ஹவுசிங் போர்டில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8.40 லட்சம் மோசடி: முதியவர் தற்கொலை!!

சென்னை, May 28: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் (ஹவுசிங் போர்டு) வீடு வாங்கித் தருவதாகக் கூறி, முதியவர் ஒருவரிடமிருந்து 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், பணத்தை ஏமாற்றிய பெண் மிரட்டல் விடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்டலூரை அடுத்த படப்பை சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (73). இவருடைய மனைவி தங்கமணி (68). விஸ்வநாதன் தனது பணி நிறைவுக்குப் பிறகு, தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்புப் பணியாளராக (செக்யூரிட்டி) வேலை பார்த்து வந்தார். இவருக்குச் சொந்தமாக இருந்த பூர்வீக நிலத்தை அண்மையில் விற்பனை செய்துள்ளார். அந்த நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த தொகையைத் தனது வங்கிக் கணக்கில் அவர் சேமித்து வைத்திருந்தார்.

also read : பெரியகுளம் அருகே கொடூர வயிற்று வலியால் துடித்த வாலிபர் – 5 மணி நேரம் டோலி கட்டி தூக்கி வந்த மலைக்கிராம மக்கள்

இதற்கிடையே, விஸ்வநாதனின் உறவினரான கலைவாணி என்பவர், படப்பை பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் இரண்டு வீடுகளை விஸ்வநாதனுக்கு வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். உறவினர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், வீடு வாங்குவதற்காக முதற்கட்டமாக 7 லட்சம் ரூபாயைக் கலைவாணியிடம் விஸ்வநாதன் கொடுத்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கல் ஒருபுறம் இருக்க, விஸ்வநாதனின் வீட்டிற்கு வந்து சென்ற கலைவாணி, அங்கு வைத்திருந்த விஸ்வநாதனின் ஏடிஎம் கார்டை அவருக்குத் தெரியாமலேயே எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் விஸ்வநாதனுக்குத் தெரியாமல் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயையும் ரகசியமாக எடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வங்கிக் கணக்கைச் சரிபார்த்த விஸ்வநாதன், அதில் இருந்த பணம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக படப்பை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கலைவாணிதான் விஸ்வநாதனின் ஏடிஎம் கார்டைத் திருடிச் சென்று, ரகசியமாகப் பணத்தை எடுத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. அதோடு, வீடு வாங்கித் தருவதாகக் கூறி 7 லட்சம் ரூபாய் வாங்கியதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, விஸ்வநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், கலைவாணியைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துப் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, தான் விஸ்வநாதனிடமிருந்து மொத்தம் 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெற்றதை ஒப்புக்கொண்ட கலைவாணி, அந்தப் பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார். மேலும், பணத்தைத் திருப்பித் தருவதற்குக் கால அவகாசம் தேவைப்படுவதால், ஆறு மாத காலத்திற்குள் முழுத் தொகையையும் கொடுத்துவிடுவதாகப் போலீசார் முன்னிலையிலேயே எழுதிக் கொடுத்துள்ளார்.

காவல் நிலையத்தில் சமரசம் பேசி எழுதிக் கொடுத்த அடுத்த இரண்டு நாட்களிலேயே இந்த விவகாரம் தலைகீழாக மாறியுள்ளது. கலைவாணி, முதியவர் விஸ்வநாதனை நேரில் சந்தித்துப் பணத்தைத் தர முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், காவல் துறையினர் என்னை மிரட்டித்தான் அந்தப் பணத்தைக் கொடுப்பதாக எழுதிக் வாங்கினார்கள் என்று உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பேன் என விஸ்வநாதனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

போலீசார் முன்னிலையில் எழுதிக் கொடுத்துவிட்டு, அடுத்த இரண்டு நாட்களிலேயே பெண் இவ்வாறு மிரட்டல் விடுத்ததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஸ்வநாதன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். வாழ்நாள் சேமிப்பு மற்றும் பூர்வீக நிலத்தை விற்ற பணம் கைவிட்டுப் போன விரக்தியில், கலைவாணி தன்னை ஏமாற்றிய விபரங்களை உருக்கமாக ஒரு கடிதத்தில் எழுதி வைத்துள்ளார். பின்னர், வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த படப்பை காவல்துறையினர், விஸ்வநாதனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்குக் காரணமான கடிதத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்துப் பேசிய விஸ்வநாதனின் மனைவி தங்கமணி, தனது கணவரின் மரணத்திற்கு முழு காரணமான கலைவாணி மீது காவல்துறையினர் கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, தங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் எனக் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார். தலைமறைவாக உள்ள கலைவாணியைப் பிடிப்பதற்கும், இந்த தற்கொலை வழக்கின் பின்னணி குறித்தும் படப்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1043

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »