Karur , June 1: கரூர் குவாரிக்கு எதிரான போராட்டத்தில் விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குவாரி உரிமையாளர் செல்வகுமார் உட்பட 3 பேருக்கு கரூர் மாவட்ட நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கரூர் மாவட்டம் புகழூர் தாலுகா, குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஜெகநாதன். இவரது விவசாயத் தோட்டத்திற்கு அருகாமையில் தனியார் குவாரி ஒன்று இயங்கி வந்தது.இந்த குவாரியின் செயல்பாடுகள் மற்றும் விதிமீறல்கள் காரணமாக ஜெகநாதனின் விவசாய நிலமும் அப்பகுதி சூழலும் பாதிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக குவாரி உரிமையாளரான செல்வகுமாருக்கும் விவசாயி ஜெகநாதனுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே கடுமையான நிலுவைப் பிரச்சினைகளும் எல்லைத் தகராறுகளும் இருந்து வந்தன.சட்டவிரோத குவாரி செயல்பாடுகளுக்கு எதிராக ஜெகநாதன் தொடர்ந்து குரல் எழுப்பி வந்ததே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்தத் தொடர் விரோதத்தின் உச்சகட்டமாக கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதியன்று ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியது.அன்று வழக்கம்போல தனது பணிகளை முடித்துவிட்டுச் சென்ற விவசாயி ஜெகநாதன் மீது குவாரி தரப்பைச் சேர்ந்த வாகனம் ஒன்று மிக அதிவேகமாக ஏறியது.இதில் படுகாயமடைந்த ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்து போல சித்தரிக்க முயன்ற இந்தச் சம்பவம் உண்மையில் திட்டமிட்ட படுகொலை என்பது காவல்துறை விசாரணையில் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வந்தது. குவாரிக்கு எதிராகத் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்த விவசாயியைத் தீர்த்துக்கட்டவே இந்தத் கொடூரச் செயல் அரங்கேற்றப்பட்டது என்பதைப் போலீசார் உறுதி செய்தனர்.
also read: கெட்டுப்போன கேக் விற்ற பிரபல பேக்கரிக்கு ரூ.25,000 அபராதம்: நெல்லை நீதிமன்றம் அதிரடி
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவசாயி கொலை வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய முதன்மைப் புள்ளியான குவாரி உரிமையாளர் செல்வகுமார், வாகனத்தை இயக்கிய ஓட்டுனர் சக்திவேல் மற்றும் இக்கொலைக்கு உடந்தையாக இருந்த ரஞ்சித்குமார் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் பொதுமக்களின் கொந்தளிப்பைக் கருத்தில் கொண்டு போலீசார் தரப்பில் விரிவான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது. சாட்சிகளிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணைகள் மருத்துவ அறிக்கை மற்றும் காவல்துறை சமர்ப்பித்த அசைக்க முடியாத ஆவணங்களின் அடிப்படையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை அண்மையில் நிறைவடைந்தது. இந்த நிலையில் கரூர் நீதிமன்றம் இன்று இந்த வழக்கிற்கான இறுதித் தீர்ப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து முக்கியக் குற்றவாளிகளான குவாரி உரிமையாளர் செல்வகுமார்,ஓட்டுனர் சக்திவேல் மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய மூன்று பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.மேலும் குற்றவாளிகளுக்கு உரிய அபராதத் தொகையும் விதிக்கப்பட்டுள்ளது.விவசாயி ஒருவர் தனது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கப் போராடியதற்காக வாகனம் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த இரட்டை ஆயுள் தண்டனை கரூர் மாவட்ட மக்கள் மற்றும் விவசாய அமைப்புகளிடையே சட்டம் ஒழுங்கு மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.








