செயலாளர் திரு.சஜ்ஜன்சிங் ரா.சவான்,இ.ஆ.ப.,மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் / செயலர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி,இ.ஆ.ப.,ஆகியோர் உடனிருந்தனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1133

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »