சென்னை,May 28 : தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் அண்மைகாலமாக விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வரும் நிலையில், அக்கட்சியின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மாநிலச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன் இன்று தவெகவில் இணைகிறார். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்வில், கமலக்கண்ணன் தனது ஆதரவாளர்கள் பெருந்திரளானோருடன் தங்களை தவெகவில் இணைத்துக் கொள்கின்றனர்.

தமிழக அரசியல் வரலாற்றில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகள் மட்டுமே பல தசாப்தங்களாக வலுவான, கட்டமைக்கப்பட்ட தொழிற்சங்கங்களை தங்களின் கீழ் இயக்கி வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களிலேயே மிகப்பெரிய கட்டமைப்பைக் கொண்ட ஒன்றாக அதிமுகவின் ‘அண்ணா தொழிற்சங்கம்’ பார்க்கப்படுகிறது. இத்தொழிற்சங்கத்தில் போக்குவரத்து, டாஸ்மாக், மின்வாரியம் (இபி), என்.எல்.சி உள்ளிட்ட 17 பொதுத்துறை மற்றும் அரசு சார்ந்த பிரிவுகள் இயங்கி வருகின்றன. இதன் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்து வரும் நிலையில், அக்கட்சிக்கான தரைமட்ட கட்டமைப்புகளையும், சார்பு அணிகளையும் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு அரசியல் கட்சிக்கு, குறிப்பாக எதிர்காலத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர இலக்கு நிர்ணயிக்கும் ஒரு பேரியக்கத்திற்கு தொழிற்சங்கம் என்பது மிக அத்தியாவசியமான அங்கமாக கருதப்படுகிறது. கடந்த காலங்களில் திமுக, அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த சமயங்களில், போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம், என்.எல்.சி அல்லது டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்கள் போன்ற நெருக்கடியான சூழல்கள் ஏற்படும்போது, ஆளும் கட்சியின் தொழிற்சங்கத்தினரே தற்காலிகமாக பேருந்துகளை இயக்குவது, கடைகளைத் திறந்து விற்பனையைத் தொடர்வது உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டு அன்றாட மக்கள் வாழ்க்கை பாதிக்கப்படாமல் அரணாக நின்று கை கொடுத்துள்ளனர்.
Also read : அதிமுகவில் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள்: ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை
தற்போது தமிழக வெற்றிக் கழகம் தன்னை ஒரு முதன்மை அரசியல் சக்தியாக நிலைநிறுத்தி வரும் வேளையில், அவர்களுக்கு என்று பிரத்யேகமாக தொழிற்சங்கக் கட்டமைப்பு இல்லாத ஒரு சூழல் நிலவியது. இதனால், இத்தகையதொரு வலுவான அமைப்பை அடிமட்டத்திலிருந்து கட்டமைக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. இந்தச் சூழலில் தான், அண்ணா தொழிற்சங்கத்தின் பேரவைச் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய நீண்ட கள அனுபவம் கொண்ட ஆர். கமலக்கண்ணன் தவெகவில் இணையும் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே கடந்த காலங்களில் சட்டமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ள கமலக்கண்ணனுக்கு, தமிழகம் முழுவதும் உள்ள அரசுத் துறை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பரவலான அறிமுகமும் செல்வாக்கும் உள்ளது.
போக்குவரத்து, மின்வாரியம், என்.எல்.சி, டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அவரது தனிப்பட்ட ஆதரவாளர்கள் எனப் பலரும் கமலக்கண்ணனைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் முன்னாள் அமைச்சரான வெள்ளமண்டி நடராஜன் நேற்று தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக இன்று அதிமுகவின் முக்கிய தூணாகக் கருதப்படும் அண்ணா தொழிற்சங்கத்தின் முக்கிய நிர்வாகியான கமலக்கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்து தங்களை கட்சியில் இணைத்துக் கொள்கின்றனர்.








