திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் வரும் புதிய கட்சிகளால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை – சசிகலாவின் புதிய கட்சி குறித்து டிடிவி தினகரன் பேட்டி

image search 1771948695179

திருநெல்வேலி: பிப்ரவரி 24,2026
“திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல புதிய கட்சிகள்”: பதர்களால் பாதிப்பில்லை சசிகலாவை மறைமுகமாக சாடிய டி.டி.வி. தினகரன் அதிரடி பேட்டி!
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சசிகலா புதிய கொடியை அறிமுகப்படுத்தி, விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நெல்லையில் செய்தியாளர்களுக்கு அதிரடியாக பேட்டியளித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், “அம்மாவின் ஆட்சியை அமைப்போம், கட்சியை ஒன்றிணைப்போம் என்று மேடைக்கு மேடை முழங்கியவர்களின் சாயம் இப்போது வெளுக்கத் தொடங்கி விட்டது. 35 ஆண்டுகளாக எனக்குத் தெரிந்த சில நபர்களின் உண்மை சொரூபம் இப்போது தமிழக மக்களுக்குத் தெரிய வந்துள்ளது,” என்று சசிகலாவை மறைமுகமாகச் சாடினார். “விளைச்சல் முடிந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெல்மணிகளை காக்கை, குருவிகள் வந்து கொத்திச் செல்வது போன்றது தான் இது. இதனால் பெரிய சேதாரம் எதுவும் ஏற்படாது. 99.9% தொண்டர்கள் எங்கள் அமமுக அதிமுக பக்கம் இருக்கிறார்கள் . பிரிந்து செல்பவர்கள் வெறும் ‘பதர்கள்’ தான்; அவர்களால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.” “இன்றைய காலகட்டத்தில் திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல பல புதிய கட்சிகள் வரலாம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால், சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடாது. அதுபோல, அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் நின்று மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்பதைத் தடுக்க முடியாது,” என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
ஏற்கனவே 2021 தேர்தலிலேயே பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், சிறு சிறு சிதறல்கள் பெரிய வெற்றியைப் பாதிக்காது என்றும் டிடிவி தினகரன் அதிரடியாக பேட்டியில் தெரிவித்தார்.

முன்னதாக நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தலைமையில், ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய டிடிவி தினகரன்…

image search 1771948656416

தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் சட்டம் – ஒழுங்கு இரும்புக் கரத்துடன் பராமரிக்கப்பட்டதாகவும், ஏழை எளிய மக்களுக்கான எண்ணற்ற நற்பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் தமிழகம் “கஞ்சா மாடல்” அரசாக மாறிவிட்டதாக அவர் கடுமையாக விமர்சித்தார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகவும், தென் மாவட்டங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை மற்றும் கூலிப்படைகளின் அட்டகாசம் பெருகிவிட்டதாகக் குறிப்பிட்ட டி.டி.வி. தினகரன், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாகக் கூறினார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 2021 தேர்தலின் போது திமுக அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அமைச்சர்கள் பலரும் ஊழல் புகார்களில் சிக்கியுள்ளதாகப் பேசினார். குறிப்பாக, நகராட்சி நிர்வாகத் துறையில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும், இது குறித்து அமலாக்கத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சிறுபான்மையினரின் காவலன் என்று கூறிக்கொள்ளும் திமுக, நீண்ட நாட்களாகச் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யவில்லை என்றும், கச்சத்தீவை தாரை வார்த்ததால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்துச் சிறப்பாகச் செயல்படுவதாகவும், பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் புகழாரம் சூட்டினார். தமிழக மக்கள் தற்போது விழிப்புணர்வுடன் இருப்பதாகவும், வரும் காலங்களில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தனது உரையில் டி.டி.வி. தினகரன் குறிப்பிட்டார்.

news desk
news desk
Articles: 94

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »