இருசக்கர வாகனத்தை 2 நாளில் தராமல் இழுத்தடித்த ஏஜென்சி: ₹60,000 நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நெல்லை ஜூன் 3: பழுதுபார்க்க ஒப்படைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை இரண்டு நாட்களில் சரிசெய்து தருவதாகக் கூறி 69 நாட்கள் அலைக்கழித்த ஆட்டோ ஏஜென்சி நிறுவனத்திற்கு கூலித் தொழிலாளிக்கு ₹60,000 நஷ்டஈடு மற்றும் வழக்குச் செலவு வழங்க வேண்டும் என்று திருநெல்வேலி கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Consumer Court Orders Agency to Pay ₹60,000 Compensation for Delaying Two-Wheeler Delivery Beyond Promised Date

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, கலியாவூர் காளாங்கரை நடுத்தெருவில் வசிப்பவர் கண்ணன் (53).சுடலைமுத்து என்பவரின் மகனான இவர் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஏழைத் தொழிலாளி ஆவார்.இவர் வசிக்கும் கிராமப் பகுதியில் முறையான பேருந்து வசதிகள் இல்லாததால் தினசரி வேலைக்குச் சென்று வருவதற்கு இருசக்கர வாகனத்தையே முழுமையாக நம்பியிருந்தார்.இதற்காக கடந்த 12.04.2018 அன்று பாளையங்கோட்டை சமாதானபுரம் சங்கர் காலனியில் இயங்கி வரும் விஜய் ஆட்டோ ஏஜென்சி நிறுவனத்தில் ‘ஹீரோ பிளஷர்’ (Hero Pleasure) ரக இருசக்கர வாகனம் (பதிவு எண்: TN 92 B 7053) ஒன்றை வாங்கியிருந்தார்.

இதனிடையே கடந்த 01.08.2025 அன்று கண்ணன் வழக்கம் போல் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது அவரது இருசக்கர வாகனம் நடுவழியில் பழுதாகி நின்றது.இதையடுத்து மறுநாளான 02.08.2025 அன்று வாகனத்தை வாங்கிய பாளையங்கோட்டை விஜய் ஆட்டோ ஏஜென்சி நிறுவனத்தில் பழுது நீக்குவதற்காக அவர் ஒப்படைத்தார்.வாகனத்தைப் பெற்றுக்கொண்ட நிறுவனத்தினர் இரண்டு நாட்களில் பழுதைச் சரிசெய்து தருவதாக கண்ணனிடம் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

Also read : 70 வயது கடந்தவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம்: நெல்லையில் அரசுக்கு கோரிக்கை

ஆனால் குறிப்பிட்ட நாட்களைக் கடந்தும் வாகனம் சரிசெய்து தரப்படவில்லை.இதுகுறித்து கண்ணன் நேரில் சென்று கேட்டபோது உரிய உதிரிப்பாகங்கள் இல்லை என்றும் புதிய பாகங்களுக்கு ஆர்டர் செய்திருப்பதாகவும் கூறி ஏஜென்சி தரப்பில் காலம் கடத்தப்பட்டுள்ளது.அத்துடன் பழுது நீக்குவதற்கான உத்தேச செலவு மதிப்பீட்டுப் பட்டியலைக்கூட (Estimation) வழங்காமல் சுமார் 69 நாட்கள் கண்ணனை அந்த நிறுவனம் அலைக்கழித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

வாகனம் இல்லாததால் கண்ணனால் தொடர்ந்து கூலி வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் தினசரி ₹700 வீதம் 69 நாட்களுக்கு அவருக்கு ₹48,300 வருமான இழப்பு ஏற்பட்டதுடன் கடுமையான மன உளைச்சலுக்கும் அவர் ஆளானார்.ஏஜென்சி நிறுவனத்தின் இந்தச் செயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கண்ணன் இதுகுறித்து வழக்கறிஞர் பிரம்மா மூலமாக திருநெல்வேலி கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நியாயம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை திருநெல்வேலி கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் பிறவிப் பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விரிவாக விசாரித்தது.வழக்கை விசாரித்த ஆணையம் விஜய் ஆட்டோ ஏஜென்சி நிறுவனம் வாடிக்கையாளருக்குச் சேவையாற்றுவதில் குறைபாடு காட்டியுள்ளதையும் முறையற்ற வாணிப நடைமுறையில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டி அதனைக் கண்டித்தது.

விசாரணையின் முடிவில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் சேவை குறைபாடு வாழ்வாதார இழப்பு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகப் பாதிக்கப்பட்ட கண்ணனுக்கு விஜய் ஆட்டோ ஏஜென்சி நிறுவனம் ₹50,000 நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்றும் வழக்குச் செலவுத் தொகையாக ₹10,000 வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.அதேவேளையில் மனுதாரரான கண்ணன் தனது வாகனத்தின் பழுது நீக்கும் கட்டணமான ₹27,008 தொகையைச் சம்பந்தப்பட்ட ஏஜென்சி நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

கண்ணன் பழுது நீக்கும் தொகையைச் செலுத்திய உடனே விஜய் ஆட்டோ ஏஜென்சி நிறுவனம் TN 92 B 7053 பதிவு எண் கொண்ட அவரது வாகனத்தை நல்ல முறையில் ஓடும் நிலைக்குக் கொண்டு வந்து உடனடியாக அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பழுது நீக்கத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையைத் தவிர வேறு எந்தக் கூடுதல் கட்டணமும் கோரக் கூடாது என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த உத்தரவின் முக்கிய அம்சங்களைச் சம்பந்தப்பட்ட ஏஜென்சி நிறுவனம் 45 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் நஷ்டஈட்டுத் தொகையை ஒன்பது சதவீத (9%) வட்டியுடன் சேர்த்து மனுதாரருக்கு வழங்க நேரிடும் என்றும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் தனது தீர்ப்பில் எச்சரித்துள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1133

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »