தேனி,May 28: சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களைக் கடந்த பின்னரும், அடிப்படைத் தேவையான சாலை வசதி கூட இல்லாததால், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மலைக்கிராம மக்கள் மருத்துவ அவசரத்திற்கு டோலி கட்டி மனிதர்களைத் தூக்கிச் செல்லும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. நேற்று நள்ளிரவில் வயிற்று வலியால் துடித்த வாலிபர் ஒருவரை, கிராம மக்கள் விடிய விடிய 5 மணி நேரம் டோலியில் சுமந்து வந்து மருத்துவமனையில் சேர்த்த நெகிழ்ச்சியான மற்றும் வேதனையான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியாக வெள்ளகெவி ஊராட்சி இருந்தாலும், புவியியல் ரீதியாக இந்த மலைக்கிராம மக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கும், வெளி உலகத் தொடர்பிற்கும் தேனி மாவட்டம் பெரியகுளம் வழியாகத்தான் சென்று வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பெரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன் (26). விவசாய கூலித் தொழிலாளியான இவர், நேற்று வழக்கம்போல் தனது விவசாய வேலைகளை முடித்துவிட்டு, இரவு உணவருந்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.
நள்ளிரவு நேரத்தில் கர்ணனுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலியின் தாக்கம் தாங்க முடியாமல் அவர் அலறித் துடித்துள்ளார். அடர்ந்த காட்டுப் பகுதியும், செங்குத்தான மலைப் பாதையும் கொண்ட அந்த கிராமத்தில், இரவு நேரத்தில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லை. அவசர ஊர்தியான ஆம்புலன்ஸ் கூட வர முடியாத அளவிற்கு சாலை வசதி முற்றிலும் அற்ற நிலையே அங்கு நிலவுகிறது.
also read : ஹவுசிங் போர்டில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8.40 லட்சம் மோசடி: முதியவர் தற்கொலை!!
இளைஞரின் நிலைமையைக் கண்டு பதறிய வெள்ளகெவி கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், உடனே ஒன்று திரண்டனர். மாற்று வழி ஏதும் இல்லாத சூழலில், பாரம்பரியமாகத் தங்களுக்குப் பழகிப்போன ‘டோலி’ (கம்பில் துணியைக் கட்டி தொட்டில் போன்ற அமைப்பு) முறையை கையில் எடுத்தனர். கடுமையான வயிற்று வலியால் சுருண்டு கிடந்த கர்ணனை அந்த டோலியில் கிடத்தி, கிராமத்து இளைஞர்கள் தங்களது தோள்களில் சுமக்கத் தொடங்கினர்.
இருள் சூழ்ந்த, கரடுமுரடான, ஆபத்துகள் நிறைந்த ஒற்றையடிப் பாதையில், டார்ச் லைட் வெளிச்சத்தைக் கொண்டு, ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்தபடி அவர்கள் மலையிலிருந்து கீழே நோக்கி நடக்கத் தொடங்கினர். எந்நேரமும் வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும் அந்தப் பாதையில், இளைஞரின் உயிரைக் காக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ஓய்வின்றி அவர்கள் செங்குத்தான பாதையில் நடந்து வந்தனர்.
மலையடிவாரத்தில் உள்ள ‘உப்புக்காடு’ என்னும் பகுதிக்கு அதிகாலையில் அவர்கள் வந்து சேர்ந்தனர். அங்கிருந்து முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தின் மூலம், வாலிபர் கர்ணன் உடனடியாக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அவசரப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின
ஆண்டாண்டு காலமாக, தலைமுறை தலைமுறையாக இந்த மலைக்கிராம மக்கள் சாலை வசதி கோரி தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். வாக்குச் சேகரிப்பின் போது கொடுக்கப்படும் வாக்குறுதிகள் யாவும், தேர்தல் முடிந்த பின் காற்றோடு போய்விடுவதாக அம்மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தங்களின் அடிப்படை உரிமையான சாலை வசதி இல்லாததால், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவோரை இதுபோன்று டோலி கட்டி தூக்கி வருவது தங்களுக்குத் தொடர்கதையாகிவிட்டது என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கிடையே, நள்ளிரவில் வாலிபரை டோலி கட்டி, அரிக்கேன் விளக்கு மற்றும் டார்ச் லைட் வெளிச்சத்தில் இளைஞர்கள் தூக்கி வரும் நெஞ்சை உலுக்கும் காட்சிகள் நவீன உலகிலும் இன்னும் மாறாத மலைக்கிராமங்களின் துயர நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதுடன், மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இனியாவது போர்க்கால அடிப்படையில் வெள்ளகெவி ஊராட்சிக்குப் போக்குவரத்துச் சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலுக்கச் செய்துள்ளது.













