மதிய உணவில் நாம் செய்யும் தவறுகள் என்ன? – மருத்துவர் சிவராமன் விளக்கம்

சென்னை , May 27 : நவீன வாழ்வியலில் அதிகரித்து வரும் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகளுக்கு, நமது பாரம்பரிய மதிய உணவு முறையிலிருந்து நாம் விலகிச் சென்றதே முக்கியக் காரணம் என்று பிரபல சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். உணவில் ‘அறுசுவை’ சமநிலை மற்றும் மரபு வழி அரிசி ரகங்களின் அவசியம் குறித்து அவர் விரிவான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

image 542

இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:

தலை தித்திக்கும் ஆசாரக்கோவை: பழங்கள் எப்போது சாப்பிட வேண்டும்?

தமிழர்களின் வாழ்வியல் நெறியான ‘ஆசாரக்கோவை’ நூலில், “தலை தித்திப்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, உணவின் தொடக்கத்தில் இனிப்புச் சுவையை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இதனைத் தவறாகப் புரிந்துகொண்ட பலரும், பிரதான உணவுக்குப் பின் ‘டெசர்ட்’ (Desert) என்ற பெயரில் மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றி, உணவின் இறுதியில் பழங்களைச் சாப்பிடுகிறார்கள். உண்மையில், மதிய உணவின் தொடக்கத்தில் கொய்யா போன்ற இனிப்புச் சுவையுடைய பழங்களைத்தான் முதலில் சாப்பிட வேண்டும். பழங்களைச் சாப்பிட்ட பின்னர், தட்டில் மீதமிருக்கும் இடத்தில்தான் காய்கறி, கீரை மற்றும் சாதத்தைப் பரிமாற வேண்டும்.

நமது அன்றாட உணவில் இனிப்பு மற்றும் உப்பு ஆகிய சுவைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால், உடலுக்கு மிக அத்தியாவசியமான கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகின்றன.

“வாரத்தில் ஏழு நாட்களும் நாம் ஏதோ ஒரு வகையில் உப்பைச் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், எத்தனை நாள் கசப்புச் சுவையை உண்கிறோம்? பல வீடுகளில் பாகற்காய் சமைத்தால் கூட, அதன் கசப்பு தெரியாமல் இருக்க வெல்லமும் எண்ணெயும் அள்ளித் தெளிக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. கசப்புச் சுவை அதன் இயல்போடுதான் உடலுக்குள் செல்ல வேண்டும்.” என மருத்துவர் சிவராமன் சுட்டிக்காட்டினார்.

பாகற்காய் மட்டுமன்றி வெந்தயம், கோவக்காய், கறிவேப்பிலை, சுண்டக்காய் மற்றும் மணத்தக்காளி வற்றல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். தாவரங்களில் உள்ள கசப்புச் சுவையின் (Phyto-pharmaceuticals) மருத்துவக் குணங்களை ஆராய்ந்தபோது, அவை கல்லீரலைப் பாதுகாப்பதிலும், வைரஸ் தொற்றுகளை எதிர்ப்பதிலும், சர்க்கரை நோயைத் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

also read : குறட்டை சாதாரண பிரச்சனை அல்ல .. உயிருக்கு ஆபத்தான நோயின் அறிகுறியா? டாக்டர் கு. கணேசன் கட்டுரை எழுப்பும் அதிர்ச்சி தகவல்கள்

75% காய்கறிகள்; 25% சாதம்

மதிய உணவுத் தட்டில் 75 விழுக்காடு காய்கறிகள், கீரைகள் அல்லது அசைவ உணவுகள் (மீன், கோழி) இருக்க வேண்டும். மீதமுள்ள 25 விழுக்காடு மட்டுமே சாதம் இருக்க வேண்டும். அன்னக் கரண்டிகளால் தட்டு நிறைய வெள்ளைச் சாதத்தைக் கொட்டி, மூச்சு முட்டச் சாப்பிடும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். சாதத்தின் அளவைக் குறைக்க சிறிய கரண்டிகளைப் பயன்படுத்தப் பழக வேண்டும்.

வெள்ளை அரிசி ஆபத்தா? மரபு அரிசிகளின் ரகசியம்

தற்போது நாம் பயன்படுத்தும் பளபளப்பான வெள்ளை அரிசி என்பது வெறும் ‘குளுக்கோஸ் ‘ மட்டுமே. பாலிஷ் செய்யப்பட்ட இந்த அரிசியால் உடலுக்கு எவ்வித நன்மையும் இல்லை. 1700-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது பிரதான உணவாக சிறுதானியங்களும், மரபு வழி அரிசிகளுமே இருந்தன. உலக அளவில் 6,000-க்கும் மேற்பட்ட தானிய ரகங்கள் இருந்த நிலையில், அரசியல் மற்றும் வணிகப் பலத்தின் காரணமாக இன்று வெறும் 8 தானியங்கள் மட்டுமே உலகை ஆட்சி செய்கின்றன.

நமது பாரம்பரிய அரிசி ரகங்களுக்குப் பின்னால் வியக்கத்தக்க மருத்துவக் குணங்கள் உள்ளன:

  • கருப்புக் கவுனி (Forbidden Rice): பழங்காலத்தில் மன்னர்கள் மட்டுமே உண்ணும் அரச ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட இந்த அரிசியில், புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.
  • மாப்பிள்ளைச் சம்பா: இதில் உள்ள ‘லைகோபீன்’ (Lycopene) என்னும் சத்து, ஆண்களுக்கு வயது முதிர்வின் போது ஏற்படும் புரோஸ்டேட் வீக்கம் (Benign Prostate Hypertrophy) மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

எனவே, வாரத்தில் இரண்டு நாட்களாவது மாப்பிள்ளைச் சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் அல்லது தூயமல்லி போன்ற அரிசி உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

உப்பின் அளவு: சிறுநீரகப் பாதிப்புக்குக் காரணம்

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 4 கிராம் அளவு மட்டுமே உப்பைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், இந்தியர்கள் சராசரியாக 8 கிராம் வரை உப்பு உட்கொள்கிறார்கள். ஊறுகாய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாடு தமிழ்நாட்டினரிடையே மிக அதிகமாக உள்ளது. உலகளவில் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் சிறுநீரகப் பாதிப்புகள் (Renal Diseases) தமிழகத்தில்தான் அதிகம் காணப்படுகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் ‘நூறு சிம்மாசனங்கள்’ (அதிசயப் பத்து) கதையை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், உழைப்பின்றி உடலில் உப்பு தேங்குவது நோய்களுக்கு வழிவகுக்கும் என்றார்.

மதிய உணவில் இனிப்பும் உப்பும் மிகக் குறைந்த அளவிலும், புளிப்பும் காரமும் மிதமாகவும் இருக்க வேண்டும். கசப்பும் துவர்ப்பும் தாராளமாக இடம்பெற வேண்டும். இந்த அறுசுவைச் சமநிலையே வருமுன் காக்கும் சிறந்த ஆரோக்கிய வழிமுறை என்று மருத்துவர் சிவராமன் வலியுறுத்தியுள்ளார்

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 983

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »